×

திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழக தலைவராக சேகர்ரெட்டி நியமனம்

சென்னை: திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழக தலைவராக 3வது முறையாக தொழிலதிபர் சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் ஆலோசனைக்குழு தலவராக 3வது முறையாக தொழில் அதிபர் சேகர்ரெட்டி நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒப்புதலுடன், அறங்காவலர்கள் குழு கூட்டம் நேற்று திருமலையில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் தமிழக தலைவராக சேகர்ரெட்டியை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக தலைவராக நியமிப்பதற்கான உத்தரவை நேற்று சேகர்ரெட்டியிடம், அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி வழங்கினார்.

ஏற்கனவே திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார். தற்போது 3வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திருப்பதி திருமலையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், திருப்பதி திருமலை அறங்காவலர் குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் தலைவராக சேகர்ரெட்டி நியமிக்கப்பட்ட பிறகு கடந்த ஆண்டு ஏழைகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. கோயில் கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

தி.நகரில் தாயார்கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருமலையின் அடிவாரத்தில் ரூ.16 கோடி செலவில் கோமந்திர் கட்டப்பட்டுள்ளது. தினமும் 40 ஆயிரம் பேர் அங்கு தரிசனம் செய்த பின்னர் திருமலைக்கு சென்று தரிசனம் செய்கின்றனர். மேலும் சென்னை தி.நகரில் உள்ள பெருமாள் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு ஏராளமான பணிகளை அவர் செய்துள்ளதால், அவருக்கு 3வது முறையாக தமிழக தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொழிலதிபர் சேகர்ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஏராளமான பணிகளை செய்துள்ளோம். தற்போது புதிய கோயில்கள் கட்டும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம். 30 ஆண்டுகால கனவான தாயார்கோவில் கட்டும் பணிகள் முடிந்துள்ளன. விரைவில் வேலூர், உளுந்தூர் பேட்டையில் பெருமாள் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும். கன்னியாகுமரியில் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள் கட்டும் பணிகளும் தொடங்கப்படும். தமிழகத்தில் திருப்பதி திருமலைக்குழுவுக்கு தேவையான உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். என்னை மீண்டும் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான தமிழக தலைவராக நியமிப்பதற்கான உத்தரவை வழங்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நன்றி’’ என்றார்.

The post திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழக தலைவராக சேகர்ரெட்டி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Sekar Reddy ,Tamil Nadu ,Tirupati Tirumala Devasthanam ,Chennai ,Businessman Shekhar Reddy ,President ,Tirupati ,Tirumala Devasthanam… ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...