×

அளவற்ற புண்ணியத்தை அள்ளித் தரும் ஆவணி !

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

ஆவணி 1 (18-8-2023): சுக்கிரன், வக்கிரகதியில் கடக ராசிக்கு மாறுதல்
ஆவணி 2 (19-8-2023): செவ்வாய், கன்னி ராசிக்கு மாறுதல்
ஆவணி 7 (24-8-2023): சனி வக்கிரகதியில், மகர ராசிக்கு பிரவேசித்தல்
ஆவணி 26 (12-9-2023): குரு பகவான் வக்கிரகதி ஆரம்பம்

இவ்வுலக ஜீவ ராசிகள் அனைத்திற்கும் ஆதார சக்தியாக விளங்குபவரும், நமக்கும், மறைந்த நமது மூதாதையர்களுக்கும், பாலமாக அமைந்திருப்பவரும், மந்திரங்களுக்குத் தாயாகத் திகழும் “காயத்ரி” மகா மந்திரத்தின் சக்தியைத் தன்னுள் கொண்டுள்ளவரும், தங்கமயமான தேரில், வான வளிமண்டலத்தில், சதா வலம் வருபவரும், தன்னிகரற்ற தேஜஸுடன் (ஒளிமயமான) பிரகாசிப்பவருமான சூரியன், மனோகாரகரான சந்திரனின் ஆட்சி வீடான கடகத்தை விட்டு, தமது ஆட்சி ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலத்தையே “ஆவணி மாதம்”, “சிரவண மாதம்” என பல பெயர்களால் போற்றி, பூஜித்து வருகிறோம், பல, பல யுகங்களாக!

இனி, இம்மாதம் வரும் விசேஷ புண்ணிய தினங்களைப் பார்ப்போமா?

ஆவணி 3 (20-8-2023): நாக சதுர்த்தி; மாத சதுர்த்தியாகிய இன்று விரதமிருந்து விநாயகப் பெருமானை அருகம்புல் கொண்டு அர்ச்சித்து வந்தால், சங்கடங்கள் அகன்று, தொட்டது துலங்கும், சகல காரிய சித்தி உண்டாகும்.

ஆவணி 4 (21-8-2023): நாக பஞ்சமி; கருட பஞ்சமி. இயற்கையில் இறைவனைக் கண்டவர், இந்திய மக்கள்! ஆதலால்தான், மலைகள், மரங்கள், செடிகள், மிருகங்கள், பிராணிகள், பட்சிகள், நீர்நிலைகள் ஆகியவற்றையுமே தெய்வாம்சம் பொருந்தியவையாகக் கருதி வணங்கி வருகின்றனர். இமயம், திருக்கையிைல, கோவர்த்தனம், பழனி மலை, திருவண்ணாமலை ஆகிய பர்வதங்கள், மானஸரோவர், புஷ்கரம் ஆகிய ஏரிகள், நைமிஸாரண்யம், கிஷ்கிந்தை போன்ற காடுகள், அரசு, ஆலம், வில்வம், துளசி, புன்னை, ஆகிய விருட்சங்கள், கங்கை, யமுனை, சிந்து, காவேரி, கோதாவரி, கிருஷ்ணா, நர்மதை ஆகிய புண்ணிய நதிகள், பிரயாகை, தேவப்ரயாகை, ருத்ரப்ரயாகை போன்ற புண்ணிய நதி சங்கமங்கள் ஆகிய அனைத்தையும் தவறாது பூஜித்து வருகிறோம். கருடன், கொடிய சர்ப்பங்கள் ஆகியவற்றிலும்கூட இறைவனைக் காண்கிறோம்; பூஜிக்கின்றோம். வைணவ மகாபுருஷரான மத் நிகமாந்த மகா தேசிகர், கருடன் மீது இயற்றியுள்ள “கருட பஞ்சாட்ஸத்”, “கருட தண்டகம்” ஆகியன பிரசித்திப் பெற்றவை. இவ்வுலக வாழ்க்கையை நீத்த பிறகு, ஜீவனின் பயணத்தை விளக்குகிறது, கருட புராணம். இந்த ஆவணி மாதத்தில், கருடனையும், நாக சர்ப்பத்தையும் ஆணி 3 மற்றும் 4ம் தேதிகளில் பூஜிக்கின்றோம். சின்னஞ்சிறு கிராமங்களில் கூட, பெண்கள், பாம்பு புற்றிற்கு பால் வைத்து, பூஜிப்பதை இன்றும் காணலாம். இதன் பலன் கணவருக்கு நீண்ட ஆயுளையும், பெண்களுக்கு, சுமங்கலி பாக்கியமும் கிட்டும்.

ஆவணி 5 (22-8-2023): முருகப் பெருமானுக்கு உகந்த தினமாகிய சஷ்டியில் விரதமிருப்போர்க்கும், (குழந்தை பாக்கியம் வேண்டுவோர்க்கும்) அகப்பையில் (கருப்பையில்) குழந்தை உண்டாகும்.

ஆவணி 8 (25-8-2023)வரலட்சுமி விரதம்! மனித வாழ்க்கையை மேம்படச் செய்ய எட்டு பாக்கியங்கள் அவசியம் எனக் கூறுகின்றன புராதன நூல்கள்! அவை: கல்வி, தைரியம், செல்வம், உணவு, நல்ல குழந்தைகள், திறமை, சமூகத்தில் கௌரவம், உடல் ஆரோக்கியம் இவை எட்டும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். ஆகவே, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வித்யா லட்சுமி, வீர லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, ஆதி லட்சுமி, கஜலட்சுமி என அஷ்ட (8) அம்சங்களையும், வீட்டில் சொம்பு தீர்த்தத்தில், வரமருளும், வரலட்சுமியாக, ஆவாஹனம் செய்து, தூபம், தீபம், நைவேத்தி்யம் காட்டி பூஜித்து வருகிறோம்!

இதன் பலன்: வறுமை நீங்கும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புத்திர பாக்கியம் கிட்டும். பயம் நீங்கும், செல்வம் பெருகும். முயற்சிகள் வெற்றிபெறும். இவற்றை அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆவணி 10 (27-8-2023): புத்திரத ஏகாதசி. காயத்ரி மகா மந்திரத்திற்கு நிகரான மந்திரமில்லை! கங்கைக்கு நிகரான புண்ணியம் தரக்கூடிய நதிகள் உலகில் இல்லை. காஞ்சி மாநகரத்திற்கு இணையானதோர் நகரில்லை! ஏகாதசி விரதத்திற்கு நிகரான விரதம் ஏதுமில்லை என்பது, ஆன்றோர் வாக்கன்றோ? இவ்விரதத்தைக் கடைப்பிடித்து அனைத்து வளங்களையும் பெற்று, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களைப் பெறுவது மட்டுமல்லாது, பூர்வ ஜென்மத்தில் ஏதேனும் பாபங்கள் செய்திருந்தாலும் அவையனைத்தும் விலகி, இப்பிறவியில் இக பரசுகங்களைப் பெற்று, முடிவில் இறைவனின் திருவடித் தாமரையில் என்றென்றும் நீங்காத செல்வமாக நிறைந்து, வைகுண்ட பிராப்தி எய்துவர்.

ஆவணி 12 முதல், 14 வரை (29-8-2023 முதல், 31-8-2023 வரை) ஆவணி அவிட்டம், உபாகர்மா, காயத்ரி ஜபம் வாழ்க்கை சுகங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, மலை குகைகளிலும், அடர்ந்த காடுகளிலும், கடும் தவமியற்றி நான்கு வேதங்களிலும், உபநிடங்களிலும்,பொதிந்துள்ள ரகசியங்களையும், சூட்சுமங்களையும் கண்டறிந்து, நமது நன்மைக்காக நமக்கு உபதேசித்து உதவிய வேதகால மகரிஷிகளையும், மந்திரங்கள் அனைத்திற்கும் அன்னை எனப் போற்றப்படும் “காயத்ரி” மகா மந்திரங்களையும் பூஜிக்கும் புண்ணிய தினங்கள். மந்திரங்களில், தான் காயத்ரி மகாமந்திரமாகத் திகழ்வதாக பகவான் கிருஷ்ணன், குருசேத்திர புண்ணிய பூமியில் அருளியதை நினைவு கொள்வோம் இன்று!

ஆவணி 19 (5-9-2023) : கிருஷ்ணபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு, முருகப் பெருமானின் பரிபூரண கிருபைக்குப் பாத்திரர் ஆவார்கள். அதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று, தைரிய, வீர்ய, விஜய, ஆரோக்கியத்தையும், சம்பத்தையும் பெற்று, இவ்வுலகத்தில் குறையேதுமில்லாமலும், பரலோகத்தில் பேரின்பத்தையும் அடைவது திண்ணம்.

ஆவணி 20 (6-9-2023) : கிருஷ்ணாவதாரம். “என்றும், என்னிலையிலும், தர்மம் வென்று நிற்கும், அதர்மம் அழியும்…!” என்ற உலகியலை உலகிற்கு உணர்த்த பகவான் ஸ்ரீமந் நாராயணனே கண்ணனாக அவதரித்த மகத்தான புண்ணிய தினம். இன்று, ” மகாபாரதம், பாகவதம் பகவத்கீதை” விஷ்ணு சகஸ்ர நாமம் ஆகியவற்றில் எது உங்களால் முடிகிறதோ அதனைப் படித்து பகவான் கிருஷ்ணனைப் பூஜிக்க வேண்டிய ஈடினணயற்ற புண்ணிய தினம் இன்று (ஜெர்மானிய பேரறிஞரான, மாக்ஸ்முல்லர் மற்றும் அணுகுண்டைக் கண்டு பிடித்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஓப்பன் ஹீமர் ஆகியோர் பகவத் கீதையைப் படித்துப் போற்றியவர்கள்.) ஆவணி மாதத்தின் பெருமையினை ஆயிரம் நாவைப் படைத்த ஆதிசேஷனாலும் முழுமையாக விவரிக்க முடியாது என்பர் பெரியோர்!

ஆவணி 21 (7-9-2023) : சனி பகவானின் ஜெயந்தி – சூரிய பகவானுக்கும், சாயா தேவியருக்கும் பிறந்தவர்,கரைந்துண்ணும் காக்கையைத் தன் வாகனமாகக் கொண்டவரும், கால்களில் சற்று ஊனமாகியபடியால், ஒவ்வொரு ராசியிலும் மெதுவாகச் செல்வதால், மந்தன் என்றும், ஒருதரம் பூமியைச் சுற்றிவர சுமார் 30 வருடங்களை எடுத்துக் ெகாள்பவரும், அஷ்டமச் சனி, பொங்கு சனி, ஏழரைச் சனியின் தாக்கத்தினால் வாழ்க்கை ரகசியத்தையும், மேடு – பள்ளங்களை நமக்கு அனுபவப்பூர்வமாக எடுத்துச் சொல்பவரும், எது வந்தபோதிலும் அவற்றைக் கண்டு அஞ்சாமல், எதிர்நீச்சல் போட்டு, வாழ்க்கைப் பயணத்தில் முன்னேற, உத்வேகம் அளிப்பவராகவும், மனிதர்கள் செய்யும் பாப, புண்ணியங்களுக்கேற்ப தண்டனையும், சன்மானத்தையும்ஏதுமொரு பாரபட்சமுமின்றி அளித்தருள்பவரும், நீதிநெறி வழுவாத அரசனைப் போன்றும், சனி பகவானின் ஆட்சி வீடாகிய மகரம், கும்பமும், மேஷ ராசியில் நீச்சம் அடையும் இவர், துலாம் ராசியில் உச்சஸ்தானத்தில் இயங்கும் இவர், இறைவனின் திருவாக்கினாலேயே “(சனி)ஈஸ்வரன்” என்றழைக்கப்பெற்றவருமான சனிபகவானின் திரு அவதாரப் புண்ணிய தினம். பக்தகோடிகள், திருநள்ளாறு திருத்தலம் சென்று தரிசித்தாலும், (எக்காரணம் கொண்டும், சனி பகவானுக்கு எதிரே நின்று தரிசித்தல் கூடாது; பக்கவாட்டில் ஓரமாகவே நின்று, தரிசித்தல் வேண்டும்)அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று, எள்தீபம் ஏற்றுவது, சனி தோஷ நிவர்த்தியாகவும் சர்வ மங்களங்களையும் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

ஆவணி 31 (17-9-2023): அங்காரக ஜெயந்தி-நவக்கிரகங்களில் மூன்றாம் மகோன்னத இடத்தை வகிப்பவரும்,சகோதரகாரகன், சக்திதரன், மகாகாயன், குமாரன், தனப்பிரதன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, மங்களகாரகன், காமாதிபதி, பூமிகாரகன் என்றெல்லாம் அழைக்கப்பெறுபவரும், ஒவ்வொரு ராசியிலும் ஏறத்தாழ 45 நாட்கள் தங்குபவரும், ராசி சக்கரத்தைச் சுற்றிவரஒன்றரை வருடங்கள் எடுத்துக்கொள்பவரும், செந்நிறத் திருமேனி படைத்தவரும், தென்திசை நோக்கியவாறு திருவருள்புரிபவருமாகிய செவ்வாய் பகவானுக்கு இன்று அவதாரத் திருநட்சத்திரம். பக்தர்கள், திருக்கோயிலுக்குச் சென்று, செவ்வாய் பகவானுக்கு, செந்நிற ஆடை அணிவித்து, செவ்வரளிப் பூ கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குவது மகத்தான புண்ணிய பலனைப் பெறுவர். மேலும் விவரிப்பதை விடுத்து, இம்மாத ராசி பலன்களை டிகிரி சுத்தமாகக் கணித்து “தினகரன்” வாசக சகோதர – சகோதரிகளாகிய உங்களுக்கு அளிப்பதில், மன நிறைவும், மகிழ்ச்சியும் அடைகிறோம். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், வாழ்க வளமுடனும், உடல் நலமுடனும்…!!

The post அளவற்ற புண்ணியத்தை அள்ளித் தரும் ஆவணி ! appeared first on Dinakaran.

Tags : Avani ,Bhagwat Kaingarya ,Sagara Chakravarthy AMrajagopalan Avani ,Venus ,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...