வேலூர்: வேலூரில் அகற்றும்படி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதும் சதுர அடி ரூ.4000 ஆயிரம் வரை விலை நிர்ணயித்து விற்பனை செய்ய முயன்ற 32 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மாநில நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடியாக இடித்து அகற்றினர். வேலூர் மாநகரில் மாநில, தேசிய நெடுஞ்சாலைத்தவிர மாநகராட்சி சாலைகளிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் என்பதற்கு இதுவரை சரியான தீர்வு காணப்படவில்லை. வேலூர்-ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறை தொடங்கி சத்துவாச்சாரி வரை மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோரப்பகுதிகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமித்து வீடுகள், வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். மேலும் உள்வாடகைக்கு விட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்த முறையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு நெடுஞ்சாலையில் 32 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இவை அனைத்தும் வணிக வளாகங்களாக பயன்பாட்டில் இருந்து வந்ததும் தெரியவந்தது. எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறையும், வருவாய்த்துறையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு காலஅவகாசம் வழங்கி சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கின. ஆனாலும் ஆக்கிரமிப்புகளை யாரும் அகற்றவில்லை. ஒரு கும்பல் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை சதுர அடி ரூ.4000 வரை விலை நிர்ணயித்து விற்பனை செய்ய முயன்றுள்ளனர். இதற்காக ‘பேரம் எதுவும் கிடையாது. உடனடியாக வாங்குபவர்கள் அணுகலாம்’ என அறிவிப்பு பலகையும் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் நேற்று காலை 7 மணியளவில் வேலூர் தாசில்தார் செந்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை மண்டல உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேலூர் காகிதப்பட்டறைக்கு வந்தனர். பின்னர், ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் உள்ளவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதுடன், பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் தங்களை இங்கிருந்து வெளியேற்றக்கூடாது என்று கூறி கண்ணீர் விட்டு கதறினர்.
ஆனால் போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதை பார்த்து மற்றவர்கள் தங்கள் கட்டிடங்களில் உள்ள பொருட்களை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இதைத்தொடர்ந்து 2 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு 32 கட்டிடங்களை இடிக்கும் பணி காலை 9 மணியளவில் தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் கூடுதலாக பெரிய பொக்லைன் இயந்திரம் உட்பட 5 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்தது. மாலையுடன் நிறுத்தப்பட்ட இடிக்கும் பணி இன்று 2வது நாளாக தொடர உள்ளது.
The post காலி செய்ய கூறி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கிய நிலையில் அரசு நிலத்தை சதுர அடி ரூ.4000க்கு விற்க முயன்ற ஆக்கிரமிப்பாளர்கள்; 32 கட்டிடங்கள் இடிப்பு: நெடுஞ்சாலைத்துறை அதிரடி appeared first on Dinakaran.
