×

இரண்டாண்டில் 2ம் இடம்

28 மாநிலங்கள், ஒரு தேசிய தலைநகரப் பகுதி உட்பட 8 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது இந்தியா. 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் தமிழ்நாடு 2வது பெரிய பொருளாதார மாநிலமாக உருவெடுத்துள்ளது.
24 மணி நேரமும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதை மந்திரமாக ஏற்றுக் கொண்டு 2021ல் ஆட்சியை பிடித்தார் மு.க.ஸ்டாலின். அவர் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட 27 மாதங்களில் தமிழ்நாட்டை உண்மையாகவே தலை நிமிர வைத்துள்ளார். நாட்டின் 2வது பெரிய பொருளாதார மாநிலம் என்ற இலக்கை தமிழ்நாடு எட்டியிருக்கிறது என்றால் அதற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் அசராத உழைப்பேயாகும்.

ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயணம், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம், கல்லூரி கனவு, புதுமைப்பெண் திட்டம் என தனது தந்தையும், முன்னாள் முதல்வருமான கலைஞர் பாணியில் கடந்த இரண்டரை கால ஆட்சியில் புதுப்புது திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு நாட்டிற்கும், மாநிலத்திற்கும் ஜிடிபி என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி தான் அடிப்படை. அதை வைத்து தான் ‘பெர் கேபிட்டா’ எனப்படும் தனி நபர் வருமானம் கணக்கிடப்படுகிறது.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு ரூ.23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.7 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 557 ஆகும். ஆனால் இந்த ஆண்டு தனி நபர் வருமானம் ரூ.ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 727 ஆக உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்திய நாட்டின் தனி நபர் வருமானம் நடப்பு ஆண்டில் லட்சத்திற்கு கீழ் தான். அதாவது 98 ஆயிரத்து 374 ஆகும். கோவிட் தொற்று காரணமாக உலகமே பொருளாதார சரிவை சந்தித்தது. இந்த பொருளாதார சரிவில் இருந்து இன்னும் பல நாடுகள் மீளவில்லை.

குட்டி நாடான இலங்கையில் கூட பொருளாதார வீழ்ச்சி ஆட்சியாளர்களை புரட்டிப் போட்டது. ஆனால், 2021ல் கோவிட் தொற்று நேரத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த தொற்றில் இருந்து மாநில மக்களை காப்பதை முதல் கடமையாக எடுத்துக் கொண்டார். ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே தனது அமைச்சரவை சகாக்களை மாவட்டங்களுக்கு முடுக்கி விட்டு கோவிட் தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தார். அடுத்து தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தொழில் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தார். தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம், மின்னணு ஏற்றுமதியில் முன்னணி மாநிலம் என பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாட்டிலேயே 2வது மாநிலம் என்ற பெயர் பெறும் அளவிற்கு தலை நிமிரச் செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றால் அது மிகையில்லை.

The post இரண்டாண்டில் 2ம் இடம் appeared first on Dinakaran.

Tags : India ,Territories ,Capital Region ,
× RELATED நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில்...