×

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

*13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும், இந்த மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்கள் நேற்று நல்லாசிரியர் விருது பெற்றனர்.முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாள் ஆண்டுேதாறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேற்று ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

அதன்படி, திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்துக்கு, ஏடிஎஸ்பி பழனி, ஆர்டிஓ (பயிற்சி) கலைவாணி, இன்ஸ்பெக்டர் கவிதா, தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்த 396 ஆசிரியர்களுக்கு நேற்று சென்னையில் நடந்த விழாவில், நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்கள் நேற்று நல்லாசிரியர் விருது பெற்றனர்.

அதன்படி, கி.அனிதா, பட்டதாரி ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, துந்தரிகம்பட்டு, ஆரணி ஒன்றியம். க.பழனி, பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சோழவரம், கலசபாக்கம் ஒன்றியம். நா.அனந்தராஜன், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தேசூர், தெள்ளார் ஒன்றியம்.கா.கிரிஜா, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொற்குணம், துரிஞ்சாபுரம் ஒன்றியம். ந.ராஜேந்திரன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, டி.வேலூர், தண்டராம்பட்டு ஒன்றியம். கு.முருகேசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கமலபுத்தூர், துரிஞ்சாபுரம் ஒன்றியம். த.தமிழ்ச்செல்வன், தலைமை ஆசிரியர், சுப்பராய ரெட்டியார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, களம்பூர், போளூர் தாலுகா. பெ.செல்வராஜ், இடைநிலை ஆசிரியர், ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி, வந்தவாசி. கா.ஆனந்தன், உடற்கல்வி இயக்குனர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேசூர்.

சு.பாலாஜி, தொழில் கல்வி ஆசிரியர், சண்முக தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை. ராணி, தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, எடத்தனூர், தண்டராம்பட்டு தாலுகா. ஆ.விநாயகம், பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, அத்திமூர், போளூர் தாலுகா. மா.சுமதி, தலைமையாசிரியர், ரமண மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காவேரியாம்பூண்டி திருவண்ணாமலை ஆகிய 13 பேர் விருதுகளை பெற்றனர்.

செய்யாறு: செய்யாறு தனியார் தொண்டு அமைப்பு சார்பில் செய்யாறு கிரிதரன்பேட்டை நகராட்சி உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின விழா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். இதேபோல், செய்யாறு அடுத்த மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.

வேட்டவலம்: வேட்டவலம் அடுத்த ஜமீன்அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்களுக்கு எழுதுகோல் பரிசாக வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர். மாணவர்களுக்கு தமிழ் அகராதி, எழுது பொருட்கள் மற்றும் இனிப்பை ஆசிரியர்கள் வழங்கினர்.

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அடுத்த தவணி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது. விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி வரவேற்றார்.

விழாவில் முதலாவதாக தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இணைய வழி வகுப்பு தொடங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் திரட்டிய நிதி மூலம் 94 மாணவ, மாணவிகளுக்கு டை, பெல்ட் உள்ளிட்ட பொருட்களை வட்டார கல்வி அலுவலர் வழங்கினார்.பின்னர், தவணி ஏரிக்கரையில் ஜூனியர் ரெட்கிராஸ், சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் 1,001 பனை விதை நடும் விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் பனை விதை நட்டு தொடங்கி வைத்தார். முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவசக்தி நன்றி கூறினார்.

சேத்துப்பட்டு: தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், முன்னாள் தலைமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், உதவி வேளாண்மை அலுவலர் பாபு வாழ்த்துரை வழங்கினர். உதவி தலைமை ஆசிரியர் மேகலா வரவேற்றார்.தலைமை ஆசிரியர் சரவணன் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்து பரிசு பொருட்களை வழங்கினார்.

இதேபோல் சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆசிரியர் தின விழா நடந்தது. விழாவில், 1994-95ம் ஆண்டில் இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். ேமலும், ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கேடயம் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன், உதவி தலைமை ஆசிரியர் பாலாமணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சார்பில் கடந்த ஆண்டு ₹1 லட்சம் செலவில் பள்ளியை தூய்மைப்படுத்தி மின்சாதன பொருட்கள், கரும்பலகைகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர். நடப்பு ஆண்டில் ₹40 ஆயிரம் செலவில் மகளிர் கழிவறை சீரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Teacher's Day ,Tiruvannamalai ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...