×

வீட்டில் யானைத் தந்தங்கள் பறிமுதல்: நடிகர் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு.! நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: வருமான வரித்துறை சோதனையின் போது வீட்டில் 4 யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கில் நடிகர் மோகன்லால் உள்பட 4 பேர் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக பெரும்பாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல நடிகர் மோகன்லாலின் வீட்டில், கடந்த 2012ம் ஆண்டு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து 4 யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனர். அவற்றை வீட்டில் வைத்திருக்க மோகன்லால் உரிய லைசன்ஸ் பெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து யானைத் தந்தங்களை வனத்துறையிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக மோகன்லால், அவருக்கு தந்தங்களை கொடுத்த திருச்சூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் உள்பட 4 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வனத்துறை சட்டங்களில் சில மாற்றங்கள் செய்து மோகன்லாலுக்கு தந்தங்களை வைத்திருக்க லைசன்ஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதான வழக்கை வனத்துறை ரத்து செய்தது.

வனத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எர்ணாகுளத்தை சேர்ந்த பவுலோஸ் என்பவர் பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த சில வருடங்களாக வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது மோகன்லால் உள்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், அவர்கள் அனைவரும் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

The post வீட்டில் யானைத் தந்தங்கள் பறிமுதல்: நடிகர் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு.! நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mohanlal ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!