×

15ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்கள் சிற்பம் கண்டெடுப்பு

பண்ருட்டி, ஆக. 8: பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி சத்திரம் என்ற ஊரில் தென்பெண்ணை கரையோரம் நேற்று முன்தினம் மொசகாத்தம்மன் கோயில் கட்டுவதற்காக மண் எடுத்தபோது மண்ணுக்கடியில் மூன்று கற்சிற்பங்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைகல்லூரியில் முதுகலை வரலாறு படிக்கின்ற இதே ஊரைச் சேர்ந்த மாணவர்கள் குமரகுரு மற்றும் சூர்யா ஆகியோர் வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் தொல்லியல் முனைவர் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த ஆய்வாளர்கள் இம்மானுவேல் மற்றும் ரமேஷ் ஆகியோர் கண்டெடுக்கப்பட்ட கற்சிற்பத்தை ஆய்வு செய்து அவை 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்களின் சிற்பம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் தென்பெண்ணை கரையோரம் உள்ள நிலத்தில் கோயில் கட்டுவதற்காக ஆற்றில் கரையில் மண் எடுத்தபோது மூன்று கற்சிற்பங்கள் கிடைத்துள்ளது. இச்சிற்பம் 15ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர காலத்தை சேர்ந்த சப்தமாதர்களின் சிற்பம் என ஆய்வில் கண்டறிந்தோம். சப்தமாதர்கள் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, போன்றவராவர். சப்தமாதர்களுக்கு தொடக்க காலத்தில் படிமங்கள் ஏதும் உருவாக்கப்படாமல் ஏழு கற்களை பிரதிஷ்டை செய்து கடவுளாக எண்ணி வணங்கினர்.

முற்கால சோழர்கள் தாங்கள் எடுப்பித்த சிவாலயங்களில் அஷ்ட பரிவார தெய்வங்கள் என்று பெயரிட்டு சூரியன், சந்திரன், சப்தமாதர்கள், கணபதி, முருகன், மூத்ததேவி, சண்டிகேஸ்வரர், பைரவர் என அனைவருக்கும் திருஉருவம் செய்து தேவகோட்டத்தில் (கருவறை சுவற்றில்) அமைத்தனர். சோழர்கள் தாங்கள் எடுப்பித்த கோயில்களில் அனைத்திலும் சப்தமாதர்களுக்கு திருமேனி எடுத்து சிறப்பித்தனர்.
பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் கண்டெடுத்த சப்தமாதர்கள் மகேஷ்வரி, பிராமி, மற்றொரு சிற்பம் முகம் முற்றுபெறாத நிலையில் அடையாளம் காண முடியாமல் உள்ளது. மகேஷ்வரி, பிராமி சிற்பங்கள் அவரவர்களுக்குரிய ஆயுதங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சியளிக்கிறார்கள். கண்டெடுத்த சிற்பங்கள் கை, முகம் போன்றவை சிறிது சிதைந்த நிலையில் உள்ளது என்று தெரிவித்தனர்.

The post 15ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்கள் சிற்பம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Saptamadars ,Panruti ,Mosakathamman ,Baithambadi Chatram ,Tenpenna ,
× RELATED ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை