கோவை, ஆக. 31: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தயம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தது. கோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த வீடுகளை ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மனோஜ் முனியன் தலைமையில் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினார். அப்போது சில வீட்டில் பிற பகுதிகளும் சேதமடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து தனி தாசில்தார் மனோஜ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்து வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். துணை தலைவர் சையத உசேன் வரவேற்றார். இந்த போராட்டத்தில் ஏராளமான வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தனி தாசில்தாரை உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்டத்தில் மொத்தம் 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர்.
The post கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.
