×

வற்றாத வாழ்வருளும் வருணன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பூமண்டலத்தின் எட்டு திசைகளிலும் வானிலும் பாதாளத்திலும் இருந்து அதைக் காவல்புரியும் தேவர்கள் தச திக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கிழக்கில் இந்திரன், தென்கிழக்கில் அக்னி, தெற்கில் யமன் தென்மேற்கில் நிருதி, மேற்கில் வருணன், வடமேற்கில் வாயு, வடக்கில் குபேரன், வடகிழக்கில் ஈசானன் ஆகாயமான ஊர்த்துவ திசையில் பிரம்மன், பாதாளத்தைத் தாண்டியுள்ள அதே திக்கில் விஷ்ணு ஆகியோர் இருந்து உலகைக் காவல் புரிகின்றனர். இவர்களில் ஆகாய திக்கு, பாதாள திக்கு ஆகியவற்றை நீக்கிவிட்டு மற்ற எட்டுத் திசைபாலகர்களை ஒன்றாக வைத்து அஷ்டதிக்குப் பாலகர்கள் என்று கொண்டாடுகின்றோம். இங்கே வடமொழிச் சொல்லான பாலகன் என்பதற்கு பாதுகாவலன் காவலன் என்பது பொருள்.

அதில் மேற்கில் வாழும் வருணன் கடலுக்கு அடியில் பெருஞ்செல்வத்தை வைத்துள்ளான். நாம் வழக்கத்தில் மகாலட்சுமியையும் வடதிசை பாலகனான குபேரனையும் செல்வத்திற்கு அதிபதியாகக் கூறுகின்றோம். ஆனால் அவர்களைவிட பலகோடி மடங்கு செல்வம் படைத்தவன் பேரரசன். சப்த சாதரங்களில் அரசர்கள், நதிப்பெண்கள், தீர்த்தபாலகர்கள் யாவரும் அவனுடைய ஆணைக்குக் கட்டுப்படுகின்றனர்.

கடல்நீர் சூரியனாலும் கடலில் உள்ள அக்னியாலும் ஆவியாக்கப்பட்டு மேகமாக்கி விண்ணில் செலுத்தப்படுகின்றது. அந்த மேகங்கள் பூமிமேல் பரவி நின்று மழையாகப் பொழிந்து ஆறுகள், நதிகள், குளங்கள், குட்டைகள் என்று நீரைப் பெருக்குகின்றது. உயிர்கள் வாழவும் இயற்கை செழிக்கவும் நீரே ஆதாரம் என்பதால், நீரின் கடவுளும் அவர்களின் பெருங்கடவுளுமான வருணன் வழிபடப்படுகின்றான். வருணன், சலங்களின் அதிபதியாதலின் சலபதி என்றும் பாசத்தை ஆயுதமாகக் கொண்டுள்ளதால் பாசதரன் என்றும் நதிகளின் தலைவனாக இருப்பதால் நதிகளின் கணவன் என்றும் பெருஞ்செல்வத்தின் அடையாளமான தண்ணீரைக் கொண்டுள்ளதால் புனற்செல்வன் என்றும் அழைக்கப்படுகிறான் என்று பிங்கல நிகண்டு கூறுகின்றது. தமிழ் இலக்கியங்கள் நிலத்தை ஐவகையாகப் பகுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகைப்படுத்தியுள்ளது.

மலையும் மலையைச் சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திற்கு முருகனும், காடும் காட்டைச் சார்ந்த இடமான முல்லை நிலத்திற்குத் திருமாலையும் வயலும் வயலைச் சார்ந்த இடங்களான மருத நிலத்திற்கு இந்திரனையும் கடலும் கடலைச் சார்ந்த இடமான நெய்தல் நிலத்திற்கு வருணனையும் பாலை நிலத்திற்கு துர்க்கையையும் கடவுளராகக் கொண்டுள்ளனர். நெய்தல் நிலக்கடவுளான வருணன் கடல்களின் அதிபதியாவான். அவன் கடலுக்கடியில் அமைந்துள்ள பட்டினத்தில் வசிக்கின்றான். அளவற்ற செல்வங்கள் நிறைந்து கிடக்கும் அந்த பட்டினத்தை பெரிய மகரமீன்கள் காவல்புரிகின்றன. அதனால் அது `மகராலயம்’ எனப்படுகின்றது.

அவனது மகள் வாருணி எனப்படுகிறாள். அவன் ஏழுமுடிச்சுகளை உடையதும் ஏழுதலைப் பாம்பாகவும் இருக்கும் பாசாயுதத்தை ஏந்துகின்றான். அதற்கு வருண பாசம் என்பது பெயர். சமய உலகம் போற்றும் நவரத்தினங்களில் இரண்டானமுத்தும் பவளமும் கடலில் இருந்தே கிடைப்பதாகும். நெல்வயல், மூங்கில், யானையின் மத்தகம் போன்ற இடங்களில் இருந்து முத்துக்கள் கிடைத்தாலும் கடலில் இருந்து கிடைக்கும் முத்தே சிறந்ததாகக் கொள்ளப்படுகிறது. கடல்மீது பேய்களும் ஆவிகளும் பூதங்களும் உள்ளன. அவை வருணனுக்குக் கட்டுப் பட்டு பிறரை வருத்தாமல் வழிவிட்டுச் செல்கின்றன.

கடல் பயணம் மேற்கொள்பவர்கள் கடலில் வாழும் பெரிய திமிங்கிலம் போன்ற விலங்குகள், நீர்மீது வாழும் பெரும் பறவைகள் இயற்கைச் சீற்றமான இடி மின்னல், பேரலைகள் பெரும்சுழல் முதலியவற்றாலும் கடற்கொள்ளையர் தீவுவாசிகள் போன்றோராலும் தீமையும் துன்பங்களும் உண்டாகாதிருக்கவும் வியாபாரம் வெற்றியுடன் நடைபெற்று பெருத்த செல்வத்துடன் திரும்பி ஊர்வந்து சேரவும் வருணனை வழிபட்டனர்.

சிவபெருமானைக் குறிக்கும் வகையில் சிவலிங்கத்தையும் முருகனுக்குப் பதிலாக வேலையும் காளி, பைரவர் திருமேனிகளுக்குப் பதிலாக திரிசூலத்தையும் பூதங்கள் கருப்பர்களுக்குப் பதிலாக தண்டத்தையும் வைத்து வழிபடுவதைப் போல வருணனைக் குறித்து வழிபடும் வேளையில் சுராமீன் நட்டு வழிபட்டனர்.கடற்கரை பெருவெளியில் நிறைமதியான பூரணசந்திரனின் ஒளிக்கிரணங்களால் பேரழகு பெறுகின்றது. கடலைப்போற்றி வாழ்வு நடத்தும் பரதவர்கள் சுராமீனின் கொம்பை நட்டு அதனை வருணனாகப் பாவித்து கள்ளும் மீனும் மதுவும் மாமிசமும் படைத்து வழிபட்டனர் என்ற செய்தியைப் பட்டினப்பாலைகூறுகின்றது. கடற்கரைப் பெரியமணற் பரப்பை இலக்கியங்கள் பெருமணல் உலகம் என்று போற்றுவதுடன் அதன் தலைவனாக வருணன் சொல்லப்படுகிறான்.

வருணனோடு மித்ரன் வேதங்கள் இணைத்துப் பேசுகின்றன. இவர்களை மித்ர, வருணன் என்று அழைக்கின்றனர். ரிக்வேத சூத்திரங்கள் இவர்களைப் பெரிதும் புகழ்கின்றன. மழை வேண்டும் பிரார்த்தனைகளை வருணனை நோக்கியே செய்யப்படுகின்றன. இதனை வருணஜபம் என்பர். இவனது பட்டினம் ஸரஸ்வதுபுரம் என்றும் நாகலோகம் என்றும் வருண லோகம் என்றும் அழைக்கப்படுகிறது. சரஸ் என்பதற்கு பெரிய நீர்நிலை என்றும் இவர் வெண்மையான நிறம்கொண்டவர். இவர் ஜலாதிபதி மேகாதிபதி என்று அழைக்கப்படுகிறார். இவருடைய தேதி பத்மினி காளகண்டி என்பவர்களாவர். இவருடைய பட்டினத்தில் ஏராளமான நாக கன்னியர் பணிப்பெண்களாக இருக்கின்றனர். மூங்கிலரிசியால் வடிக்கப்பட்ட சாதம், தயிர்சாதம் ஆகியன நிவேதனங்களாகும்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

The post வற்றாத வாழ்வருளும் வருணன் appeared first on Dinakaran.

Tags : Varuna ,earth ,
× RELATED மழை வேண்டி வருண யாகம்