![]()
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை என ஆலோசனை கூட்டத்தில் சப் கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். தற்போது சிலைகள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில், இரணியல் அடுத்த கண்ணாட்டுவிளையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. அரை அடி சிலைகள் முதல் சுமார் 7 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
அன்ன பறவை விநாயகர், கற்பக விநாயகர், மாணிக்க விநாயகர், வலம்புரி விநாயகர், தாமரை விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்து முன்னணி சார்பில், சுமார் 5 ஆயிரம் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட உள்ளதாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் கூறி உள்ளார். விநாயகர் சதுர்த்தியையொட்டி 18ம்தேதி பூஜைக்கு வைக்கப்படும் சிலைகள் 22, 23, 24ம் தேதிகளில் நீர் நிலைகளில் கரைக்கப்படும். சிலைகள் கரைப்பையொட்டி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே கரைக்கப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்தி சிலைகளை அலங்கரிக்க கூடாது.
நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் அலங்கரிக்கப்பட பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சியையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தொடங்கி உள்ளது. தக்கலை சப் டிவிஷனுக்கு உட்பட்ட ஆலோசனை கூட்டம் பத்மநாபபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சப் கலெக்டர் கவுசிக் தலைமை வகித்தார். குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன், தாசில்தார்கள் கண்ணன், முருகுன், குமாரவேல், அனிதாகுமாரி, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் சப் கலெக்டர் பேசுகையில், விநாயகர் சிலைகள் கடந்த ஆண்டு பூஜைக்கு வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் அனுமதி பெற்று வைக்க வேண்டும். புதிய இடங்களில் வைக்க கூடாது. விசர்ஜன ஊர்வலம், பூஜைக்கு வைக்கும் இடங்களில் ஒலி பெருக்கிகள் வைக்க போலீஸ் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஊர்வலத்தின் போது ஜேசிபி உள்ளிட்ட பொக்லைன்கள் பயன்படுத்த கூடாது. மேலும் விநாயகர் சிலைகள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள விதிகளின் படி அமைக்க வேண்டும் என்றார்.
The post குமரியில் புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை: ஆலோசனை கூட்டத்தில் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.
