×

ஒயிட்வாஷ் முனைப்பில் பாகிஸ்தான்: ஆறுதல் வெற்றி பெறுமா ஆப்கான்?

கொழும்பு: ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது. ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக.30ம் தேதி முதல் பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான ஒருநாள் தொடர் இலங்கையில் நடக்கிறது. முதல்போட்டியில் 142 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் 2வது போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த அந்த போட்டியில், ஆப்கான் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்தது. குர்பாஸ் 151, இப்ராகிம் ஸத்ரன் 80 ரன் விளாசினர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 49.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இமாம் உல் ஹக் 91, கேப்டன் பாபர் 53, ஷதாப்கான் 48, பஹர் ஜமான் 30 ரன் விளாசினர். பாகிஸ்தான் 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாசா அரங்கில் இன்று நடக்கிறது.ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் பாகிஸ்தானும், ஆறுதல் வெற்றிக்காக ஆப்கானிஸ்தானும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இரு அணிகளும் கடைசியாக மோதிய (2012 – 2023 ஆக. 24) 5 ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.
* இந்த 5 போட்டிகளும் அந்த அணிகளின் சொந்த மண்ணில் இல்லாமல்… ஷார்ஜா, பத்துல்லா (வங்கதேசம்), அபுதாபி, லீட்ஸ் (இங்கிலாந்து) மற்றும் இலங்கையின் அம்பாந்தோட்டை (2 ஆட்டம்) என பொதுவான மைதானங்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

The post ஒயிட்வாஷ் முனைப்பில் பாகிஸ்தான்: ஆறுதல் வெற்றி பெறுமா ஆப்கான்? appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Afghanistan ,Colombo ,Premadasa Stadium ,Whitewash ,Dinakaran ,
× RELATED 2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின்...