×

ஜனநாதன் எனும் இராஜராஜன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தமிழகத்தின் பெருமைக்குக் குறிப்பாக சோழப் பெருமன்னர்களின் சிறப்புக்குக் காரணமாய் விளங்குவது மனுநெறிப்படி வாழ்ந்து காட்டிய சோழமன்னன் ஒருவனின் புராண வரலாறேயாகும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கூற்றின் வாயிலாக இவ்வரலாறு சுட்டப்பெறுகின்றது. பாண்டியனின் கேள்விக்குப் பதில் கூற முனைந்த கண்ணகி,

வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
எனத் தன் ஊர் பற்றி கூறினாள்.

மன்னனின் அரண்மனை வாயிலில் கட்டப் பெற்றிருந்த மணியின் நடுநாக்கு நடுங்க பசுவின் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் நெஞ்சத்தைச் சுட, தன் புதல்வனை தேர்க்காலில் இட்டுக்கொன்ற மன்னவனின் புகார் நகரமே தன் ஊர் என்று கூறியது வாயிலாக மூன்று அடிகளிலேயே மனுநீதிச் சோழனின் வரலாற்றை பாண்டிய நாட்டில் பதிவு செய்தாள் கண்ணகி. பின்பு, செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியிலும், ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன் உலா, குலோத்துங்கன் உலா, இராசராசன் உலா என மூவர் உலாவிலும் இவ்வரலாற்றைக் கூறியுள்ளனர். சங்கர சோழனுலாவும் இதனை வலியுறுத்துகின்றது. சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் மிக விரிவாக மனுநீதிச் சோழனின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.

இலக்கியங்களில் கூறப்படும் மனுவேந்தனின் வரலாறு பற்றித் தமிழகத்திலேயே ஒரே ஒரு கல்வெட்டுதான் விரிவாகப் பேசுகிறது. இவ்வரிய கல்வெட்டும் திருவாரூர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத் தென்புறச் சுவரில் உள்ளது. இது சோழப் பெருமன்னனான விக்கிரம சோழன் காலத்தில் வெட்டப்பட்டது. வீதிவிடங்கப் பெருமானே பேசுவது போன்று எழுதப்பட்டுள்ளது. மேலும், பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறாது விடுத்த பல புதிய தகவல்களும் இக்கல்வெட்டில் காணலாம்.

இக்கல்வெட்டு கி.பி. 1123-ஆம் ஆண்டு, மே திங்கள் 31-ஆம் நாள் வெட்டப்பட்டதாகும். இதில் குறிப்பிடப்படும் மன்னன் சோழப் பேரரசன் விக்கிரம சோழன் ஆவான். சேக்கிழார் விக்கிரம சோழனின் மகனான இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் பெரிய புராணத்தை யாத்தார். எனவே, சேக்கிழார் கூறும் மனுவின் வரலாற்றிற்கும் காலத்தால் முந்தியதே இக்கல்வெட்டாகும்.

சேக்கிழார் கூறாது விடுத்த செய்திகளாக மனுவின் புதல்வனுடைய பெயரும், இந்த நிகழ்ச்சியால் உயிர்துறந்த அமைச்சனின் பெயரும், அவனது மைந்தன் பெயரும், இறுதியாக மனு தவம் மேற்கொண்டமையும், மனுவின் மந்திரியின் ஊரும், அவன் வம்சத்தில் தோன்றிய ஒருவனைப்பற்றிய தகவல்களும் உள்ளன.இறைவனே கூறுமாறு அமைந்துள்ள இக்கல்வெட்டில் காணும் மனுவின் வரலாற்றுப் பகுதியை மட்டும் காண்போம். ‘‘திருவாரூர் கூற்றத்து திருவாரூர் உடையார் வீதிவிடங்கர் சித்திரைத் திங்கள் சதய நாளில் ஸ்ரீதேவாசிரியனாம் திருக்காவணத்தில் சிம்மாசனத்து எழுந்தருளியிருந்து’’ கூறியதாவது.

‘‘நம் ஏவலால் பூலோக ராஜ்யம் செய்கிற சூரிய புத்திரன் மனு தன் புத்திரன் ஏறி வருகிற தேரில் பசுவின் கன்றாகப் பட்டு பரமாதப் பட, அதின் மாதாவான சுரபி கண்டு துக்கித்து மனுவின் வாசலில் மணியை எறிய அது கேட்டு மனு தன் மந்திரி இங்கணாட்டு பாலையூருடையான் உபய குலாமலனைப் பார்த்து நீ சென்று இதனை அறிந்து வா என வாயிற்புறத்து ஒரு பசு மணி எறியா நின்றிது என்று சொல்ல அது கேட்டு மனு புறப்பட்டு பசுவையும் பட்டுக் கிடந்த கன்றினையும் கண்டு வினவி தன் புத்திரன் ஏறின தேரிலே பட்டமை அறிந்து, அக்கன்றுக்கு நேராக தன் புத்திரன் ப்ரிய விருத்தனை தேரிலே ஊர்ந்து கொடுக்கவென்று உபயகுலாமலனுக்கு சொல்ல, அவன் சந்தாபத்தோடும் புறப்பட்டு தன் செவிகளை தரையிலே குடைந்து கோடுபட்டது கண்டு துவாரபாலகன் புகுந்து உபயகுலாமலன் தன் செவிகளைக் குடைந்துகொண்டு இறந்தான் என்று தும்பிதனாய் மனுதானே புறப்பட்டு தன் புத்திரனை தானே தேரிலே ஊர்ந்துகொடுக்க அப்போதே நாம் அவனை அனுக்கிரஹித்து கன்றுக்கும் மந்திரிக்கும் மனுபுத்திரனுக்கும் ஜீவன் கொடுக்க அது கண்டு மனு சந்தோஷித்து, கன்றினை எடுத்துக் கொண்டு பசுவுக்கு காட்டிக் குடு…

அபிஷேகம் செய்து இவனுக்கு உபயகுலாமலன் மகன் சூரியனை மந்திரியாக்கி இவனுக்கு தன் புத்திரன் மாளிகை… மங்கல… ஊரும் கொடுத்து மனுவும் உபயகுலாமலனும் தவசினை தலை நின்றமையில் பாலையூருடையான் உபயகுலாமலன் வம்சத்தானாகிய பாலையூருடையார் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வாணாதிராயன் வம்சாதி ஆக வருகிற மாளிகை, மனை பழையபடி மாளிகையாக எடுத்து குடிவைப்பிப்பதாக’’ என்றுள்ளது.

இதனால், விக்கிரமசோழன் காலத்தில் (கி.பி. 31.05.1123) இவ்வரலாறு மிகவும் போற்றப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிறது. மற்ற எந்த ஒரு இலக்கியத்திலோ புராணத்திலோ குறிக்கப்படாத புதிய செய்திகளான மனுவின் புத்திரனின் பெயர் ப்ரியவிருத்தன் என்பதும், மனுவின் மந்திரியின் பெயர் இங்கணாட்டு பாலையூர் என்ற ஊரைச் சேர்ந்த உபயகுலாமலன் என்பதும் அவன் மகன் சூரியன் என்பதும் அவனே பின்பு மனுவினால் முடிசூட்டப்பட்ட ப்ரிய விருத்தனுக்கு மந்திரியாக இருந்தான் என்பதும் உபயகுலாமலனும் மனுவும் இறுதிக்காலத்தில் தவம் மேற்கொண்டார்கள் என்பதும் ஆகிய செய்திகள் உள்ளன.

அடுத்து, மனுவின் வம்சத்தில் தோன்றிய வழித்தோன்றலே விக்கிரமசோழன் காலத்தில் வாழ்ந்த இங்கணாட்டு பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான மகாபலி வாணாதிராயன் என்பதும் தெரியவருகிறது. உபயகுலாமலன் வம்சத்தில் வந்த வாணாதி ராயனுக்கு விக்கிரம சோழனால் மாளிகையும், மனையும் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

மன்னனது ஆணையான இக்கல்வெட்டு வீதிவிடங்கப் பெருமானே பேசுவது போன்று வடிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள வேறு இரண்டு கல்வெட்டுக்களிலும் மேற்குறிப்பிட்டுள்ள வாணாதிராயன் பற்றிய குறிப்புகள் உள்ளன. மனுவின் அமைச்சர்கள் மற்றும் சந்திரசேகரன் ஆதிவிடங்கன் இவர்களின் ஊரான பாலையூர் என்பது தற்போது குடவாயிலுக்கும் திருவாரூருக்கும் இடையேயுள்ள பாலையூராகும். இவ்வூர் விக்கிரமசோழன் காலத்தில் இங்கணாட்டு (எண்கண் எனத் தற்போது அழைக்கப்படுகிறது) பிரிவில் அடங்கியிருந்த ஒரு ஊராகும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post ஜனநாதன் எனும் இராஜராஜன் appeared first on Dinakaran.

Tags : Rajarajan ,Kunkumumam ,Tamil Nadam ,Cholab ,Janathan ,
× RELATED தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சிறந்த நூல்களுக்கு பரிசு