×

அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காக 10 மணிமண்டபங்கள்: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மும்முரம்

* சிறப்பு செய்தி
போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அடிப்படை வசதிகளுடன் தயார் செய்து வருகிறது. தமிழகத்தில் பத்தாண்டுகளுக்கு பின்பாக திமுக ஆட்சியை பிடித்தது. கொரோனாவும், பேரிழப்புகளும், ஊரடங்கும் அமலில் இருந்த காலம் அது. மெல்ல மெல்ல நாம் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலும், முந்தைய ஊரடங்கினால் ஏற்பட்ட வரி இழப்புகள், மக்களின் பொருளாதார இழப்புகள் அரசின் முன்பாக இமயமலையாக நின்றன. அதேநேரம் மாநிலத்தின் நிதிநிலையும் சொல்லத்தக்க நிலையில் இருக்கவில்லை.

இதையெல்லாம் தாண்டி, சித்தாந்த ரீதியில் எதிர் நிலையில் இருக்கும் ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைக்குமென்று தெரியாத நிலை இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ஆறு ஆண்டுகள் கடந்தன. அதே நேரத்தில் ஓராண்டு கால ஆட்சியில் என்ன செய்தீர்கள் என ஏளன பேச்சுக்களை எதிர்கட்சிகள் அடுக்கடுக்காக கேட்டுக்கொண்டே சென்றன. பதவியேற்றவுடன் ஆவின் பாலின் விலையை லிட்டர் ஒன்று மூன்று ரூபாய் குறைத்தது, பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக இரண்டாயிரம் ரூபாய் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் சட்டமன்ற மானியக்கோரிக்கையில் அனைத்து துறைகளிலும் அறிவித்த பல்வேறு அறிவிப்புகளை செயல்படுத்தி வருகிறது. போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் என அனைத்திலும் அறிவித்த அறிவிப்புகளை காலம் தாழ்த்தாமல் செயல்படுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகவே படிப்பார்கள், அப்போதுதான் தனக்கு தெரியாத ஒன்றை மற்றொருவரிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம் என நினைப்பார்கள். இதுபோன்ற மாணவர்கள் பெரும்பாலும் மண்டபங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களை படிக்க தேர்வு செய்வார்கள். என்னதான் படிப்பில் கவனம் செலுத்தினாலும் அந்த இடங்கள் பொது இடமாக செயல்படுவதால் தொந்தரவுகள் பல இருக்கும். எனவே செய்தி தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணிமண்டபங்களில் முதற்கட்டமாக 10 மணிமண்டபங்களை போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தி தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையை பொறுத்தவரையில் பெரிய நூலகங்கள் மாணவர்களுக்காக உள்ளன. அங்கு சென்று மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராவார்கள். ஆனால் மற்ற மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு இதுபோன்ற அடிப்படை வசதிகள் கொண்ட நூலகங்களும், மண்டபங்களும் இல்லை. எனவே திருநெல்வேலி, கடலூர், தஞ்சாவூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் அறிஞர்கள், முக்கிய தலைவர்களின் மணிமண்டபங்கள், நினைவகங்கள், அரங்கங்கள் ஆகியவற்றில் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒளிப்பட தொகுப்புகளும், அந்த தலைவர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

அந்த தலைவர்கள் பற்றிய குறும்படங்களும் முதற்கட்டமாக 15 இடங்களில் எல்.இ.டி கொண்டு திரையிடப்படவும் உள்ளது. ஒரு விசயத்தை படித்து தெரிந்துகொள்வதை விட திரையில் பார்த்தால் மாணவர்களுக்கு எளிதாக மனதில் பதியும். எனவே இந்த முயற்சிகள் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு பல வீரர்கள் மற்றும் பெருந்தலைவர்களின் வரலாறுகளை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். மேற்கண்ட அறிவிப்புகள் பலவும் தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 2023-24ம் ஆண்டு மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட கோரிக்கையில் 47% பணிகள் நடந்துகொண்டிருக்கிறது எனவும், மீதம் உள்ள அறிவிப்புகளும் அரசாணை வெளிவந்தவுடன் பணிகள் தொடங்கப்படும் எனவும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மணிமண்டபங்களில் புகைப்படக் கண்காட்சி மற்றும் ஒலி, ஒளிக்காட்சிகள்
* தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் – தர்மபுரி மாவட்டம்
* திருப்பூர் குமரன் நினைவகம் – திருப்பூர் மாவட்டம்
* வீரமங்கை வேலுநாச்சியார் மணிமண்டபம் – சிவகங்கை மாவட்டம்
* மகாகவி பாரதியார் மணிமண்டபம் – தூத்துக்குடி மாவட்டம்
* ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் – கடலூர் மாவட்டம்
* காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபம் – விருதுநகர் மாவட்டம்

* தலைவர்கள், தியாகிகளின் சிலைஅமைக்கும் பணி
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகம், கோட்டூர்புரம் நுழைவாயிலில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு உருவச்சிலை
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழறிஞர் மு.வரதராசனாருக்கு சிலை

போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிப்பதற்காக அடிப்படை வசதிகளுடன் தயாராகும் 10 மணிமண்டபங்கள்
* தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் – தர்மபுரி
* மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் மணிமண்டபம் – மதுரை
* தமிழிசை மூவர் மணிமண்டபம் – மயிலாடுதுறை
* பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் மணிமண்டபம் – தஞ்சாவூர்
* தமிழ் தாத்தா உ.வே.சா. நினைவு மண்டபம் – திருவாரூர்
* மகாகவி பாரதியார் மணிமண்டபம் – தூத்துக்குடி
* கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. மணிமண்டபம் – திருநெல்வேலி
* ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் – கடலூர்
* உடுமலை நாராயணகவி மண்டபம் – திருப்பூர்
* சுவாமி சகஜானந்தன் மணிமண்டபம் – கடலூர்.

The post அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காக 10 மணிமண்டபங்கள்: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...