×

தியாகதுருகம் அருகே பரபரப்பு வீட்டில் புகுந்து திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

 

தியாகதுருகம், ஆக. 27: வீட்டில் புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பழனி (67). நேற்று முன்தினம் இவரது மனைவி ராணி, தனது மகன் பூபாலனுடன் வெளியே சென்றார். பழனி வீட்டை பூட்டி கொண்டு தனது ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஏரிக்கரைக்கு மேய்க்க சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மாலை 7 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீடு திறந்திருப்பதை கண்ட பழனி, மனைவியும், மகனும் வந்துள்ளனர் என்று நினைத்து ஆடுகளை கொட்டகையில் கட்ட சென்றுள்ளார்.

அப்போது தனது மனைவியும், மகனும் இருசக்கர வாகனத்தில் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பழனி, வீட்டில் உள்ளே இருப்பது யார் என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மூவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் உள்ள பீரோவிற்கு அருகே ஒருவன் ஒளிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. யார் என்று கேட்டதற்கு, வேகமாக மூவரையும் தள்ளிவிட்டு வீட்டிற்கு வெளியே அந்த நபர் ஓடியுள்ளான். பழனியும், அவரது மனைவியும் திருடன் திருடன் என கூச்சலிட்டதால், அருகில் இருந்த பொதுமக்கள் அவனை விரட்டிப் பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் அந்த திருடனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு வந்த தியாகதுருகம் போலீசார் பொதுமக்களிடம் இருந்து திருடனை மீட்டு விசாரணை செய்தனர். விசாரணையில், திருச்சி மாவட்டம் துவாக்குடி மலை அருகே உள்ள சமாதானபுரம் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மகன் சிங்காரவேலன் (32) என தெரியவந்தது. மேலும் இவன் மீது பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் சிங்காரவேலனை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து திருட முயன்ற திருடனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தியாகதுருகம் அருகே பரபரப்பு வீட்டில் புகுந்து திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி appeared first on Dinakaran.

Tags : Thiagadurugam ,Martyrdom ,
× RELATED தியாகதுருகம் அருகே மாயமான 7 வயது சிறுவன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு