பூந்தமல்லி: பூந்தமல்லியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ.3.66 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூந்தமல்லி நகராட்சி நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் நகர் மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல், மழை நீர் கால்வாய் அமைத்தல், தார் சாலை, சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை, மின்விளக்குகள் அமைத்தல், நகராட்சி அலுவலக கட்டிட பராமரிப்பு பணிகள், டெங்கு தடுப்பு நடவடிக்கை, சீரான குடிநீர் விநியோகம், மழை நீர் கால்வாய் புதுப்பித்தல், குளம் குட்டைகள் தூர்வாருதல், கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு, ஆழ்துளை குழாய் கிணறு, மின் மோட்டார் அமைத்தல், நகராட்சி அலுவலகத்தில் புதிதாக கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள் வாங்குதல், துப்புரவு வாகனங்கள் பராமரித்தல், சுகாதார பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ரூ.3.66 கோடி மதிப்பில் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கலந்து கொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள் அவர்களது வார்டு பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். நகர் மன்ற உறுப்பினர்களின் குறைகள், அவர்களது கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று நகர்மன்ற தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பூந்தமல்லியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ.3.66 கோடி மதிப்பில் திட்ட பணிகள்: நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.
