×

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடி கூறுவது பொய்: ராகுல் குற்றச்சாட்டு

கார்கில்: இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது பற்றி லடாக்கில் உள்ளவர்களுக்கு தெரியும் என்றும் ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடி பொய் கூறுகிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி லடாக்கில் 9 நாட்கள் சுற்றுபயணம் செய்தார். இந்த சுற்றுபயணத்தின் கடைசி நாளான நேற்று கார்கில் ஜனநாயக கூட்டணி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,‘‘ கடந்த ஒரு வாரமாக லடாக் பகுதியில் பைக்கில் சுற்றுபயணம் செய்தேன்.

இந்தியாவின் ஆயிரக்கணக்கான சதுர கிமீ நிலங்களை சீனா எடுத்து கொண்டுள்ளது என்பது உறுதியாகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். பிரதமர் பொய் பேசுகிறார். கனிம வளங்கள் நிறைந்த லடாக் பகுதியை பாஜவின் கார்ப்பரேட் நண்பருக்கு தாரை வார்க்க காங்கிரஸ் அனுமதிக்காது. கார்கில் மக்கள் தங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம், நிலம்,கலாச்சாரம் ,மொழி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கான பாதுகாப்பு வேண்டும் என கோரினர்.

லடாக் மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கினால் அவர்களிடம் இருந்து நிலத்தை பறிக்க முடியாது என்பது பாஜவுக்கு தெரியும். அங்கு உள்ள நிலத்தை தொழிலதிபர் கவுதம் அதானிக்கு வழங்குவதற்கு பாஜ விரும்புகிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.

மக்களின் குரலை கேட்க விரும்புகிறேன்
லடாக் பயணம் குறித்து ராகுல்காந்தி டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நான் லடாக்கின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் ஏழைகளுடன் பேசினேன். மற்ற தலைவர்கள் தங்கள் ‘மனதில் குரல்’ பற்றி மட்டுமே பேசுகிறார்கள். நான் உங்கள் ‘மனதின் குரலை’ கேட்க விரும்புகிறேன். இந்தியாவின் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நிலத்தை சீனா அபகரித்துள்ளது. இதை மறுப்பதன் மூலம் பிரதமர் பொய் சொல்கிறார். லடாக்கில் உள்ள ஒவ்வொருவருக்கும் இது தெரியும். இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடி கூறுவது பொய்: ராகுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,China ,India ,Rahul ,Kargil ,Ladakh ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...