×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் விநாயகர் சிலை கரைக்க வழிமுறைகள்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான அனுமதி மற்றும் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் குறித்து நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட காவல்துறை எஸ்பி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், திட்ட இயக்குனர் செல்வகுமார் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நமக்கு நீர்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) குடிநீர் ஆதாரத்தை தருகிறது. அவற்றை பாதுகாக்கும் வகையில், வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது, நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஒன்றிய-மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள சர்வதீர்த்த குளம், பொன்னேரி கரை ஆகிய 2 நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

மேலும், களிமண் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (பிஓபி), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலீஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே விநாயகர் சிலைகளை தயாரிக்க, சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு மக்கள் கொண்டாட வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் விநாயகர் சிலை கரைக்க வழிமுறைகள்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Kanchipuram district ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram ,Kanchipuram… ,
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...