×

மதுரை ரயில்பெட்டி தீ விபத்தில் இறந்த 9 பேரின் சடலங்கள் ஆம்புலன்சில் சென்னை வருகை: விமானத்தில் லக்வுக்கு அனுப்பிவைப்பு

மீனம்பாக்கம்: மதுரை ரயில்நிலையம் அருகே நேற்று அதிகாலை ஒரு சுற்றுலா ரயில்பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 9 பேரின் சடலங்கள் இன்று காலை மதுரையில் இருந்து 3 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை வந்து சேர்ந்தன. பின்னர் அந்த 9 சடலங்களும் இன்று மதியம் லக்னோ செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

மதுரை ரயில்நிலையம் அருகே நேற்று அதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் கொழுந்துவிட்டு எரிந்தது. இவ்விபத்தில், அந்த ரயில் பெட்டியில் இருந்த உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகிவிட்டனர். பின்னர் அந்த 9 பேரின் சடலங்களுக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அந்த சடலங்கள் பதப்படுத்தப்பட்டு, நேற்றிரவு 3 ஆம்புலன்ஸ்கள் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 9 பேரின் சடலங்களை ஏற்றி வந்த 3 ஆம்புலன்ஸ்களும் இன்று காலை 8 மணியளவில் சென்னை பழைய விமானநிலையத்தின் கார்கோ பிரிவுக்கு வந்து சேர்ந்தன. பின்னர் அந்த 9 சடலங்களும் கார்கோ பிரிவு அருகே உள்ள இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன கார்கோ பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 9 சடலங்களுக்கும் முறைப்படி நடைமுறைகள் நடந்தன. பின்னர் ஒரே விமானத்தில் 9 சடலங்களும் அனுப்பி வைக்க முடியாது என்பதால் காலை 11.30 மணியளவில் பெங்களூரு வழியாக லக்னோ செல்லும் விமானத்தில் 4 சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மதியம் 12.05 மணியளவில் 5 சடலங்கள் லக்னோ அனுப்பி வைக்கப்பட்டன.

இதே விமானத்தில் தீ விபத்தில் லேசான காயம் அடைந்த 14 பேரும் லக்னோ அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்களுடன் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் உடன் செல்கின்றனர். பின்னர் அந்த 9 சடலங்களையும் லக்னோவில் உ.பி மாநில அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post மதுரை ரயில்பெட்டி தீ விபத்தில் இறந்த 9 பேரின் சடலங்கள் ஆம்புலன்சில் சென்னை வருகை: விமானத்தில் லக்வுக்கு அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Railbox fire crash ,Chennai ,Lakhu ,Meenambakkam ,Madurai railway station, Uttar Pradesh ,Luke ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...