×

திருவட்டார் அருகே சோகம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு

குலசேகரம், ஆக.30: திருவட்டார் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை தீ வைத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பூவன்கோடு புத்தன்வீட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (45). சென்ட்ரிங் கான்ட்ராக்டர். இவரது மனைவி ஷீபா (40). இந்த தம்பதிக்கு கெபின் (15), கிஷான் (7) என்று 2 மகன்கள் உண்டு. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். அதேபோல் 2 மகன்களுக்கும் பக்கவாத நோய் தாக்கியதால் காலில் சிறிய குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 சிறுவர்களும் நடக்கும்போது காலை சற்று சாய்த்தவாறு செல்வர்.

இதனால் 2 மகன்களுக்கும் மருத்துவம் பார்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஏசுதாஸ் மற்றும் ஷீபா ஆகியோர் அடிக்கடி ஆலோசனை மேற்கொள்வார்கள். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் காலை முதலே ஏசுதாஸ், ஷீபா இடையே கடுமையான தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோபமடைந்த ஏசுதாஸ் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து ஏசுதாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் 2 மகன்களுடன் மனைவி உள்பக்கமாக தாழ்ப்பாழ் போட்டுக்கொண்டு இருந்து உள்ளார். ஏசுதாஸ் பலமுறை கதவை தட்டியும், கடும் கோபத்தில் இருந்த ஷீபா கதவை திறக்கவில்லை. இதனால் நொந்து போன ஏசுதாஸ் வேறுவழியின்றி அதே பகுதியில் சுற்றித்திரிந்து உள்ளார். இரவு நேரத்திலும் ஷீபா கதவை திறக்காததால் ஏசுதாசால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. இதனை அக்கம்பக்கத்தினரும் பார்த்து உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திடீரென்று அவர்கள் வீட்டில் இருந்து காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று அலறல் சத்தம் கேட்டு உள்ளது. வீட்டில் இருந்து கரும்புகையும் வெளியேறிக்கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் தீயில் கருகி துடித்துக்கொண்டிருந்தனர்.
இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த திருவட்டார் போலீசார் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே ஷீபாவின் இளைய மகன் கிஷான் பரிதாபமாக இறந்தான். அடுத்த சில நிமிடங்களில் ஷீபாவும் இறந்து போனார். கெபின் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கெபினும் பரிதாபமாக உயிரிழந்தார். குடும்ப தகராறில் 2 மகன்களை தீவைத்து கொன்றுவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்தது எப்படி?
போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குள் சென்று தடயங்களை ஆராய்ந்தபோது அங்கே பாதி கருகிய நிலையில் மண்ணெண்ணெய் கேன் ஒன்று இருந்தது. அதிகாலையில் எழுந்த ஷீபா தூங்கிக்கொண்டிருந்த 2 மகன்கள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார். இதையடுத்து ஷீபா தனது உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

வீதி வீதியாக தேடினர்
சம்பவ இடத்துக்கு சென்ற உடனே போலீசார் ஷீபாவின் கணவர் ஏசுதாசை தேடினர். ஆனால் அவர் குடும்ப தகராறில் வெளியே சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறியதன்பேரில், வீதி வீதியாக போலீசார் அவரை தேடினர். அப்போது வேர்க்கிளம்பி பகுதியில் பூட்டப்பட்டிருந்த கடையின் முன்பு இரவு முழுவதும் படுத்திருந்த ஏசுதாஸ் அங்கேயே தூங்கிகொண்டிருந்ததை கண்டனர். உடனே அவரிடம் போலீசார் நடந்த சம்பவத்தை கூறியதும் அதிர்ச்சி அடைந்தார். ஐயோ…. என் மனைவியையும், என் பிள்ளைகளையும் பார்க்க வேண்டும் என்று பதறியடித்து கொண்டு ஏசுதாஸ் ஓடினார்.

The post திருவட்டார் அருகே சோகம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு appeared first on Dinakaran.

Tags : Tiruvattar ,Kulasekaram ,Thiruvattar ,
× RELATED திருவட்டார் அருகே குட்கா விற்ற கடைக்கு சீல்