×

காலமெல்லாம் காத்தருளும் கந்தன்

காவளூர்

சோழ மன்னர்கள் நல்லாட்சி புரிந்து நாட்டை தழைத்தோங்கச் செய்த காலமது. வீராதிக்கம் புரிந்த அவர்கள், பக்தி மணத்தையும் கமழச் செய்தார்கள். அவர்களில் முதலாம் பராந்தகச் சோழன், தன் ஆட்சி அதிகாரங்களோடு தெய்வ நம்பிக்கையையும் சிறப்புற பரப்பினான். மன்னனுக்கு தேவையான ஆலோசனைகளை அளித்தவரே வில்லவப்பேராயன் எனும் முதன்மை மந்திரி. இவர் தஞ்சையை அடுத்த திருக்காவளூர் என்றழைக்கப்பட்டு தற்போது காவளூராக மருவிய கிராமத்தில் பிறந்தவர்.

மன்னனுக்கு ஆலோசனைகள் சொல்வது ஒரு பக்கம் இருந்தாலும், சிவநெறிச் செல்வராகவும் திகழ்ந்தவர் வில்லவப்பேராயன். தான் உண்ணாதிருந்தாலும், உறங்காதிருந்தாலும், ஈசனை வணங்க மட்டும் மறக்காதிருந்தார். தஞ்சையின் எல்லைக்குட்பட்ட அனைத்து சிவாலயங்களையும் தினமொரு ஆலயமாக சென்று வணங்கினார். தன் அதிகாரத்தை ஆன்மிக திருப்பணி செய்ய பயன்படுத்தினார். கோயில் விளக்கெரிய எண்ணெய் வாங்குவது, மதில் சுவர் கட்டித் தருவது என்று சிவபக்தியில் சிறந்து விளங்கினார். இவற்றிற்கு ஆதாரமாக திருச்சோற்றுத்துறை ஓதனவனேஸ்வரர் மற்றும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில்களுக்கு அவர் சென்று வழிபட்டதை கல்வெட்டுகள் பேசுகின்றன.

கோயிலுக்கு தேவையான திருப்பணியையும், கோயில்களை பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகளையும் செய்தார். சிவநெறிச் செல்வனான வில்லவப்பேராயனை சிவபுத்திரனான ஆறுமுகப் பெருமான் ஆட்கொண்டார். முதலாம் பராந்தக மன்னனின் அரச குருவான வில்லவப்பேராயன், தன் சொந்த ஊரான திருக்காவளூரில் தன்னுடைய இஷ்ட தெய்வத்திற்கென்று கோயில் கட்ட வேண்டுமென்று, பேரவா கொண்டிருந்தார். மன்னனிடம் இதுபற்றி கேட்டபோது, “இது உங்கள் ஊர்; உங்களுக்கு பிடித்த கோயிலை உங்கள் விருப்பப்படி கட்டிக் கொள்ளுங்கள்” என்று உடனே அனுமதி அளித்தான்.

வில்லவப்பேராயனோ திக்குமுக்காடிப்போனார். இவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. கோயிலின் வேலையை அன்றே தொடங்கினார் அமைச்சர். அதோடு, கோயில் வேலையே தன் முதல் கடமை என்று இன்னும் ஆழ்ந்து போனார். கோயிலை கட்ட திட்டமிட்டபோது வில்லவப்பேராயன், ‘குமரன் குடி கொண்ட கோயில்கள் எல்லாம் குன்றின் மீதல்லவா இருக்கின்றன; ஆனால், தஞ்சையின் எல்லைக்குட்பட்ட பகுதி எங்கும் குன்றே இல்லையே’ என்று கவலையுற்றார். ஆனால், அவருக்குள் திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது.

இங்கே குமரனுக்கு குன்று இல்லாவிட்டால் என்ன. நாமே ஒரு குன்றை உருவாக்குவோம் என்று தீவிரமாக யோசித்தார். ஜோதிடத்தில் சிறந்தவரான பேராயருக்கு ராசிகளையே படிக்கட்டுகளாக்கி அவற்றை ஆளும் ஆறுமுகத்தானை உச்சியில் அமர்த்தலாமே என்று முற்றிலும் புதியதோர் சிந்தனை உதித்தது. தரை தளத்திலிருந்து பன்னிரண்டு படிகள் அமைந்து ஒரு மாடக் கோயில் போல ஆலயம் உருவானது. அது தவிர இந்த பன்னிரண்டு ராசிப்படிகளையும் பிரதிஷ்டை செய்தபோது, அந்தந்த ராசியை சேர்ந்தவரையும் தேடிப்பிடித்து அவர் மூலமாக ஒவ்வொரு கல்லையும் நிர்மாணித்தார்.

ஒவ்வொரு சித்திரை ஒன்றாம் தேதியன்றும் மேஷம் முதல் மீனம் வரையிலான படிகளை மெழுகி கோலமிட்டு நெய்விளக்கேற்றி வணங்குகின்றனர். ஆறுமுகனுக்கு ஆறு மண்டபங்கள் அமைக்கப்பட்டு ஆறாவது மண்டபத்தில் பெருமானை எழுந்தருள வைத்தார். ராசிப்படிகளில் மேலேறும் போதே கிரகங்களின் ஆதிக்கத்திற்கு அதீதமானவனாக ஆறுமுகன் விளங்குகிறான் என்பதனை உணரமுடிகிறது. ஆறுமுகப் பெருமான் ஆறாவது மண்டபத்தில் வள்ளி-தெய்வானையோடு அமர்ந்திருக்கும் கோலம் காண நமக்குள்ளும் ஒரு கம்பீரம் பிறக்கிறது.

இரண்டாம் மண்டபத்தின் தென்பகுதியில் வடக்கு நோக்கி, கரங்கள் சேவித்தபடி நின்ற நிலையில் வில்லவப்பேராயனின் சிற்பம் காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது. முருகப் பெருமானுக்கு பல்வேறு தொண்டுகள் புரிந்து சென்றுள்ளார் அருணகிரிநாதர். அதனால் அவருக்கும் இக்கோயிலில் அழகியதோர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் தென்புறத்தில் காசி விஸ்வநாதரும், வடபுறத்தில் விசாலாட்சி அம்பாளும் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர். அன்னை விசாலாட்சிக்கு எதிரே மேற்கு நோக்கி சூரியனும், பைரவரும் அருள்பாலிக்கின்றனர்.

கந்தப் பெருமான் செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை ஆவார். அங்காரக தோஷம் எனப்படும் செவ்வாய் தோஷத்தால் வரும் திருமணத் தடையையும், ரத்த சம்பந்தமான நோயையும் தீர்த்து வைப்பார். பன்னிரண்டு ராசிக்காரர்களும் அவரவர் பிறந்த ராசிக்குரிய படிக்கட்டில் அகல் தீபம் ஏற்றி வழிபட்டால் அவரவர் ராசியை தொற்றியுள்ள துர்பலன்கள் முற்றிலுமாக விலகி, நற்பலன்கள் முழுமையாக அடையப் பெறுவார்கள் என்பது பல பக்தர்களின் அனுபவபூர்வமான நம்பிக்கை.

பிதுர்காரகன் என்றழைக்கப்படும் சூரியனும், மாதுர்காரகனான சந்திரனும் பல கோயில்களில் காணப்படுவர். ஆனால், இத்தலத்தில் பிதுர்காரகனான சூரியன் மட்டுமே உள்ளார். அதனால், பிதுர்கர்மா செய்ய வேண்டியவர்கள் வெட்டாற்றங்கரையில் ஆடி, தை மாத அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு காசி விஸ்வநாதர், விசாலாட்சியை வணங்கிய பின், ஆறுமுகப் பெருமானை வழிபட்டால், முன்னோர்கள் திருப்தியடைவார்கள், குலத்தை தழைக்கச் செய்வார்கள் என நம்பப்படுகிறது.

தஞ்சையிலிருந்து நெடார் வழியாக 16 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். தஞ்சைக்கு அருகே அய்யம்பேட்டை கோவிலடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள அகரமாங்குடி வழியாகவும் சென்று காவளூரை அடையலாம். தஞ்சையிலிருந்து தனி வாகனத்திலும் செல்லலாம்.

The post காலமெல்லாம் காத்தருளும் கந்தன் appeared first on Dinakaran.

Tags : Kandan ,Kavalur Chola ,
× RELATED கந்தனுக்கு அரோகரா… வெற்றிவேல்...