×

திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

 

திருப்பூர், ஆக.27: திருமுருகன்பூண்டி நகராட்சியில் 130-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தனியார் மயமாக்கப்படுவதற்கு முன்பு தூய்மை பணியாளருக்கு ரூ,592 ஊதியம் வழங்கப்பட்டது. தற்பொழுது தனியார் மயமான பிறகு தூய்மை பணியாளர்களுக்கு ரூ.380 மட்டுமே ஊதியம் வழங்குவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவித்துள்ள கூலியை வழங்க வலியுறுத்தியும், தூய்மை பணியாளர்கள், பணியை புறக்கணித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி தொழிலாளர் நல துறையுடன் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 25ம் தேதிக்குள் நகராட்சி நிர்வாக ஆணையரகம் அறிவித்த கூலி 507 ரூபாயில் இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் போக 442 ரூபாய் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 25ம் தேதி முடிந்த நிலையிலும், அறிவித்த கூலி அமல்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்த தூய்மைப் பணியாளர்கள். நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அங்கேயே காலை உணவையும் சமைத்து சாப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனர் ஆண்டவர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, சிஐடியு மாநில குழு உறுப்பினர் முத்துசாமி, நிர்வாகிகள் சுப்ரமணியம், தேவராஜ், பாலசுப்ரமணியம், சிவக்குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாவட்ட கலெக்டர் அறிவித்த கூலி வழங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

The post திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirumuruganpoondi ,Tirupur ,Tirumuruganpoondi Municipality ,Tirumuruganboondi Municipality ,Dinakaran ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பேர் கைது: 4 கிலோ பறிமுதல்