×

ஆடிக் கிருத்திகை, அழகன் தரிசனம்!

மெ(ம)கா முருகன்

பச்சைமலை முருகன் கோயில் கோபிச்சோட்டிபாளையத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 41 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட மிக பிரமாண்டமான முருகன்சிலை உள்ளது. சுமார் 1600 அடி உயரம் கொண்ட இந்த மலையின் மீது இந்த முருகன் சிலை அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். இந்தக் கோயில் கட்டுவதற்காக மலை அடிவாரத்திலிருந்து கட்டுமானத்திற்குத் தேவையான கல், மண், சிமெண்ட், தண்ணீர் ஆகியவற்றைப் பக்தர்களே சுமந்து சென்று சேர்ப்பித்து திருப்பணி செய்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின், மெகா முருகன் என்று போற்றப்படுகிறார்.

பெண்கள் வழிபடாத முருகன்

திருச்சி – கோவை நெடுஞ்சாலையில், வீரகுமாரசாமி தலத்தில் அமைந்துள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் வித்தியாசமானவர். இவர் கால்களில் பாதக்குறடு அணிந்து உடலில் கவசம் பூண்டுள்ளார். இடுப்பில் கச்சை, உடைவாள், குத்துவாள், கையில் சூலாயுதம், காலச்சக்கரம் தரித்துள்ளார். வீரத்தோற்றத்தில் அவர் கன்னி குமாரனாகக் காட்சி தருவதால், பெண்கள் இவரை வழிபடுவதில்லை. இங்கு வரும் பெண் பக்தர்கள் மூலவரான இவரைத் தரிசிக்காமல் சப்த கன்னியரை மட்டும் வழிபட்டுச் செல்வது வழக்கம்.

அமர்ந்த நிலையில் முருகன்

நாகை மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள திருமங்கலம் திருத்தலத்தில் அமைந்துள்ள சிவாலயத்தில், அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகனைக் காணலாம். 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட இந்த முருகன், வலதுகாலை மடித்தும், இடதுகாலை தொங்கவிட்டும், தியானகோலத்தில் காணப் படுகிறார். கிரீடமகுடம், கழுத்தணி, சூலம் போன்ற தொங்கலணியுடனனும், அபயகரத்துடனும் காட்சி தருகிறார். இது ஓர் அற்புதமான தரிசனம் என்பர்.

முருகன்கோயிலில் சடாரி

பஞ்சவேல் முருகன் கோயில் பல்லடம் மலைப்பாளையம் அருகில் உள்ளது. நடுவில் ஒரு வேலும் அதைச்சுற்றி நான்கு வேல்களும் நடப்பட்டிருக்கின்றன. நடுவிலிருக்கும் வேலை தரையிலிருந்து பெயர்த்து எடுக்க முடியாது. இந்த ஐந்து வேல்களுக்கும் தினமும் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐந்து வேல்கள் இருப்பதால் இக்கோயிலை பஞ்ச வேல்முருகன் கோயில் என்று போற்றுகிறார்கள்.

தாமரைமீது முருகன்

விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ‘வெற்றி முருகன் சந்நதி’ வித்தியாசமானது. இங்கு அருள்புரியும் முருகப் பெருமான், தாமரை மலர்மீது அமர்ந்து ஒரு கரத்தில் வஜ்ரம் கொண்டுள்ளார். வஜ்ராயுதம் இருப்பதால் சக்தியின் அம்சமும், தாமரை மலர்மீது அமர்ந்துள்ளதால் கலைமகள் அம்சமும் கொண்டு திகழ்கிறார். இவரை வழிபட வீரத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கலாம் என்பர்.

சடாரி சாத்தப்படும் முருகன் கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்காவில் அமைந்துள்ளது குன்னத்தூர். இங்கு முருகனை வழிபட நூறு படிகள் ஏறிச் செல்லவேண்டும். சிரித்த முகத்துடன், கையில் தண்டம் ஏந்தி பக்தர்களுக்கு தண்டபாணியாக அருளாசி வழங்குகிறார். இங்கு பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கியதும், பெருமாள் கோயில்களைப் போல சடாரி சாத்தி வாழ்த்துகிறார்கள். இந்த சடாரி அருகிலுள்ள சுனையில் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. திருவண்ணாமலை மற்றும் ஆரணியிலிருந்து போளூர் செல்லும் பேருந்துகளில் சென்று ஆர்.குன்னத்தூரில் இறங்கி அரை கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம்.

பெண் அலங்காரத்தில் முருகன்

கோவை மாவட்டத்தில் உள்ளது சீரவை. இங்கு கோயில்கொண்டு அருள்புரியும் முருகப் பெருமான், திருத்தண்டு ஊன்றிய கோலத்தில் காட்சி தருகிறார். விசேஷ நாட்களில் முருகப் பெருமானை வேடன், ராஜர் மற்றும் பெண் போன்ற கோலங்களில் அலங்காரம் செய்வர். இவற்றில் பெண் கோலத்தில் முருகப் பெருமான் மிக அழகாகக் காட்சி தருவார். இந்தக் கோலத்தில் வழிபட, திருமணத்தடை நீங்கி கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது

லிங்க வடிவில் முருகன்

நெய்வேலிக்கு அருகில் உள்ளது ‘வில் உடையான்பட்டி’ திருத்தலம். இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் மூலவர் முருகப் பெருமான், வேறு எந்தக் கோயிலிலும் காணமுடியாத திருக்கோலத்தில் ‘சிவலிங்க வடிவில்’ கீழே அரையடி உயர ஆவுடையாருடன் காட்சி தருகிறார். மேலும், உற்சவர் முருகப் பெருமான் வில் ஏந்தி திரிசடை தரித்து வள்ளி – தெய்வானையுடன் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார்.

பாவம் தீர்க்கும் முருகன்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரை தரிசித்தால் பாவம் நீங்கும். இங்குள்ள முருகன், ஆற டி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடது கை தொடையில் வைத்தபடியும் உள்ளன.

கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்திலும், மற்றொரு லிங்கம், முருகனின் முன் புறமும் உள்ளன. தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, முருகன் பூஜித்த பர்தரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும். குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக் கூர்மை உண்டாகும். சரவண தீர்த்தம், கங்கை கிணறு என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஏழு நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது.

முருகனை மணம்செய்ய விரும்பிய தெய்வானை தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக் கிழமையில் வழிபடலாம். முதல் படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாகரனைக் கொன்ற பழி கழிந்தாலும் இத்தலம் ‘விடைக்கழி’ எனப்படுகிறது.

சூரபத்மனை முருகன் கொன்றார். ஆரபத்மனின் மகளான இரண்யாசுரன், முருகனுக்கு பயந்து தரங்கம் பாடி கடலுக்குள் ஒளிந்தான். சிவபக்தனான அவனையும் பராசக்தியின் அருளால் முருகன் கொன்றார். அசுரனாக இருந்தாலும், சிவபக்தனைக் கொன்றதால் முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க இங்குள்ள குர மரத்தின் அடியில் தவமிருந்தார்.

இதனால் ‘‘திருக்குராவடி’’ என இத்தலத்திற்கு பெயர் வந்தது. இவரை தரிசித்தால் பாவம் நீங்கும். திருமணத்தடை நீங்கும் வைகாசி, புரட்டாசியில் பக்தர்கள் நடைப்பயணம் வருகின்றனர்.

மூன்று வடிவம் கொண்ட முருகன்

நாமக்கல் அருகிலுள்ள பேருக்குறிச்சியில், கொல்லிமலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் பழநியாண்டவர் மூன்று வடிவில் காட்சி தருகிறார். இதுவரை நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும், இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் மூன்றரை அடி உயரத்தில் தோன்றுகிறார். போகர் இவரைப் பின்பற்றியே பழநியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார். முருகன் வேடன் கோலத்தில் இருப்பதால் தலையில் கொண்டை, வேங்கை மலர்க்கீரிடம், கொன்றை மலர் ஆகியவற்றை சூடியிருக்கிறார். மார்பில் ருத்திராட்ச மாலை, காலில் காலணி, வீர தண்டை என அணிந்திருக்கிறார். இடது கையில் வேலும், இடுப்பில் கத்தியும், வலது கையில் சக்தி ஆயுதம் எனப்படும், வஜ்ரவேலும் தாங்கியிருக்கிறார்.

நான்கு முக முருகன்

திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு முகங்களுடன் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். ‘‘ஓம்’’ என்னும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார், பின்னர், ஈசனின் மகனான கந்தக் கடவுளே, படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர் நான்கு முகங்களுடன் இருந்ததாக கோயில் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யோகநிலையில் முருகன்

முருகப்பெருமான் யோகநிலையில் ஓர் தலத்தில் எழுந்தருளியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குமாரவடி ஸ்ரீஅழகேஸ்வர பெருமான் கோயிலில் யோக நிலையில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இத்தலம் வந்து வழிபடுவோருக்கு ஞானம் சித்திக்கும் என்பர்.

தெய்வங்களின் அருள் பூரணமாக கிடைக்கும்

முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று, இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்குரிய நாளாகவும் அமைந்துள்ளது. ஆரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின் மகளான தெய்வானையை பங்குனியில் மணம் செய்து கொண்டார். இந்த விழா, முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படுகிறது. தர்ம சாஸ்தா அவதரித்தும், சிவபார்வதி, லட்சுமி கல்யாணம் நடந்ததும் இந்நாளில்தான். உத்திர விரதமிருப்பதால் அனைத்துத் தெய்வங்களின் அருள் பூரணமாக கிடைக்கும்.

தொகுப்பு: விஜயலட்சுமி

The post ஆடிக் கிருத்திகை, அழகன் தரிசனம்! appeared first on Dinakaran.

Tags : Adik Krithikai ,ka Murugan Pachaimalai Murugan Temple ,Kopichottipalayam ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…