×

தாராசுரம் தெய்வநாயகி அம்மன் ஆலயம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்:தெய்வநாயகி அம்மன் ஆலயம், ஐராவதேஸ்வரர் கோயில் வளாகம், தாராசுரம் (கும்பகோணம் அருகில்)காலம்: மாமன்னன் இரண்டாம் ராஜராஜனால் (1146-1173 பொ.ஆ) கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலின் சமகால ஆலயமாகக் கருதப்படும் இவ்வாலயத்தின் கட்டுமான காலம் பற்றிய கல்வெட்டுக்குறிப்புகள் இல்லை. நாயக்க மற்றும் மராட்டிய மன்னர்கள் ஆலயத்திருப்பணிகள் செய்துள்ளனர்.

யுனெஸ்கோவின் `சிறந்த வாழும் சோழர் கோயில்கள்’ (Great Living Chola Temples – UNESCO) உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சோழர் கால சிவாலயங்களான தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயம், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

மாமன்னன் இரண்டாம் ராஜராஜனால் (1146-1173 பொ.ஆ) கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலின் சிறப்பான கட்டடக்கலை, உலகப்புகழ் பெற்ற நுண் சிற்பங்களைக்கண்டு வியந்த பலரும், அவ்வாலய வளாகத்தினுள்ளே சற்றே ஒதுங்கி, தனித் திருச்சுற்று மதிலுடன், கோயிலுக்கு வடக்கே தெய்வநாயகி அம்மனுக்காக அமைந்துள்ள தனிக்கோயிலைக்கண்டிருக்க மாட்டார்கள்.

இறைவனின் ஆலயம் அளவுக்கு பிரம்மாண்டமானதாக இல்லாவிடினும், சிற்ப நுணுக்கங்கள், கட்டுமானக்கலை அழகு போன்ற அம்சங்களில் சற்றும் சளைத்ததல்ல இந்த இறைவியின் ஆலயம். ஆலயத்துனுள் நுழைந்ததுமே முன் மண்டபத்தின் இருபுறங்களிலும் உள்ள யாளிகளின் மீதமர்ந்த வீரர்களின் சிற்பங்களின் பேரழகு பிரமிக்க வைக்கிறது.

மண்டபத்திற்குள் ஏறிச்செல்லும் படிகளின் நேர்த்தி, வெளிப்புறச் சுவர்களில் உள்ள சிம்மங்களின் வரிசை, கோஷ்ட தெய்வங்கள், எழில்மிகு நடனப்பெண்கள், காற்றோட்டமளிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கல் சாளரங்கள் போன்ற ஒவ்வொன்றின் அழகியலும், சிற்ப நுணுக்கங்களும் காண்போரின் நெஞ்சைக்கொள்ளை கொள்ளும்.

திரிதள சால விமானம், அர்த்தமண்டபம் மற்றும் முகமண்டபம் ஆகியவற்றுடன் ஒரு முழுமை பெற்ற கோயிலாக விளங்கும் இவ்வாலயம், ஐராவதேஸ்வரர் கோயிலின் சமகாலக்கட்டுமானம் போன்றே காட்சியளித்தாலும், சில ஆண்டுகளுக்குப்பின்னரே அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post தாராசுரம் தெய்வநாயகி அம்மன் ஆலயம் appeared first on Dinakaran.

Tags : Tarasuram ,Amman Temple ,Kungumum Spiritual sculpture ,Deivanayaki Amman Temple ,Airavatheswarar Temple Complex ,Kumbakonam ,Tarasuram Deivanayaki Amman Temple ,Dinakaran ,
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்