×

கோவையில் 100 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்

 

கோவை, ஆக.25: கோவையில் விரைவில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பொதுமேலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு பேசியதாவது: கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும்.

பயணிகள் பேருந்துகள் மீது புகார் அளிக்க வசதியாக கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை பேருந்துகளில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் பொருத்த வேண்டும். சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளை செல்லும் பயணிகளை ஏற்ற மறுப்பதுடன் இருக்கை அமர அனுமதிப்பதில்லை. சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய அரசு பேருந்துகளில் அதிக சத்தத்துடன் காற்று ஒலிப்பான் பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும். கோவையில் மத்திய அரசின் உத்தரவின்படி 15 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுக்கு பதிலாக மாற்று பேருந்துகள் இயக்க வேண்டும்.

போக்குவரத்து குறைகள் தொடர்பாக நுகர்வோர் அமைப்புகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கொண்ட போக்குவரத்து ஆலோசனை குழு அமைக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பொது மேலாளர் ஸ்ரீதரன் பேசும்போது, ‘‘கோவையில் நகர பேருந்து 602, புறநகர பேருந்து 349 தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசால் 163 புதிய பேருந்துகள் கோவை கோட்டத்தில் இருந்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் 72 நகரப் பேருந்துகளும் அடங்கும். அதுபோல செல்போன் பேசியபடி பேருந்து இயக்கிய 37 டிரைவர்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பானை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 100 மின்சார பேருந்துகள் விரைவில் கோவையில் இயக்கப்படும். அதற்கான சார்ஜிங் வசதி செய்யப்பட்டு வருகிறது. கோவையில் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதால் அவை படிப்படியாக நிறுத்தப்பட்டு மாற்று பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் பேருந்துகள் தொடர்பான புகார்களுக்கு 8300545425 என்ற தொலைபேசி எண்ணில் புகார் பதிவு செய்யலாம். மேலும் நுகர்வோர் அமைப்புகள் தெரிவித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார். இதில் துணை மேலாளர்கள் வணிகம் ஜெகதீஸ்வரன், பத்ரகுமார், கலைச்செல்வி, நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு, இந்திராணி, வெங்கடேஷ், பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோவையில் 100 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது