×

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் பணியை காவிரி ஆணையம் செய்யாததால்தான் உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளோம்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

காட்பாடி: தமிழகத்திற்கு தேவைப்படும்போது தண்ணீர் திறந்து விடும் பணியை காவிரி மேலாண்மை ஆணையம் செய்யாததால்தான் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம் என்று காட்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை அனந்த பத்மநாப சுவாமி கோயில் ரூ41.50 லட்சத்தில் புனரமைக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொன்னையாற்றின் குறுக்கே ரூ20 கோடியில் 5 அடி உயரத்திற்கு தடுப்பணை கட்டப்படுகிறது. மேலும், பொன்னையாற்றின் குறுக்கே ரூ48 கோடியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேம்பாலம் கட்டப்படுகிறது. காட்பாடி அருகே மகிமண்டலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெரும் வகையில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் காட்பாடி தொகுதியில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

காவிரி பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கை கேட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்த ஆணையம் சுதந்திரமாக செயல்படக்கூடியது. தமிழகத்திற்கு தண்ணீர் தேவைப்படும்போது கர்நாடக அரசிடம் தண்ணீர் விடும்படி கூறியுள்ளது. தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கேட்டு வருகிறது. அதை நடைமுறைப்படுத்துவது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணியாகும். ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் அதை செய்யவில்லை என்பது தான் தமிழக அரசின் குற்றச்சாட்டு. அந்த குற்றச்சாட்டுக்கு தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளோம். இப்பிரச்னை தொடர்பாக அடுத்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் பணியை காவிரி ஆணையம் செய்யாததால்தான் உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளோம்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Cauvery Commission ,Tamil Nadu ,Minister ,Durai Murugan ,Katpadi ,Cauvery Management Authority ,Duraimurugan ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...