×

ஆப்கானிஸ்தான் அணியின் முயற்சி தனக்கு ஆச்சரியமாக இல்லை: ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா

செயின்ட் வின்சென்ட்: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “ஆப்கானிஸ்தானின் முயற்சி தனக்கு ஆச்சரியமாக இல்லை, இது ஒரு அணியாக அவர்களின் பலத்தை எடுத்துக்காட்டுகிறது” என ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

கடந்த 23ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய 148 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை எளிதாக எட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுவிடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக பந்து வீசி அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.

ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த போட்டியின் மூலம் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி ருசித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அடைத்த தோல்விக்கு நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி பழி தீர்த்துக்கொண்டது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளதாவது; “ஆப்கானிஸ்தானின் முயற்சி தனக்கு ஆச்சரியமாக இல்லை, இது ஒரு அணியாக அவர்களின் பலத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆப்கானிஸ்தான் மிகவும் வலிமையான அணியாகும். கடந்த உலகக் கோப்பையிலும் அவர்கள் எங்களுக்கு எதிராக வென்றிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டி குறித்து அவர் தெரிவித்துள்ளார்; “இது ஆஸ்திரேலியாவிற்கு ‘டூ ஆர் டை போட்டி’, கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் வரை ஆஸ்திரேலியா மிகச் சிறப்பாக டி20 கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. அதுதான் டி20 கிரிக்கெட்டின் அழகு; முழு சூழ்நிலையையும் மாற்ற ஒரு கணம் போதும்” என அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆப்கானிஸ்தான் அணியின் முயற்சி தனக்கு ஆச்சரியமாக இல்லை: ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Australia ,Usman Khawaja ,St. Vincent ,Super 8 ,T20 World Cup ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்;...