![]()
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மண்டலங்களிலும் கழிவு நீர் செல்லும் குழாய்களில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மண்டலங்களிலும் அடிக்கடி கழிவுநீர் தடைபட்டு செல்லும் தெருக்களில் உள்ள கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றிட தூர்வாரும் பணிகள் வரும் இன்று முதல் தொடங்கி வரும் செப். 2ம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
முதற்கட்டமாக அனைத்து மண்டலங்களில் உள்ள 720 தெருக்களில் அமைந்துள்ள 5,277 இயந்திர நுழைவாயில்களில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 142 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 35 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் 60 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 537 கழிவுநீர் இயந்திரங்கள் மூலம் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றிட தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த தூர்வாரும் பணிகள் மூலம் கழிவுநீர் தடைபட்டு செல்லும் குழாய்களில் கசடு நீக்கப்பட்டு கழிவுநீர் கட்டமைப்பு திறன் மேம்படுத்தப்படும். மேலும், வழக்கமாக நடைபெறும் தூர்வாரும் பணிகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவு நீர் குழாய்களில் தூர்வாரும் பணிகள் தீவிரம்: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.
