×

நவகிரக வழிபாடு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனும் பன்னிரண்டு ராசிகள் உடைய மண்டலத்தைப் பற்றிய கணிப்பும் அவற்றுக்குரிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்ற ஒன்பது கோள்களைப் பற்றிய ஈடுபாடும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்களிடம் இருந்தன என்பதனைச் சங்கத் தமிழ் நூல்களில் காணப்பெறும் பாடல்கள் வழி அறியமுடிகிறது. ஆனால், திருக்கோயில் களில் ஒன்பது கோள்களையும் தெய்வ உருவங்களாக அமைத்து வழிபடும் நெறி, கி.பி. 12ஆம் நூற்றாண்டிலிருந்துதான் தொடக்கம் பெற்றது என்பது வரலாற்று உண்மையாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பன்னிரண்டு ராசிகள், ஒன்பது கோள்கள் ஆகியவற்றை ஓவியங்களில் தீட்டி மகிழ்ந்தனர் என்பதனைச் சங்கத் தமிழ் நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் பள்ளிக் கட்டிலுக்கு மேலாகத் திகழ்ந்த மேற்கட்டியில் (திரைச்சீலையில்) ராசி மண்டலம் குறித்த ஓவியம் திகழ்ந்ததாக நக்கீரர், நெடுநல்வாடை (பாடல் அடி 157 – 163) எனும் நூலில் கூறியுள்ளார். அவ்வோவியக் காட்சியில் சந்திரன், உரோகிணியுடன் இணைந்து திகழும் உருவம் எழுதப்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். காரிக்கிழார் புறநானூற்றுப் பாடலில் (எண். 8), ‘‘வீங்கு செலன் மண்டிலம்’’ என ராசி மண்டலத்தை குறிப்பிடுகின்றார்.

தெளிந்த ஒளியையுடைய திங்களை (சந்திரனை) உரோகிணி (விண்மீன்) கூடியதால் உண்டான, எல்லாத் தீங்கும் நீங்கிய சுபநாட் சேர்க்கையிலே திருமண வீட்டை அலங் கரித்து கடவுளைப் பேணி, மங்கல நீராட்டி திருமணம் நிகழ்த்தினர் என்ற செய்தியினை விற்றூற்று மூதெயினனார் என்ற புலவர், அகநானூற்றுப் பாடல் ஒன்றில் (எண். 136) குறிப்பிட்டுள்ளார்.

இளங்கோ அடிகள், கோவலன் – கண்ணகி திருமணம் பற்றிக் கூறும்போது வானூர் மதியம் சகடனையும் நாளான (சந்திரன், உரோகிணியுடன் கூடும் நாள்) சுபநாள் சேர்க்கையில் அவர்கள் திருமணம் நிகழ்ந்ததாகக் கூறியுள்ளார். மேலும், கடவுள் வாழ்த்துக் கூறும்போது ஞாயிறையும் திங்களையும் அவர் போற்றும் பாங்கு சிறப்புடையதாகும்.ராசி மண்டலம் முழுவதும் சுவரில் ஓவியங்களாகத் தீட்டப்பெற்றிருந்ததைப் பரிபாடல் மிகச் சிறப்பாக விவரிக்கின்றது. ‘‘உறவுகொள் உரோகிணியோடு உடனிலை புரிந்த மறுவுதை மண்டிலக் கடவுள்’’ – என ராசி மண்டலத்தில் திகழ்ந்த உரோகிணியோடு கூடிய சந்திரன் பற்றிப் பெருங்கதை எனும் நூல் கூறுகின்றது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ராசி மண்டலம், அம்மண்டலத்திலுள்ள 27 விண்மீன்கள், அவற்றில் திரியும் ஒன்பது கோள்கள் பற்றிய தெளிவான அறிவும், அவற்றைத் தெய்வப்படுத்தி கலையியலில் கண்ட திறமும், தமிழ் மக்களிடம் இருந்துள்ளன என்பதை இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது. சந்திரன், உரோகிணி விண்மீனுடன் கூடும் நாளையே திருமணங்களுக்கு ஏற்ற நாளாகப் போற்றினர் என்பதறியலாம். பின்னாளில் இவ்வழக்கு இல்லை.

சிலப்பதிகாரக் காலத்தில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்பவை பேசப் பெறுகின்றன. பல்லவர் காலந்தொட்டு (கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல்) திருக்கோயில்களில் சூரியன், சந்திரன் ஆகிய இருவருக்கும் தெய்வ உருவங்கள் வைத்து வழிபடும் நெறி இருந்துள்ளது. ஆனால், சூரியன் – சந்திரன் தவிர்த்த மற்ற ஏழு கோள்களுக்கு கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை எந்த ஆலயத்திலும் உருவங்கள் அமைத்து வழிபடும் நெறி பின்பற்றப் படவில்லை என்பதைப் பல்லவர், சோழர் கோயில்களின் அமைப்பால் உறுதி செய்ய முடிகின்றது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் கோளறு பதிகம் பாடி, கோள் துயர் அறுக்கச் சிவபெருமானையே போற்றினார் என்பது அறியலாம். சனி எனும் கோளினால் அல்லல்கள் உண்டு எனும் நம்பிக்கை சங்க காலந்தொட்டே இருந்துள்ளது. ‘‘மைம்மீன் (சனி மீன்) புகையினும் தூமம் தோன்றினும் தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்’’ இடருண்டு என்பதைப் புறநானூற்றுப் பாடலொன்று (எண். 117) கூறுகின்றது. அதுபோலவே, ‘‘கரியவன் (சனி) புகையினும், புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்’’ தீங்கு என்பதனை இளங்கோ அடிகள் சிலம்பில் கூறுகின்றார். வில்லிபுத்தூர் ஆழ்வாரோ, ‘‘விசயன் தம் முற்குதவி செய்யாமல் மகத்திற் சனிபோல் வளைக்குவம் யாம்’’ என்று கூறி சனியின் வலிமை பேசுகின்றார்.

‘‘அடையார் தமக்கு மகத்திற் சனியன்ன சந்திரவாணன் பெற்ற துயரம்’’ தஞ்சைவாணன் கோவையில் (பாடல். 48) பேசப்பெறுகின்றது. வாயு சங்கிதையோ ‘‘மகத்தில் வாழ் சனியாயின’’ எனப் பேசுகின்றது. சுந்தரரோ திருவொற்றியூர் பதிகத்தில் ‘‘மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்’’ என்று கூறி மக விண்மீனுடன் சனி கூடும்போது ஏற்படும் துயர் பொறுக்கவொண்ணாதது என்பதைச் சுட்டிக்காட்டிய போதும் அவர் ஒற்றியூர் இறைவனின் கழல்களையே பணிந்து அல்லல் போக்கிக்கொண்டார் என்பதைச் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தில் குறிப்பிடுகின்றார்.

தில்லைக் கோயிலில் இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 12ஆம் நூற்றாண்டில்) மேலைக் கோபுரம் எடுத்தபோதுதான் ஒன்பது கோள்களுக்கும் கோபுரப் பிறை மாடங்களில் (கோஷ்டங்கள்) உருவச் சிலைகள் அமைத்ததோடு, அவற்றின் பெயர்களையும் அந்தந்தப் பிறை மாடங்களுக்கு மேலாகக் கல்வெட்டாகவும் பொறிக்கச் செய்துள்ளான். தமிழகக் கோயிற்கலை வரலாற்றில் நவக்கிரகங்களுக்கு முதன் முதலாகச் சிற்பங்கள் எடுத்தவன் இரண்டாம் குலோத்துங்கனே ஆவான். குலோத்துங்கனைப் பின்பற்றி அதே தில்லையில் காணப்பெறும் மற்ற கோபுரங்களிலும் அந்தக் கோபுரங்களை எடுத்த கோப்பெருஞ்சிங்கன், கிருஷ்ணதேவராயர் போன்றவர்கள் ஒன்பது கோள்களுக்கும் சிலை எடுத்து வழிபட்டனர்.

மூன்றாம் குலோத்துங்கன், திருவாரூர் ராஜகோபுரத்திலும், சுந்தரபாண்டியன் திருவானைக்கா கோபுரத்திலும் நவகோள் சிற்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். சோழ பாண்டிய அரசர்கள் காலம் வரை நவகோள்கள் கோபுரங்களில் திகழ்ந்தனவேயன்றி, கோயிலின் உள்ளே மண்டபங்களிலோ, கருவறைகளிலோ இடம்பெறவில்லை. சூரியன், சந்திரன் மட்டும் அஷ்டப் பரிவாரங்களில் இருவர்களாக எல்லாக் காலங்களிலும் திகழ்ந்தனர்.

மூன்றாம் இராஜேந்திரசோழன் காலத்தில் சோழராட்சிக்குச் சோதனைகள் ஏற்பட்டன. துன்பத்தில் உழன்ற அவ்வரசன் தனக்குக் கிரக நிலை சரியில்லை என நம்பியதால் தஞ்சாவூர் மாவட்டம் துக்காச்சி (நாச்சியார்கோயில் அருகில்) எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் சனிக்கும் பிரகஸ்பதிக்கும் உருவங்கள் அமைத்து வழிபட்டான் என்பதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு கூறுகின்றது. அக்காலம் தொடங்கி கோள்சாரங்களால் அவதிப்படுவோர் அந்தந்தக் கோயில்களில் பிரீதி செய்யும் வழக்கம் தொடங்கலாயிற்று.

கி.பி. 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து எல்லா சிவாலயங்களிலும் மண்டபங்களில் நவகிரக பிரதிஷ்டை எனும் புதிய வழிபாட்டு முறை தோற்றம் பெறலாயிற்று. ஆகம பிரதிஷ்டை, வைதீக பிரதிஷ்டை எனும் இரு அமைப்புகளில் ஒன்பது கோள் களையும் பிரதிஷ்டை செய்யலாயினர். மண்டபங்களின் விதானங்களில் 12 ராசிக்கூட்டம் அமைத்து அதில் இராசி உருவங்கள் அமைத்தல், ஒன்பது கட்டங்கள் அமைத்து கோள்களின் உருவங்கள் அமைத்தல் எனும் புதிய புதிய சிற்ப அலங்காரங்களையும் உருவாக்கத் தொடங்கினர்.

பல்லவர் காலத்தில் திருச்சிராப்பள்ளி மலையில் தோற்றுவிக்கப்பெற்ற குடைவரைக் கோயிலில் சிவபெருமான், திருமால், பிரம்மன், சூரியன், கணபதி, துர்க்கை, முருகன் என எல்லாத் தெய்வ உருவங்களுக்கும் சிற்பம் இருப்பதைக் காணமுடிகிறது. அறுவகைச் சமயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ள இக்குடைவரைக் கோயிலில் செளரம் எனும் சமயத்தின் தெய்வமாக விளங்கும் சூரிய உருவம் மிகப்பெரியது மட்டுமன்றி, எழிலுடையதும் ஆகும்.

குடந்தைக் கீழ்க்கோட்டம் எனும் கும்பகோணம் நாகேஸ்வரன் திருக்கோயில், பழுவூர் அவநிகந்தர்வ ஈஸ்வர கிருகம் போன்ற சிவாலயங்களின் பிரகாரத்தில் சூரியனுக்கெனத் தனிக்கோயில்கள் உள்ளன. முதலாம் குலோத்துங்கனால் ஆடுதுறைக்கு அருகில் சூரியனார்கோயில் எனும் ஊரில் எடுத்த, குலோத்துங்க சோழ மார்த்தாண்டாலயம் எனும் சூரிய ஆலயத்தினைச் சுற்றி விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் மற்ற எட்டுக்கோள்களுக்கும் கோயில் எடுப்பித்து நவகிரகக் கோயிலாக மாற்றியுள்ளார்.

தில்லைப் பெருங்கோயிலின் மேற்கு மற்றும் கிழக்கு இராஜகோபுரங்களில் உள்ள சூரியன் சிற்பங்கள், நான்கு தலைகள், எட்டுக் கரங்களுடன் நின்ற கோலத்தில் சாயா, உஷா எனும் தேவியர் உடனுறைய காட்சியளிக்கின்றன. சூரிய தேவன் நிற்கும் ஏழு குதிரைகள் பூட்டப்பெற்ற ஓராழித்தேரை அருணன் செலுத்துவதாக இச்சிற்பங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் காணப்பெறும் மிகப்பெரிய கல்லால் ஆன தேர்ச்சக்கரங்களில் 12 ஆதித்தர் சிற்பங்கள் காணப்பெறுகின்றன.

தாராசுரம் திருக்கோயிலில் உள்ள அபூர்வ சூரியதேவனின் சிற்பம், அர்த்தநாரியாக உடலின் ஒரு பாகத்தில் பெண் உருக்கொண்டு திகழ்கின்றது. நான்கு முகங்கள், எட்டுக் கரங்கள் பெற்ற இச்சிற்பத்திற்கு மேலாக ‘‘அர்த்தநாரி சூரியன்’’ என்ற சோழர்கால எழுத்துப் பொறிப்பு உள்ளது. தில்லைக் கோயிலில் முன்பு இடம் பெற்றிருந்து தற்போது செங்கழுநீர் விநாயகர் கோயிலில் இடம்பெற்றுள்ள சூரியன் திருவுருவத்தை ஒத்த வேறு ஒரு சிற்பம் தமிழகத்தில் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை.

நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் ஓராழி ஏழு புரவிகள் பூட்டிய தேரில் சூரியன் நிற்கிறார். அவர்தம் பின்புறம் 12 இதழ்களுடன் கூடிய பெரியதாமரைமலர் விரிந்து காணப்பெறுகின்றது. ஒவ்வோர் இதழிலும் மேஷம் முதல் மீனம் ஈறாகவுள்ள 12 ராசிகளின் உருவங்கள் காணப்பெறுகின்றன. உள் அடுக்காகவுள்ள இதழ்களில் சூரியன் நீங்கலாகவுள்ள எட்டுக் கோள்களின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. சாயா – உஷா சகிதராக சூரிய தேவரையும், எட்டுக்கோள்களையும், 12 இராசிகளையும் ஒரே சிற்பத்தில் இங்கு மட்டுமே காண முடிகின்றது.

கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள செளரபீடம் என்பது மலர்ந்த தாமரை வடிவில் சூரியன் திகழ, ஓராழி பூட்டிய தேரினை அருணன் இயக்க, ஏழு குதிரைகள் இழுத்துச் செல்கின்றன. தாமரைமலரின் பக்கவாட்டில் எட்டுத் திசை நாயகர்கள் அமர்ந்திருக்க, கந்தர்வர்கள் ஆடிப்பாட, சூரியக் கமலம் திகழ்கின்றது.

தில்லைப் பெருங்கோயிலில் திகழும் சந்திரன் உருவத்திற்குக் கீழே சிம்மம் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அமராவதி ஆற்றிலிருந்து எடுக்கப்பெற்ற ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்கமோதிரம் ஒன்றில் காணப்பெறும் ஆண் – பெண் வடிவங்கள், சந்திரன் – உரோகிணியைக் குறிப்பதாக இருக்கலாம் என நம்பமுடிகிறது. இவ்வாறு காலங்காலமாக பல்வேறு வடிவங்கள் நவகிரகங்களையும், பன்னிரு இராசிகளையும் தமிழ் மக்கள் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் படைத்துப் போற்றினர்.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post நவகிரக வழிபாடு appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…