×

சைவர்கள் போற்றும் புவனேஸ்வரி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆதியில் எல்லையற்றுப் பரந்து வெட்ட வௌியாக இருந்த இடத்தில், சிவபெருமானின் ஆணைப்படி புவனங்களைப் படைத்தவள் அன்னை பராசக்தியே ஆவாள். சைவர்கள், ஆதி புராணனான சிவபெருமானை சகலபுவனேஸ்வரன் என்றும், அவனது ஆணைப்படி பிரபஞ்சத்தைப் படைத்து வழிநடத்தும் அன்னையை சகல புவனேஸ்வரி எனவும் அழைக்கின்றனர். சித்தாந்த சைவசமயக் கோட்பாட்டின் படி, உலக உற்பத்திக்கான செயல்கள், `அத்துவாக்கள்’ எனப்படும். அத்துவாக்கள் என்பதற்குப் படிப்படியாக இறங்கி வருதல் என்பது பொருள். ஆகமங்கள், அத்துவாக்களை ஆறு என்று பேசுகின்றன. இவை வர்ணம், பதம், மந்திரம், தத்துவம், கலை, புவனம் என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றில், முதலில் சொன்ன வர்ணம், பதம், மந்திரம் என்பன ஒலி வடிவானவை. அதனால், அவை `சப்தப்பிரபஞ்சம்’ என்று அழைக்கப்படும். இவற்றில் வர்ணம் என்பவை எழுத்துக்களாகும். எழுத்துக்கள் கூடி பதங்களை (சொற்களை) உருவாக்குகின்றன. ஆற்றல் மிக்க பதங்கள் மந்திரங்கள் ஆகின்றன. மந்திரங்கள் என்பன உலகை வழிநடத்தும் ஒலிக்கோர்வையும், எழுத்துக்களின் கூட்டமும் ஆகும். இவற்றைப் பின்னர் பார்க்கலாம்.

இதில் இரண்டாவது தொகுதியான தத்துவம், கலை, புவனம் என்பவை காணும் உணரும் பொருளாக இருப்பவை. எனவே, இவற்றைப் பொருட்பிரபஞ்சம் என்பர். இவற்றில் தத்துவங்கள் என்பவை உலகில் இன்ப துன்பங்களை அனுபவிக்க ஏதுவாக இருப்பவை. இவை 96 தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.இவை ஆன்ம தத்துவம் 24, நாடிகள் 10, அவத்தைகள் 5, மலங்கள் 3, குணங்கள் 3, மண்டலம் 3, பிணிகள் 3, விகாரம் 8, ஆதாரம் 6, தாதுக்கள் 7, வாயுக்கள் 10, கோசங்கள் 5, வாயில்கள் 9 என 96 ஆகும்.

இதற்கு அடுத்ததாக இருப்பவை கலைகள் ஆகும். இங்கே இதற்கு நுண்கலைகள் என்றோ வாழ்வியல் இன்பங்களைத் தரும் அறுபத்துநான்கு கலைகள் என்றோ பொருள் கொள்ளக் கூடாது. இவ்விடத்தில் கலை என்பது தொடர்ச்சியை உடைய பகுதிகள், ஒளிரும் பகுதிகள் என்று பொருள்கொள்ள வேண்டும். இவை சாந்தியாதீதகலை, சாந்திகலை, வித்யா கலை, பிரதிஷ்டாகலை, நிவர்த்திக் கலை எனப் பெயர்பெறும்.

இந்த புவனங்களின் தலைவனாக இருப்பதால் சிவபெருமான் புவனேஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். சகலபுவனேஸ்வரர் என்றும் அழைப்பர். புவனேஸ்வரரின் தேவியாக இருப்பதால் அன்னை பராசக்தி சகலபுவனேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். சிவனது ஆணையை ஏற்று அண்ட கோளங்களைப் படைத்து அதில் பல்வேறு படி நிலைகளில் உயிர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இன்பதுன்பங்களை நுகர்ந்து வினைக்கட்டுக்களை சேர்க்கவும் நீக்கவும் உதவும் பரமேஸ் வரியை புவனேஸ்வரி என்று கொண்டாடுகிறோம். சிவாலயங்களில் சிவபெருமானை புவனேஸ்வரர் என்ற பெயரிலும், அன்னை பார்வதியை புவனேஸ்வரி என்றபெயரிலும் எழுந்தருளி வைத்து வழிபடுகின்றனர்.

பாடல் பெற்ற சோழநாட்டுத் திருத்தலமான திருமீயச்சூரில் உள்ள பெருமான் சகலபுவனேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவளது தேவி, அகண்ட வெளியில் உள்ள பால்வெளியைக் குறிக்கும் வகையில் ‘‘மின்னுமேகலையாள்’’ எனப்படுகிறாள். சில தலங்களில் சிவபெருமானுக்கு வேறு பெயர் இருந்தாலும், தேவியின் பெயர் புவனாம்பிகை, புவனாபதி நாச்சியார் என வழங்குகின்றன. திருமாகறல் என்னும் தலத்திலுள்ள அம்பிகை புவனாம்பிகை என்று அழைக்கப்படுகின்றாள்.

செங்கை மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் கடப்பேரி வெண்காட்டீஸ்வரர் ஆலயத்தில் புவனேஸ்வரர் புவனேஸ்வரி என்னும் பெயரில் மகாலிங்கமும், அம்பிகை வடிவமும் இருக்கின்றன.
மேலும், புவனங்களுக்கு வழங்கும் வேறு பெயர்களான அகிலாண்டம், பிரம்மாண்டம், பூவுலகம் எனும் பெயர்களின் பெயரால் அன்னை பராசக்தி அகிலாண்டேஸ்வரி, பிரம்மாண்ட நாயகி, உலகநாயகி, உலகேஸ்வரி, உலகாம்பிகை, லோகநாயகி, சர்வலோகநாயகி எனும் பெயர்களிலும் கோயில் கொண்டுள்ளாள். திருச்சி திருவானைக்காவலில் அகிலாண்டேஸ்வரியாகவும், நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசத்தில் உலகநாயகியாகவும் எழுந்தருளி இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.

தொகுப்பு: அருள் ஜோதி

The post சைவர்கள் போற்றும் புவனேஸ்வரி appeared first on Dinakaran.

Tags : Saivar admir ,Bhuaneswari ,Shiva Peruman ,Admire Bhuaneswari ,
× RELATED நாரதர் திருமாலுக்கு இட்ட சாபம்!