×

திருப்பதியில் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு கோடி ‘கோவிந்தா’ நாமம் எழுதி வந்தால் விஐபி தரிசனம்: குடும்பத்துடன் அனுமதி அளிக்கப்படும்

திருமலை: திருப்பதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ‘கோவிந்தா’ நாமத்தை 1 கோடி முறை எழுதி வந்தால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் தலைவர் கருணாகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், அறங்காவலர்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், சங்கர், செயலதிகாரி தர்மா, இணை செயலதிகாரி வீர பிரம்மம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறங்காவலர் குழுத்தலைவர் கருணாகர் கூறியதாவது:
இந்து கலாசார மரபுகளை உலகமயமாக்கல் திட்டத்தின் கீழ் ராம ஜெயம் எழுதுவது போன்று 25 வயதிற்குட்பட்டவர்கள் ‘கோவிந்தா’ நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வந்தால், குடும்பத்தினருடன் விஐபி தரிசனம் செய்து வைக்கப்படும். இதேபோன்று 10 லட்சத்து 1116 முறை ‘கோவிந்தா’ நாமத்தை எழுதி வருபவர்களுக்கு ஒருவருக்கு விஐபி தரிசனம் செய்து வைக்கப்படும்.

இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டு பிரமோற்சவம் புரட்டாசி மாதத்தில் வருகிறது. எனவே, கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்த்து விரைந்து தரிசனம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரமோற்சவத்தின் வாகன சேவைகள் மிகச்சிறப்பாக நடத்தப்படும். கொடியேற்றம் நடைபெறும் வருகிற 18ம் தேதி முதல்வர் ஜெகன்மோகன் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். அன்றைய தினமே 2024ம் ஆண்டுக்கான புதிய காலண்டர் மற்றும் டைரிகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.600 கோடியில் 20 ஆயிரம் பக்தர்கள் தங்க ஓய்வறைகள்
திருப்பதியில் 1952ம் ஆண்டு பக்தர்களுக்காக கட்டப்பட்ட பழமையான 2,3 சத்திரங்கள் இடித்து அந்த இடத்தில் ரூ.600 கோடியில் அதிநவீன வசதிகளுடன் 20 ஆயிரம் பக்தர்கள் தங்கும் விதமாக அச்சுதம், பாதம் என இரண்டு ஓய்வறைகளுடன் கூடிய காம்ப்ளக்ஸ் கட்டப்படும் என அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் தெரிவித்துள்ளார்.

The post திருப்பதியில் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு கோடி ‘கோவிந்தா’ நாமம் எழுதி வந்தால் விஐபி தரிசனம்: குடும்பத்துடன் அனுமதி அளிக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Govinda ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’