×

2 மாணவர்கள் உயிரிழப்பு எதிரொலி படிக்கட்டுகள் சரிந்த கட்டிடம் இடிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

தாம்பரம், ஆக.12: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், தென்னேரி பகுதியை சேர்ந்தவர் பிரென்ச் ஜெப்ரி தவமணி (23), மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திமோ மில்கி (19), பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (19), சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாய் கவுகன் (19). இவர்கள் 4 பேரும் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்ததும் இவர்கள் 4 பேர் உட்பட 6 பேர் சேலையூர் காவல் நிலையம் எதிரே உள்ள ஏரிக்கரை தெருவில் 3 பைக்குகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ததால், மாணவர்கள் அங்கிருந்த பழைய கட்டிடத்தின் அருகே பைக்குகளை நிறுத்திவிட்டு, அந்த கட்டிடத்தின் படிக்கட்டு கீழே நின்று மழைக்காக ஒதுங்கினர்.

அப்போது சிறிது நேரத்தில் திடீரென அந்த கட்டிடத்தின் படிக்கட்டுகள் பயங்கர சத்தத்துடன் சரிந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில் பிரென்ச் ஜெப்ரி தவமணி, திமோ மில்கி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். அஸ்வின், சாய் கவுகன் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சேலையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உத்தரவின்பேரில் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனால் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உத்தரவின்படி மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த கட்டிடத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தினர்.

கண்ணீர்மல்க அஞ்சலி
உயிரிழந்த கல்லூரி மாணவர்களுக்கு சக மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

The post 2 மாணவர்கள் உயிரிழப்பு எதிரொலி படிக்கட்டுகள் சரிந்த கட்டிடம் இடிப்பு: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Jeffrey Tavamani ,Thenneri ,Walajabad, Kanchipuram district ,Meenambakkam ,Dinakaran ,
× RELATED தாம்பரம் பகுதிகளில் தொடரும் மின்வெட்டு: இரவில் விடியவிடிய மக்கள் அவதி