×

அனைத்து சங்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல் இணையதளத்தை பயன்படுத்தி விவசாயிகள் மண்வள அட்டையை பெறலாம்

பெரம்பலூர்,செப்.4: விவசாயிகள் தங்கள் பெயருடன் மண்வள அட்டையைப் பெரும் வகையில், தமிழ் மண் வளம் என்கிற இணையதளம், தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கீதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் மண்வளம் என்கிற இணையதளம் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையினால் உருவாக்கப்பட்டு, கடந்த ஜூன் 28ம் தேதி, தமிழக முதல்வரால் விவசாயிகள் பயன்பெற வெளியிடப்பட்டது. இந்த வலைதளம், புல எண் வாரியாக மண்ணின் ஊட்டச்சத்து நிலை, அதற்கு ஏற்ப உரப் பரிந்துரை, மண்ணிற்கு ஏற்ற வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மரப்பயிர்கள் பரிந்துரை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 2015-16 ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மண் பரிசோதனை ஆய்வு முடிவுகளின் தரவுகளை தொகுத்து, புல எண் வாரியாக, விவசாயிகள் தங்கள் பெயருடன் மண்வள அட்டையினை விவசாயிகள் தாங்களாகவே பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கணினி அல்லது கைபேசி மூலமாக http://tnagriculture.in/mannvalam என்ற இணையதள முகவரியில் அல்லது உழவன் செயலியில் தமிழ் மண்வளம் என்ற ஐகான் மூலமாக இந்த இணையத்தை அணுகலாம். இந்த இணையதளத்தில் விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம் மற்றும் புல எண், உட்பிரிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்தால், மண்வளம் குறித்து அனைத்து விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மண்வள அட்டை மின்னணு வடிவில் கிடைக்கும்.

மேலும் மண்ணின் தன்மை, நிலத்தடி நீரின் வகைப்பாடு, கார அமில நிலை, அங்கக கரிமம், சுண்ணாம்பு தன்மை போன்ற வேதியல் குணங்கள் பற்றிய விவரங்களும், தழைச்சத்து, மணி சத்து, சாம்பல் சத்து, கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், போரான், தாமிரம் போன்ற சத்துக்களின் விபரங்களும், எவ்வகை பயிர்கள் சாகுபடி செய்யலாம், தேர்ந்தெடுக்கும் பயிருக்கு எவ்வளவு உரம் இட வேண்டும் போன்ற பரிந்துரைகளும் தெரிந்து கொள்ளலாம்.
எனவே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மண் வள இணையதளத்தை பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப உரமிட்டு, உர செலவினை குறைத்து மண் வளத்தைப் பாதுகாத்திடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அனைத்து சங்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல் இணையதளத்தை பயன்படுத்தி விவசாயிகள் மண்வள அட்டையை பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tamil Man Valam ,Tamil Nadu government ,
× RELATED பெரம்பலூர் நகராட்சியில்...