×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாத தரம் உயர்த்தப்படும்: தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ‘டயல் யுவர்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மாரெட்டி பதிலளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:வைகுண்ட ஏகாதசி நாட்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் டிசம்பர் மாத தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டுடன் ஆன்லைனில் வெளியிடப்படும். அலிபிரி நடைபாதையில் சிறுத்தைகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடைபாதை காப்புக்காட்டில் உள்ளது. வனப்பகுதியில் கட்டிடங்கள் கட்ட வனத்துறை அனுமதி வழங்க வேண்டும்.

வனத்துறையின் உத்தரவுப்படி தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்கும். திருமலையில் இலவச பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். முழங்கால் வலியால் அவதிப்படுபவர்கள் உரிய சான்றிதழுடன் வந்தால் கோயில் அருகே உள்ள பயோமெட்ரிக் நுழைவு மூலம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி என்று தெரியாதவர்கள் திருப்பதியில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்களை பெறலாம். அதேபோல், வைகுண்டம் வரிசை வளாகம் வழியாக நேரடியாக சென்று சுவாமியை தரிசிக்கலாம். 40 ஆண்டுகளுக்கு முன் குறைந்த எண்ணிக்கையில் லட்டுகள் தயாரிக்கப்பட்டன. இப்போது ஒரு நாளைக்கு 5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. அதன் தரத்தை மேம்படுத்த முயற்சித்து வருகிறோம். விரைவில் மேலும் தரமான லட்டுகளை பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.3.62 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 67,193 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.28,750 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.62 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 22 அறைகள் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 14 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாத தரம் உயர்த்தப்படும்: தேவஸ்தானம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Lattu Prasad ,Tirupati Eyumalayan temple ,Tirumala ,Annamayya Bhavan ,Tirupati ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!