×

பாஜ நிர்வாகி கொலை வழக்கு பாளை. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: நெல்லை பொறுப்பு கமிஷனர் அதிரடி

நெல்லை: நெல்லையில் பாஜ நிர்வாகி ஜெகன் கொலை வழக்கில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க உளவுத் துறை, உயர் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தும் மெத்தனம் காட்டியதாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன் (34). நெல்லை மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளரான இவர் கடந்த 30ம் தேதி இரவு மூளிக்குளத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பாளை போலீசார் விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான தொழிலதிபரை கைது செய்யக்கோரி பாஜவினர் ஜெகனின் உடலை 4 நாட்களாக வாங்க மறுத்தனர். தொடர்ந்து தொழிலதிபரும் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ஜெகனின் உடலை பெற்று வெள்ளக்கோயில் மயானத்தில் உறவினர்கள் தகனம் செய்தனர். ஆனால் பாளை. மூளிக்குளத்தில் நடந்து வரும் மோதல்கள் குறித்து உளவுத்துறை ஏற்கனவே பாளை காவல் நிலையத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அருண், தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஆகியோர் கொலை நடப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டனராம்.

ஆனால் இரு தரப்புக்கும் முன்விரோதம் இருப்பது தெரிந்தும் கைது செய்யாமல் இருவரையும் விசாரித்து அனுப்பிய மறுநாளே கொலை நடந்துள்ளது. இதையடுத்து மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் மீது நடவடிக்கை மேற்கொள்ள தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்பேரில் நெல்லை மாநகர கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ்குமார், இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

The post பாஜ நிர்வாகி கொலை வழக்கு பாளை. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: நெல்லை பொறுப்பு கமிஷனர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Nellie ,Nellai ,Jagan ,Palai ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...