×

இந்தியாவில் முதல்முறையாக 3 மதங்கள் சங்கமிக்கும் நாகூரில் ‘நெய்தல் பூங்கா’: புத்தூயிர் பெறும் சில்லடி கடற்கரை

வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக நாகூருக்கு, அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். அந்த அளவிற்கு புகழ் பெற்ற நாகூரில், மீனவர்களின் வாழ்க்கை முறையை மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ரூ.8 கோடியை ஒதுக்கீடு செய்து நெய்தல் பூங்காவை அமைக்க கடந்த 2022 ஜனவரி மாதம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். பண்டைய தமிழர்கள் நிலத்தை 5 வகையாக பிரித்து இருந்தனர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பது ஆகும். இதில், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலம் ஆகும்.

இவ்வாறு கடலும், கடல் சார்ந்த நிலத்தில் வசிக்கும் மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் கருவிகள் உள்ளிட்டவைகளை நாகூர் தர்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாகூரில் 7.56 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து நெய்தல் நில மக்களின் வாழ்க்கை முறை, உணவு, தொழில், காலநிலை, நெய்தல் நிலத்தில் விளையும் தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றை தத்ரூபமாக வடிவமைப்பு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து கன்சியூமர் கேர் கிளப் ஆப் இந்தியா மாநில பொருளாளர் நாகூர் சித்திக் கூறுகையில், ‘நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் ஷாகுல்ஹமீது காதீர்வலி, நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வந்த போது நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் 40 நாட்கள் தவம் இருந்தார். அவ்வாறு தவம் இருந்தபோது, அங்கு வந்த கப்பல் கடலில் மூழ்கும் நிலையில் இருந்தது. இதை பார்த்த நாகூர் ஆண்டவர், தனது தவவலிமையால் அந்த கப்பலை மூழ்காமல் காப்பாற்றினார். இதனால் நாகூர் தர்காவிற்கு ஆண்டவரை தரிசனம் செய்ய வருவோர் நாகூர் சில்லடி தர்கா வந்து செல்லாமல் திரும்பமாட்டார்கள்.

சில்லடி தர்காவை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதை தமிழ்நாடு முதல்வர் ஏற்று, தோட்டக்கலை துறை நிதிஉதவியுடன் ரூ.8 கோடி மதிப்பில் நெய்தல் பூங்கா அமைக்க கடந்த 2022 ஜனவரி மாதம் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தோட்டக்கலை துறை சார்பில் நெய்தல் நிலத்தின் புகழ் பரப்பும் வகையில் புன்னை மரம், மாமரம், பலாமரம், தென்னை மரம் என மர வகைகளும், தாவர வகைகளும் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்படவுள்ளது. மீனவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கண்காட்சிகளும் அமைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் அதுவும் 3 மதங்கள் சங்கமிக்கும் நாகூரில் அமைவது பெருமையாக உள்ளது’ என்றார். சமூக ஆர்வலர் பாலமுரளி கூறுகையில், ‘நாகப்பட்டினத்தில் சோழர்களின் பெருமையை விளக்கும் சூடாமணி விஹாரம் அமைந்துள்ளது. நெற்களஞ்சியமான தஞ்சாவூரை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்த ராஜராஜசோழன், நாகப்பட்டினத்தை மையமாக வைத்து தான் இலங்கை, ஜாவா, சுமத்திரா போன்ற அயல்நாடுகளை கடல் மூலம் சென்று வெற்றி பெற்றார். ராஜராஜசோழன், கப்பற்படையை அமைத்து வெளிநாடுகளை கைப்பற்றி தமிழர்களின் பெருமையை பரப்பினார்.

நாகூரில் நெய்தல் பூங்கா என்பது மீனவர்களின் பெருமையை மட்டும் அனைவரும் அறிய செய்வது இல்லை. தமிழர்களின் பண்டைய பெருமையை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு ரூ.8 கோடி மதிப்பில் தோட்டக்கலை துறை உதவியுடன் நெய்தல் பூங்கா அமையவுள்ளது. பூங்கா அமைவதற்கு முன் நாகூர் சில்லடி கடற்கரையை மேம்படுத்தினால் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சில்லடி தர்காவிற்கு வழிபாடு நடத்த வருவோர் அங்குள்ள கடற்கரையில் குளித்து தர்காவில் வழிபாடு செய்வார்கள். இதனால் பொழிவு இழந்த நாகூர் சில்லடி கடற்கரை மீண்டும் சுற்றுலா பயணிகளை தன்வசம் ஈர்க்கும். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருவாய் அதிகரிக்கும்’ என்றார்.

The post இந்தியாவில் முதல்முறையாக 3 மதங்கள் சங்கமிக்கும் நாகூரில் ‘நெய்தல் பூங்கா’: புத்தூயிர் பெறும் சில்லடி கடற்கரை appeared first on Dinakaran.

Tags : Weaving Park ,Nagore ,India ,Chilladi beach ,Velankanni ,Weaving ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!