×

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து, தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து, தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கபட்டுள்ளது. இரு அணைகளில் இருந்து, நேற்று 4,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர் வெளியேற்றத்தின் அளவு 6,300 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநில அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர். ஆனால் கர்நாடகா மாநில அதிகாரிகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டனர். இதையடுத்து கூட்டத்தில், தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரை பாதுகாக்க விநாடிக்கு 24ஆயிரம் கன அடி தண்ணீர் என கணக்கிட்டு அடுத்த பத்து நாட்களுக்கு தொடர்ந்து காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் கடந்த இரு மாதங்களில் வழங்க வேண்டிய நீரில் நிலுவையில் இருக்கும் 45.05டி.எம்.சி தண்ணீரையும் உடனடியாக திறந்து விட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா அரசு அதிகாரிகள், கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் நீர் தேக்கங்களில் தற்போது போதிய தண்ணீர் கிடையாது. மாநிலத்திலும் பருவ மழை வழக்கத்தைவிட 47% குறைவாக பெய்துள்ளது. அதனால் மாநிலத்தில் இருக்கும் நான்கு காவிரி அணைகளும் போதிய அளவில் நிரம்பவில்லை. இதுபோன்ற சூழலில் தமிழ்நாடு கேட்கும் நீரை காவிரியில் இருந்து கொடுத்தால் கர்நாடகாவில் குடிநீருக்கே பிரச்சனை ஏற்படும் என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும் தங்களது தரப்பு கோரிக்கைகளை காவிரி ஆணையத்தின் முன்னிலையில் வைத்தனர். இதையடுத்து அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் பங்கீடு விவகரத்தில் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை ஏற்கப்படுகிறது. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5000 கன அடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா மாநிலம் காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 4.293 கனஅடியில் இருந்து 6,398 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 4,393 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் தொடர்ந்து 4-வது நாளாக 2,000 கனஅடியாக உள்ளது.

The post கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து, தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Tamil Nadu ,Kabini ,Bengaluru ,K. ,Kabini dams ,Dinakaran ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...