×

இந்தியாவின் பெருமை!!: சந்திரயான் 3 லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கும் காட்சிகளை வெளியிட்டது இஸ்ரோ..!!

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் சந்திரயான் 3 லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் இறங்கிய காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் மிகவும் மெதுவாக நிலவில் தரையிறங்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் வாயிலாக, அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியனுக்கு பின், நிலவில் தரை இறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி, பிரக்யான் ரோவர் நிலவில் நடைபயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ரோவர் நிலவில் இறங்கும் வீடியோ காட்சிகளை இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டது. லேண்டரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ தனது ட்விட்டர்(X) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரோவரின் சக்கரத்தில் பதிக்கப்பட்ட அசோக சக்கரம், இஸ்ரோ முத்திரை நிலவில் தடம் பதிக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் 500 மீட்டருக்கு சென்று ரோவர் ஆய்வு செய்யவுள்ள நிலையில் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. காலை சந்திரயான் – 2 ஆர்பிட்டர் லேண்டரை எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. தற்போது சந்திரயான் – 3 திட்டத்தின் பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கிய காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

The post இந்தியாவின் பெருமை!!: சந்திரயான் 3 லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கும் காட்சிகளை வெளியிட்டது இஸ்ரோ..!! appeared first on Dinakaran.

Tags : Sriharikota ,ISRO ,Prakyan ,Moon ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...