×

நீட் தேர்வு கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

திருவண்ணாமலை: நீட் தேர்வை ரத்து செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலையில் புகழ்பெற்ற ஐயங்குளம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. தூய்மை அருணை தன்னார்வ அமைப்பின் மூலம் இப்பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மேற்கொண்டுள்ளார். இப்பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தீபத்திருவிழா முடிந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெறும். மேலும் அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற விழாக்களின்போது தீர்த்தவாரி நடைபெறும். இந்த குளம் சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் 15 மீட்டர் ஆழத்திற்கு முழுமையாக அகற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நகரின் வளர்ச்சிக்காக தொடர்ந்து தூய்மை அருணை சார்பில் பணியாற்றி வருகிறோம். ஐயங்குளம் நாய்க்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த குளத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தையும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம். ஆன்மிகத்துடன் தொடர்புடைய குளம் என்பதால் இந்த மண்டபத்தில் நந்தி சிலையை நிறுவுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. நீட் தேர்வு கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றார்.

அப்போது, கிரிவல பாதையில் அசைவ உணவகங்கள் இருக்கக்கூடாது என கவர்னர் கூறியுள்ளாரே? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், உணவு என்பது அவரவரின் விருப்பம் மற்றும் உரிமையை சார்ந்தது. அதில் யாரும் தலையிட முடியாது. அரசும் இதனை கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் அசைவ உணவகங்களை நடத்துவோர், அவர்களாகவே, தாமாகவே முன்வந்து கடையை மூடிவிடுகின்றனர் என்றார்.

The post நீட் தேர்வு கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Minister AV ,Velu ,Thiruvannamalai ,Minister ,AV ,Tiruvannamalai ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...