×

காவிரியில் 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

புதுடெல்லி: காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதம் முழுவதும் வினாடிக்கு 24ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா இந்த ஆண்டு போதுமான தண்ணீரை திறந்துவிடவில்லை. இதையடுத்து, கடந்த 11ம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், கர்நாடகா தர வேண்டிய 39.7 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக தர தமிழ்நாடு சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் அதனை கர்நாடகா அரசு ஏற்க மறுத்தது.

இதையடுத்து கூட்டத்தின் முடிவில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 10ஆயிரம் கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு மட்டும் திறக்க வேண்டும் என காவிரி ஆணையத்தின் தலைவர் ஹல்தர் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராகவும், கர்நாடகா அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உமாபதி மற்றும் குமணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று 113 பக்கங்கள் கொண்ட புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதில்கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டுக்கு காவிரியில் வழங்க வேண்டிய நிலுவை தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும். தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் கர்நாடகா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிப்பது மட்டுமில்லாமல், இந்த வழக்கில் காவிரி ஆணையத்தையும் எதிர் மனுதாரராக இணைக்க வேண்டும். அதேப்போன்று 15 நாட்களுக்கு மட்டும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி நீரை திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, நடப்பு ஆகஸ்ட் மாதம் முழுவதும் வினாடிக்கு 24ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

குறிப்பாக ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரையில் மொத்த 53டி.எம்.சி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 15 டி.எம்.சி நீரை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகா அணைகளில் போதிய அளவுக்கு நீர் இருந்தும் அம்மாநில அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க மறுத்து வருகிறது. அதேப்போன்று இந்த விவகாரத்தில் ஒருதலை பட்சமாக செயல்படும் காவிரி ஆணையத்திற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக கடந்த 11 தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுத்து 15 நாட்களுக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறந்தால் போதும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உச்ச நீதிமன்றம் முன்னதாக வழக்கின் தீர்ப்புக்கு எதிரானதாகும். இந்த உத்தரவை கூட கர்நாடகா அரசு பின்பற்றவில்லை. கடந்த 11ம் தேதி 6148 கனஅடி நீரும், 12ம் தேதி 4852 கனஅடி நீரும், மேலும் 13ம் தேதி 4453 கனஅடி நீரும், இறுதியாக 14ம் தேதி 4000 கனஅடி தண்ணீரும் என்ற என்ற விதத்தில் மட்டுமே திறந்துள்ளது.

இவை அனைத்தும் விதிமுறை மீறலின் உட்சபட்சமாகும். கர்நாடகா அரசின் இதுபோன்ற நடவடிக்கையாலும், தண்ணீர் திறக்க தாமதிக்கப்படுவதாலும் தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரை காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த புதிய மனுவானது அடுத்த ஓரிரு தினங்களில் அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.கே.சிவக்குமார் பேட்டி : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கர்நாடக மாநில விவசாயிகளுக்கு மழை குறைவு காரணமாக பயிரிட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். இந்நிலையில் தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருப்பது சரியல்ல. நீர் இருப்பின் அடிப்படையிலும் வறட்சி காலத்தில் நீர் பங்கீடு ஃபார்முலா அடிப்படையிலும் கண்டிப்பாக தண்ணீர் திறந்து விடப்படும். குடிநீருக்கு தேவையான தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்ட பிறகு கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை கருத்தில் கொண்டு மீதமுள்ள நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட நாங்கள் தயாராக உள்ளோம். நாம் இருவரும் சேர்ந்து இரண்டு மாநில விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். இரு மாநிலமும் சண்டையிட்டு கொள்ள தேவையில்லை.கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இருவரும் சகோதரர்கள் என்பதை நான் முதல் நாளில் இருந்து தெரிவித்து வருகிறேன்’ என்றார்.

The post காவிரியில் 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kavieri ,Tamil Nadu Government ,Supreme Court ,New Delhi ,Government of Karnataka ,Kaviri ,
× RELATED கர்நாடகாவின் சோமண்ணாவுக்கு...