×

சாயா நாடி 1

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

சாயா கிரக நாடி என்பது சாயா கிரகங்களான ராகு-கேதுக்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பலன் சொல்லும் முறையாகும். பிரமாண்டமான விஷயங்களை உள்ளடக்கியது சாயா கிரக நாடி. இதைப்பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதலாம். அந்த அளவிற்கு நுணுக்கங்கள் உள்ளன. வட இந்தியாவில் சாயா கிரகங்களை வைத்தே பலன்களை சொல்லிவிடுவர். சாயா கிரகங்களை கணக்கில் கொள்ளாமல் இருந்தால் சில நேரங்களில் பலன்கள் மாறுபடும் அல்லது குழப்பம் உண்டாக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

சாயா கிரகங்கள் தன்மைகள்…

ராகுவிற்கு உடல் இல்லாமல் தலை மட்டும் உள்ளதால் அதிக உடல் தொடர்பான ஆசைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆகவே, ராகு இருக்கும் பாவத்தின் கிடைக்கப் பெறும் பலன்களில் ஜாதகருக்கு எப்பொழுதும் திருப்தி ஏற்படாது என்பது பொதுவான விதி. அதுபோலவே, கேதுவிற்கு தலை என்பது இல்லாமல் உடல் மட்டுமே உள்ளது. ஆகவே, சிந்தனை மற்றும் ஞானத்தின் மீது பற்று இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் எவ்வளவு ஞானம் கிடைத்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள்.

ராகு என்பது சென்ற பிறவியில் நமக்கு நிறைவேறாத ஆசைகளை இந்த பிறவியில் கொண்டு வரும். கேது என்பது சென்ற பிறவியில் நாம் நிறைவேற்றாத கடமைகளை இந்த பிறவியில் கொண்டு வந்து சேர்க்கும் என்பதாகும். சாயா கிரகங்களின் கட்டுக்குள் மற்ற ஏழு கிரகங்கள் அகப்பட்டுவிட்டால் அவை சாயா கிரகங்களின் கர்மாக்களுக்கு ஏற்றவாறுதான் இயங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

சாய கிரகங்களும் காலபுருஷத் தத்துவமும்…

காலபுருஷன் எனச் சொல்லக்கூடிய மேஷ லக்னத்தில் இருந்து மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டு ராசி மண்டலம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றது. அவ்வாறு பிரிக்கப்படும் முதல் மண்டலத்தில் மேஷத்தில் முதல் நட்சத்திரமாக வருவது அஸ்வினியாகும். இரண்டாவது மண்டலம் சிம்மத்தில் உள்ள மகம் நட்சத்திரத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.

மூன்றாவது மண்டலம் தனுசு உள்ள மூலம் நட்சத்திரத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது. இதன் மூலம் திரிகோண பாவங்கள் இயங்குகின்றன. இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் கேதுவின் நட்சத்திரங்களாக உள்ளன. ஆத்மக்காரகனான சூரியன் மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில்தான் உச்சம் அடைகிறார். சாயா கிரகங்கள் என்பவை நிழல்கள் என்று சொல்வதைவிட நிழல் கதிர்கள் என்று சொன்னால் அதுவே சரியானதாகும்.

சாயா கிரகமும் அமாவாசை, பௌர்ணமியும்…

அமாவாசை என்பது இருளை குறிப்பதாகும். இந்த அதிக இருளிற்கு ராகு காரணமாகிறார். இந்த அமாவாசையில் ராகுவின் கதிர்கள் அதிகமாக பூமியில் விழுகின்றது. இக்காரணத்தால் தான் முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் செய்கிறார்கள். பௌர்ணமி என்பது ஒளி மிகுந்ததாக உள்ளது. ராகுவை விட கேது சில சிவந்த ஒளிக் கதிர்களை பெற்றுள்ளதால் பௌர்ணமியில்தான் கேதுவின் கதிர்கள் பூமியில் விழுகின்றது.

அதாவது, பூரணமான சூரிய கிரகணம் ராகுவின் வலிமையையும் பூரணமான சந்திர கிரகணம் கேதுவின் வலிமையையும் குறிக்கும். ராகுவின் வலிமையை கொண்டு வரவே அமாவாசை தினத்தில் ஏவல், மாந்திரீகம் போன்ற வேலைகளைச் செய்கின்றனர். கேதுவிற்கு கர்மா என்பதே கிடையாது. கர்மா அற்ற நிலையே கேதுவாகும். எட்டு விதமான கர்மாக்கள்தான் உண்டு. ஒன்பதாவதாக ஒரு கர்மா இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

சாயா கிரகங்களும் யோகச் சக்கரங்களும்…

நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் ராகு – கேதுவின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. மூலாதார சக்கரம் மூல நட்சத்திரமான கேது கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சக்கரத்திற்குத்தான் விநாயகரை வழிபாடு செய்கின்றோம். சுவாதிஸ்டான சக்கரம் சுவாதி நட்சத்திரமான ராகுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மணிப்பூரச் சக்கரம் மகம் நட்சத்திரமான கேதுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அனாஹதச் சக்கரம் சதய நட்சத்திரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

விசுத்தி, ஆக்ஞய, சகஸ்கரம் போன்ற சக்கரங்கள் தலைப்பகுதியில் உள்ள அஸ்வினி நட்சத்திரத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவ்வாறாக நமது சக்தியானது இறை தரிசனத்தில் முக்தி நோக்கி பயணப்படுவதற்கு இந்த சாயா கிரகங்களான ராகு – கேதுக்களே காரணமாக அமைகின்றது. யோக சாஸ்திரத்தில் யோகிகள் எப்பொழுதும் சில அற்ப ஆசைகளை வேண்டுமென்றே வைத்துக் கொள்வார்கள். அவர்கள் அப்படி வைத்துக் கொள்வதற்கான காரணம் இந்த பூத உடல் பூமியில் சில கடமைகளுக்காக சில காலம் இருக்க வேண்டும் என்பதே.

அந்த கடமைகள் முடிந்த தருணம் தாங்கள் வைத்துக் கொண்ட அற்ப ஆசைகளை விட்டுவிடுவார்கள். ஆசைகளுடன் இந்தப் புவியில் இருந்தால் அது ராகுவை குறிக்கிறது. அற்ப ஆசைகள் அனைத்திலும் ஒரு ஜீவன் விடுபட்ட தருணம் ஆன்மா உடலை விட்டு வெளியேறி விடுகிறது. அந்த ஆசைகளை அற்ற விடுபட்ட ஆன்மாவே பிறப்பற்ற முக்தி நிலையை நோக்கி பயணிக்கிறது. ஆசைகள் விடுபட்ட நிலைதான் கேதுவாக இருக்கின்றது.

சுவாமி விவேகானந்தர் சில காலம் புக்கா பிடிக்கும் அற்ப பழக்கத்தை வைத்திருந்தார். ஏனெனில், இந்த புவியில் ஜீவன் இருப்பதற்காக வைத்துக் கொண்டார். பின்பு, அவருடைய சில குறிக்கோள்களை இந்த பாரதத்திற்காக நிறைவேற்றியவுடன் அதை கைவிட்டார்.

சாயா கிரக நாடி தொடரும்..

The post சாயா நாடி 1 appeared first on Dinakaran.

Tags : Saya Nadi ,Sivaganesan ,Saya Graha Nadi ,Rahu-Ketu ,
× RELATED ருசக யோகம்