×

மாங்காடு காமாட்சி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஞானிகள் பாதம் பட்ட பூமியெல்லாம் பவித்ரமாவதும், புண்ணிய பூமிகளிலெல்லாம் அவர்கள் பார்வைபடுவதும் அதனால் அவை மலர்வதும், பாரதத்தில் பரம்பரையாய் வரும் விஷயம். அப்படி திருப்பார்வை படர்ந்து மலர்ந்த ஓர் தலம்தான் மாங்காடு. பார்வை பதித்தவர் ஈசனின் அம்சாவதாரமான ஆதிசங்கரர். ஆதிசங்கரர், காலடியிலிருந்து தொடர்ந்து பாரதத்தை பாதம் சிவக்க மூன்று முறை வலம் வந்தார். நம் ஆதியான மதத்தை ஆறாய் வகுத்தார். சுருண்டு கிடந்த சனாதன தர்மம் எனும் இந்து மதத்தை அழகாய் மலரச் செய்தார். மலிந்து கிடந்த மற்ற மதங்களை மறுத்தார். எதிர்த்து வந்தோரை நியாயமான வாதத்தால் வென்றார். சரியான பாதையில் அவர்கள் பாதங்களை பதியச்செய்தார்.

எல்லோர் சித்தத்திலும் சிவனை நிறுத்தினார். அதில் சக்தியை ஒளிரச் செய்தார். மெல்ல இறை பதத்தில் சேர்த்தார். பிறவிப் பெருங்கடலை தாண்டுவித்தார். மெல்ல ஊர் ஊராய் நகர்ந்து தொண்டைமண்டலத்திலுள்ள அந்த மாமரக் காடுகளுக்குள் புகுந்தார். அந்தக் காட்டின் மையப்பகுதி தகித்துக்கொண்டிருந்தது. அது அக்னியின் சூடல்லாமல் ஒரு சக்தியின் உக்கிரமாய், வெப்பம் கமழ்ந்து காட்டை சூழ்ந்திருந்தது. அந்த திருக்கூட்டம் தாண்ட முடியாமல் தவித்தது. சீடர்கள் சங்கரரை பார்த்தார்கள். சங்கரர் வெண்மையாய் சிரித்தார். கண்கள் மூடினார். கருணை பொங்கும் கண்களாய் அம்பாள் சிரித்தாள்.

சீடர்கள் திகைத்தார்கள். ஏதும் புரியவில்லையே என்று சங்கரரை நெருங்கினார்கள். இந்த இடம் ஏன் இவ்வளவு வெப்பமாய் உள்ளது வியந்தார்கள். இதென்ன விசித்திரம் என்று வாய்விட்டுக் கேட்டார்கள். ஆதிசங்கரரையே ஆவலாய் பார்த்தார்கள். சங்கரர் கண்கள் திறந்தார். மெல்ல அந்த திருக்கூட்டத்தைப் பார்த்து உதடு பிரித்து பேச ஆரம்பித்தார்.

ஈசன் உமையோடு கயிலையில் வீற்றிருந்தார். அவரின் முக்கண்களும் பிரபஞ்சத்தின் மீது பதிந்தபடி இருந்தது. அதனாலேயே பிரகாசமாய் இருந்தது. வலது கண் சூரியனைப்போல வெம்மையாகவும், இடது கண் அமுதைப் பொழியும் சந்திரன் போன்று குளுமையாக குளிர்ந்திருந்தது. அதனதன் கிரணங்களை சமச்சீராக வெளிவிட்ட படியிருந்தது. மூன்றாவது கண் ஞானம் எனும் பெருந்தீயை கமழ்ந்தபடி இருந்தது. உமையன்னை ஈசனையே பார்த்தபடி இருந்தாள்.

தம்மில் சரிபாதியாய் விளங்கும் சக்தியை பார் முழுவதும் பதிக்க பேருவகை கொண்டார். மெல்ல உமையன்னை பக்கம் திரும்பினார். சக்தியான பார்வதியும் ஈசனின் கண்களைப் பொத்தினால் என்ன என்று விளையாட்டாய் பொத்தினாள். பிரபஞ்சம் முழுதும் இருள் சூழ்ந்தது. சூரியனும், சந்திரனும் தங்கள் வெளிப்பாடு இழந்து தவித்தார்கள். உயிர்கள் திக்கு தெரியாமல் திரிந்தன. ஈரேழு உலகங்களும் ஸ்தம்பித்து நின்றன.

விளையாட்டு மறைந்து விபரீதமானது. ஈசன் கோபமானார். என் பணி உனக்கு விளையாட்டெனில் நான் யார் என்பதை தெரிந்து கொள்ள பூலோகத்திற்குப்போ. அங்கிருந்து தவம் செய். என் உண்மையான சொரூபம் புரிந்துகொள். அலட்சியம் அறுத்து, அகங்காரம் அழித்து வா என்றார். பார்வதிதேவி பயந்தாள். தன் தவறு புரிந்து பரிதவித்தாள். ஈசனோடு இணைய வேண்டுமே என்று பெருங்கவலை கொண்டாள். பூலோகத்தைப் பார்த்தாள். அந்த அடர்ந்த மாமரங்கள் சூழ்ந்த இருள் காடுகளிடையே மெல்லிய பூவாய் மென்மையாய் வந்திறங்கினாள். ஈசனைப் பிரிந்த ஒரு ஏக்கத்தில் மெல்லியவளாய் மாறியிருந்தாள். அங்கிருந்த ஒற்றை மாமரத்தடியில் நின்றாள்.

மண் திரட்டினாள். அதை ஒன்றாய் குவித்தாள். குவித்ததை ஐந்து பாகமாக்கினாள். அதில் குழிவாய் பள்ளம் செய்து சுற்றிலும் கரை அமைத்து யாக குண்டமாக மாற்றினாள். மாமரத்தைச் சுற்றிலும் நிறுவினாள். ஈசனை நெஞ்சத்தில் நிறுத்தினாள். அவ்விடத்தை வெப்பம் சூழ்ந்தது. அவள் கண்களில் அது ஜோதியாய் ஒளிர்ந்தது. ஐந்து குண்டங்களையும் உற்றுப்பார்க்க குண்டத்தினுள் ஜோதியினின்று தெறித்த சுடர் சட்டென்று வளர்ந்து அந்த மாமரத்தையே வளைத்துக் கொண்டது.

புறத்தில் ஒளிர்ந்த தீ அவள் அகத்தினுள்ளும் வைராக்கியம் எனும் பெருந்தீயாய் திரிந்தது. அடர்ந்து படர்ந்து அம்மையை சூழ்ந்தது. நடுக்குண்டத்தில் தனது இடதுகால் கட்டை விரலால் நின்றாள். அது அக்னியை தொட்டுக்கொண்டிருந்தது. நான்கு விரல்களும் மேலே தூக்கியிருந்தன. வலதுகாலை இடது தொடையின் மேற்புறமாய் பதித்து மடித்து தூக்கினாள். இடதுகை நாபிக்கமலத்திற்கு அருகேயும், வலது கை ஜபமாலையோடு தன்சிரசிற்குமேல் முத்திரைகாட்டி நின்றாள். கண்கள் மேல்நோக்கி ஒருமையாய் இருந்தன. அம்மை ஈசனின் சொரூபத்தை அகத்தில் நிறுத்தினாள். மென்மையாய் கண்களை மூடினாள். அம்மை அசையாது நின்றாள்.

ஆனால் அவள் அகத்தினுள் சுழன்றெழுந்த சக்தி சீறியெழுந்தது. அந்த தவத்தின் உக்கிரம் காட்டையே வெம்மையாக்கியது. காலமில்லாத அந்த தவம் கயிலைநாதனை அசைத்தது. கயிலைநாதன் கருணை கொண்டான். மாங்காடுகளின் வேறொரு புறம் நோக்கினான். மாங்காட்டிலேயே ஈசனை பூஜித்து வந்த சுக்ராச்சாரியாருக்கு காட்சிகொடுத்து அம்மையை மணம் புரிய காஞ்சிக்கு வரச்சொல்கிறார். அம்மையை மணம் புரிந்து தன் அகம் சேர்த்துக் கொண்டார். ஆனால் அந்த பஞ்சாக்னியின் உக்கிரம் தணிக்கப் படாமல் சென்றதால், அம்பாளின் இருப்பு கனன்ற வெப்பமாகவே இருக்கிறது. அதை குளிர்வித்து காமாட்சி அம்மனின் அருளை பருகச்செய்வதே நமது பணி என்று சங்கரர் சொல்லி முடிக்கும்போது சீடர்களின் நெஞ்சு நிறைந்தது. அந்த திக்கு நோக்கி நமஸ்கரித்தனர்.

சங்கரர் அஷ்டகந்தம் எனும் எட்டு மூலிகைகளால் ஆன ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். பிழம்பாய் இருந்த அம்மனின் சாந்நித்யத்தை அமுதமாய் பொழியச்செய்தார். அந்த இடம் குளுமையானது. இன்றும் இத்தலம் மாங்காடு என்றே அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்மன் நிரந்தரமாய் அவ்விடத்தில் அமர்ந்தாள். அருகே வருவோரையும் குளுமைப்படுத்தியது. தபஸ் காமாட்சி மோனநிலையில் தவக்கோலத்தில் இருப்பதால் மூலஸ்தானத்தில் சாந்தமே உருவான ஆதிகாமாட்சியை சுக்ராச்சாரியார் பிரதிஷ்டை செய்தார். தபஸ் காமாட்சி சிலை உருவில் அருள் பாலிக்கிறாள். அருகே வருவோரின் உள்ளத்தை வைராக்கியம் எனும் இரும்புபூண் கொண்டு கட்டுகிறாள்.

மூலத்தான அம்பாள் முகத்தில் கருணை ததும்பி வழிகிறது. அவளின் சந்நதியின் முன் மனம் வானமாய் மாறும். நிர்மலமாய் நிற்கும். நீங்கள் கேட்காமலேயே உங்கள் வேண்டுதல் நிறைவேறும் மகத்தான சந்நதி அது. அம்பாள் முன்பு வெறுமே கைகூப்பி நின்றால் போதும். உங்கள் வாழ்வுதனை அவள் கையில் ஏந்திக் கொள்கிறாள். மெல்ல கோயிலை வலம் வர சப்த கன்னிகளுக்கான தனிச்சந்நதி அமைந்துள்ளது. அம்மனின் மூலத்தானத்தைச் சுற்றிலும் கோஷ்ட தேவதைகள் சூழ்ந்திருக்க அதன் மையமாய் காமாட்சி அன்னை வீற்றிருக்கிறாள். சாக்த வழிபாடு எனும் சக்தி உபாசகர்களுக்கு இக்கோயில் ஒரு தவக் குகை.

குழந்தைப்பேறுக்காய் தொட்டில் கட்டுகிறார்கள். ஆறு வாரம் தொடர்ச்சியாய் குறிப்பிட்ட நாளில் வேண்டிக்கொண்டு வந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம். அதன் நன்றியாய் அம்பாளை தங்கத்தேரில் அமர்த்தி மூலஸ்தானத்தை வலம் வருவது நித்தமும் இங்கு வழக்கமாய் உள்ளது. ஒருமுறை போய் வாருங்கள். உங்களை அவளிடம் கொடுத்து விடுங்கள். அவள் பாதம் பணியுங்கள். இத்தலம் சென்னை பூந்தமல்லியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

தொகுப்பு: கண்ணன்

The post மாங்காடு காமாட்சி appeared first on Dinakaran.

Tags : Mangadu Kamakshi ,
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம்