×

திருப்பதி மலைப்பாதையில் சென்றபோது சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது: மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை: திருப்பதி மலைப் பாதையில் சென்றபோது சிறுமியை கவ்விச்சென்று கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியதால் பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். சிறிது நேரத்தில் நடைபாதையில் மேலும் ஒரு சிறுத்தை வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பதி கோயிலுக்கு அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக பாதயாத்திரை சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கடந்த 11ம் தேதி கொன்றது.  தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க நடைபாதையில் காளிகோபுரம் முதல் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி வரை 30 இடங்களில் நைட் விஷன் டிராப் கேமரா பொருத்தப்பட்டது. மேலும் 4 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.

நேற்று அதிகாலை சிறுமி பலியான இடத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதையடுத்து வனத்துறையினர் உள்ளிட்டோர் உடனடியாக அந்த கூண்டு அருகே விரைந்து சென்று கூண்டில் சிக்கிய சிறுத்தையை பிடித்தனர். இது சிறுமியை கொன்ற சிறுத்தை என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிடிபட்ட சிறுத்தையை பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுமியை தாக்கிய சிறுத்தை பிடிபட்டதால் பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் சிறுத்தை பிடிபட்டதால் பக்தர்கள் வழக்கம்போல் நேற்று மலைப்பாதை வழியாக நடந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் இருந்து மீண்டும் ஒரு சிறுத்தை அதே இடத்தில் வந்தது. இதனைகண்டு அப்பகுதியில் கும்பலாக நடந்து சென்ற பக்தர்கள் அலறி அடித்து கூச்சலிட்டனர். சத்தத்ைத கேட்ட சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. அதை பிடிக்க வனத்துறையினர மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர்.

நடைபாதையில் வந்த கரடி
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சிறுத்தை பீதியில் இருக்கும் நிலையில், நேற்று வாரி மெட்டு நடைபாதையில் பக்தர்கள் செல்லும் பாதையில் திடீரென ஒரு கரடி வந்தது. இதை பார்த்த பக்தர்கள் போட்டோ எடுத்தபடி கூச்சலிட்டனர். பக்தர்களின் சத்தத்தை கேட்ட கரடி மீண்டும் வனப்பகுதிக்கு சென்றுவிட்டது.

பக்தர்களுக்கு பிரம்பு
திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர் தலைமையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மலைப்பாதையில் நடந்து செல்லும் அனைத்து பக்தர்களுக்கு வனவிலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பிரம்பு வழங்கப்படும்’ என்றார்.

சிறுத்தை மீண்டும் வேட்டையாடும் -வன அதிகாரி
ஆந்திர மாநில வனத்துறை கூடுதல் செயலாளர் சாந்தி பிரியா பாண்டே கூறுகையில், ‘கூண்டில் பிடிபட்ட சிறுத்தையின் நகம், ரத்தம் உள்ளிட்டவை சேகரித்து விலங்கியல் மரபணு சோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் சிறுமியை பிடிபட்ட இந்த சிறுத்தைதான் கொன்றதா என்பது உறுதிப்படுத்தப்படும். அவ்வாறு சிறுமியை சிறுத்தை கொன்றது உறுதியானால் அதை வனப்பகுதியில் விடுவது ஆபத்தானது. காரணம் அந்த சிறுத்தை மீண்டும் மனிதர்களை வேட்டையாடும். எனவே பரிசோதனை முடிவின் அடிப்படையில் சிறுத்தையை வனப்பகுதியில் விடுவதா? அல்லது பூங்காவில் வைத்து பராமரிப்பதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

The post திருப்பதி மலைப்பாதையில் சென்றபோது சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது: மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Cheetah ,Tirupati ,Tirumala ,Tirupati mountain trail ,Dinakaran ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி