×

துளசிதாசரும் அக்பரும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முகலாய அரசர் அக்பர் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு அற்புதமான நிகழ்வு. துளசிதாசர் காட்டிலே வாழ்ந்து வந்த காலத்தில், இறந்த ஒரு மனிதனை உயிர்மீட்டார். இந்தச் செய்தியானது நாலா பக்கங்களும் பரவியது. மன்னர் அக்பர் செவிக்கும் எட்டியது. “என்னது இறந்தவரை உயிர் மீட்க முடியுமா? அப்படியும் நடக்குமா? மனிதனுக்கு அத்தகைய ஆற்றல் உண்டா? இறைவனுடைய செயலா! என வியப்பில் ஆழ்ந்தார். இதனால் அக்பர், தாசரை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. எவ்வாறேனும், துளசிதாசரை தன் தர்பாருக்கு அழைத்து வந்து, நேரடியாக அவர் செய்யும் அற்புதத்தைக்கண்டு ரசிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். ஆதலால், தன்னுடைய அமைச்சர்களை அழைத்தார்.

“துளசிதாசரின் பெருமைகளை எல்லாம் அறிய, என் மனம் விழைகின்றது. துளசிதாசரை நம் அரசவைக்கு அழைத்து வாருங்கள்’’ எனக் கட்டளையிட்டார். மன்னரின் கட்டளையை ஏற்று, காவலாளிகள் துளசிதாசரை அழைத்து வந்தனர். மன்னர் முன் நிற்க வைத்தனர். அக்பர், துளசிதாசரின் தெய்வீகப் பொலிவைக் கண்டும், அக்கண்களின் ஒளி வீசும் பிரகாசத்தைப் பார்த்தும், பிரமித்தார்.

இப்படியும் ஒரு தேஜஸா என ஆச்சரியப்பட்டார். “உங்களைபற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ராமனின் அருளாலும், உங்களின் அருளாலும், இறந்தவரின் உயிர் மீட்டது போல, என்னுடைய அரசவையிலும் ஒரு அற்புதத்தை நீங்கள் நிகழ்த்த வேண்டும். அதை நான் கண்குளிரக் காணவேண்டும்’’ என்று அக்பர் கேட்டுக்கொண்டார். மன்னரின் பேச்சைக் கேட்டு, துளசிதாசர் புன்னகைத்தார்.

“செகண்ட் ஷா, நீங்கள் மக்களின் நலனைக் காக்கும் மாமன்னர். அவர்களின் நலனுக்காகப் பாடுபடுபவர் என்றாலும், மண்ணில் பிறந்தவர்கள் இறைவனுக்குச் சொந்தமானவர்கள். இறைவனுடைய லீலைகளை யாரும் அறிய மாட்டார்கள். அவ்வாறு இருக்க, நான் என்ன அற்புதம் செய்வேன்.’’ என்றார்.

“நான் கேள்விப்பட்டது நிஜமல்லவா? மக்கள், உங்களைத் தெய்வம் என்று போற்றுகிறார்கள்’’

“நான் சாதாரணமான, உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்’’ என்று தன்னடக்கத்துடன் பேசி, எனக்கு ஒன்றும் தெரியாது என்றார். சினம்கொண்ட அக்பர்,“இறந்தவரை எப்படி உயிர் கொடுத்து மீட்டெடுத்தாயோ.. அதுபோன்ற செயலை, நீ.. இங்கும் செய்ய வேண்டும் என்று உத்தரவிடும் தோரனையில் கூறினார்.“அது என்னால் முடியாது. அந்த செயலைச் செய்தது நான் அல்ல, என் ராமன் மனது வைத்தால் மட்டுமே அத்தகைய அதிசய நிகழ்வுகள் நடக்கும். எனக்கு எதுவும் தெரியாது’’ என்று மீண்டும் மீண்டும் வாதிட்டார், துளசிதாசர்.

மன்னர், வெகுண்டு எழுந்து, “யார் அங்கே… தாசரைச் சிறையில் அடையுங்கள்’’ என்று அக்பர் உத்தரவிடவே, ஃபதேபூர் சிக்கிரி சிறையில் தாசரை அடைத்தார்கள். அடைத்ததுமட்டுமல்லாது, காவலர்கள் துன்புறுத்தல்களையும் செய்ய தொடங்கினர். இதனைக் கண்ட மக்கள் அனைவரும், வேதனை அடைந்தனர். ஓர் நல்ல மகானை சிறையில் அடைத்து துன்புறுத்துவது சரியா? இதனால், என்ன விளையுமோ என அஞ்சினர். மன்னரின் செயலைக் கண்டு எவ்விதமான வெறுப்போ, மனவருத்தமோ அடையவில்லை, துளசி தாசர். இது அத்தனையும் ராமனின் செயலே என எண்ணினார். இரு கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார்.

“நீயாக விரும்பி நடத்துகின்ற செயல்தானே அற்புதமாக அது இருக்கும். நான், இதைச் செய் என்று கேட்கின்ற பொழுது நீ.. செய்துவிடுவாயா? அல்லது, நான் கேட்டு நடக்கும் அற்புதம், அது என்ன அற்புதமாக இருக்கும்? அது வெறும் நிகழ்வாகத்தானே இருக்க முடியும்!’’ என்று தியானத்தின் மூலமாக ராமனிடம் உரையாடினார். அச்சமயம், துளசிதாசர் ஆழ்ந்த பக்தியில் திளைத்திருந்தார். ராமநாமம் ஜெபித்தார். அனுமன்மீது பல பாடல்களைப் பாடினார். அனுமனின் மீது கொண்ட பக்தி பரவசத்தால் “அனுமன் சாலிசா’’ என்ற நூல் இயற்றப்பட்டது. சிறைச்சாலையில்,

40 நாட்கள் இப்பாடலைப் பாடினார். அது முடியும் தறுவாயில் மிக அற்புதமான சாகசம் ஒன்று நடந்தது. அக்பர் ஆட்சி செய்த நகரம் முழுவதும் குரங்குப் படை புகுந்தது. எங்கு பார்த்தாலும் குரங்குகள். எங்கு திரும்பினாலும் குரங்குகளின் சேட்டைகள். அரண்மனை, அந்தப்புரம், கடைவீதிகள், தோட்டதுரவுகள், மரங்கள், தெருயிடங்கள், என எல்லா இடங்களிலும்குரங்குகள். `எங்கெங்கு காணினும் சக்தியடா…’ என்ற பாரதிதாசன் பாடலைப் போல, எங்கு திரும்பினாலும் குரங்குகளின் அட்டகாச சேட்டைகள். மக்கள் அலறி யடித்து ஓடத் தொடங்கினர்.

இதனைக் கண்ட அக்பர், செய்வது தெரியாது குழப்பம் அடைந்தார். சில நாட்கள் கடந்தன. ஹஜித் என்ற ஒரு பெரியவர், “ஆஹா.. அற்புதம்… துளசிதாசரின் மகிமையே மகிமை. என தாசரை பாராட்டினார். “அற்புதம் நிகழவேண்டும் என்று மன்னர் கேட்டாரே, இதோ.. அற்புதம் நடந்துவிட்டது. ராமனின் மனம் கனிந்துவிட்டது. ஒவ்வொரு மக்களுக்கும் `ராம தரிசனம்’ கிடைத்துவிட்டது. ராமதூதனுடைய அவதாரமான குரங்குகள் படையெடுப்பு’’ என்று மனம் உருகினார். மன்னரிடம் சென்று, “செகண்ட் ஷா… நீ கேட்ட அற்புதத்தை துளசிதாசர் நடத்திக் காட்டிவிட்டார். எனவே தாசரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

அடுத்த நொடியே.. மக்கள் கூட்டம் மன்னரின் அரண்மனை முன்பாகக் கூடி நின்றனர். “குரங்குகளின் தொல்லை தாங்கமுடியவில்லை. எங்களுக்கு, மிகவும் தொந்தரவு செய்கின்றனர். குழந்தைகளும் மிகவும் அச்சமாக இருக்கின்றார்கள். அதனால், தாசரை விடுதலைசெய்து, எங்களைக் காத்தருள வேண்டும். என்று கேட்டுக்கொண்டனர்.இதனால், அக்பர் மந்திரிகளிடம் கலந்தாலோசித்தார். மந்திரிகளும், “மன்னரே… மக்கள் கூறுவது உண்மைதான். தாங்கள் உடனடியாக தாசரிடம் சென்று மன்னிப்பு கேட்டு அவரை விடுதலை செய்தால் மாற்றம் ஏற்படலாம்’’ என்றனர். துளசிதாசரை விடுதலை செய்ய மன்னர் உத்தரவிட்டார். துளசிதாசரை விடுதலை செய்து அரசவைக்கு அழைத்து வந்தனர்.

“தாசரே.. எங்கு பார்த்தாலும் குரங்குகள் தொல்லை தாங்க முடியவில்லை. மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் துயரத்தைப் போக்க, குரங்குகள் இங்கிருந்து மீண்டும் காட்டுக்குச் செல்ல வேண்டும். அதற்குத் தங்களுடைய உதவி தேவைப்படுகிறது’’ என்று வணங்கி கேட்டுக் கொண்டார், மன்னர்.

அவர் கூறியதைக் கேட்டு எவ்விதமான பதிலும் அளிக்காமல், ராமனைத் தியானித்து, “அற்புதத்தை நிகழ்த்தும் வாயுபுத்திரனே.. மக்கள் துயரத்தை நீக்குக’’ என்று கண்களை மூடிக்கொண்டார். அடுத்து என்ன நடக்குமோ என மக்கள் ஆர்வத்தோடு கூடியிருந்தனர். துளசிதாசர் தியானத்தில் ஆழ்ந்திருந்த பொழுது, ஆங்காங்கே இருந்த குரங்குகள் மாயமாக மறைந்தன.

இதனை கண்டு மக்கள், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். ஒரு நொடியில், குரங்குகள் மறைந்ததை எண்ணி, துளசிதாசரின் மகிமையை அக்பர் உணர்ந்தார். ராமனின் பெருமையை அறிந்தார். அன்று அவர் எழுதிய “அனுமன் சாலிசா’’ இன்றுவரை, அனைத்து இல்லங்களிலும் படித்துவரப்படுகின்றது. அதைப் படிக்கின்ற பொழுது, இல்லத்தில் நிம்மதியும் ராமபிரானின் அருட்கடாட்சமும் கிடைக்கும் என்பதில் துளிகூட ஐயமில்லை.

தொகுப்பு: பொன்முகரியன்

The post துளசிதாசரும் அக்பரும் appeared first on Dinakaran.

Tags : Tulsidasar ,Akbar ,Mughal ,Emperor ,
× RELATED 522 தங்க தகடுகளில் மிளிரும் ராமாயண கதை அயோத்திக்கு அர்ப்பணிக்கும் பக்தர்!!