கோவை, ஆக.6: சேலம் ரயில்வே கோட்டத்தில் அனங்கூர் முதல் ஊட்டி வெலிங்டன் வரை 92 ரயில் நிலையங்கள் உள்ளது. இதில் பொம்மிடி, கோவை, வடகோவை, காவேரி, தாசம்பட்டி, கொடுமுடி, மொரப்பூர், மேட்டுப்பாளையம், சேலம், சேலம் மார்க்கெட், சங்ககிரி, கருப்பூர், கரூர், சோமனூர், சேலம் டவுன், தொட்டிபாளையம், திருப்பத்தூர், திருப்பூர், ஊத்துக்குளி பகுதியில் தலா ஒரு நடைமேம்பாலமும், போத்தனூரில் இரு நடை மேம்பாலமும் உள்ளது. 92 ரயில் நிலையங்களில் 71 ரயில் நிலையங்களில் நடை மேம்பால வசதி கிடையாது. வடகோவை, மேட்டுப்பாளையம், குன்னூர், போத்தனூர், திருப்பூர், திருப்பத்தூர், ஆத்தூர், கரூர் உள்ளிட்ட பெரிய ரயில் நிலையங்களில் சப்வே உள்ளிட்ட கூடுதல் வசதிகள் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சேலம் ேகாட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள் வழியாக தினமும் 300க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. பல லட்சம் மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பெரிய ரயில் நிலையங்களில் கூட நடை மேம்பாலம், சப்வே அமைக்க ரயில்வே நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. ரயில் பாதையை கடப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. ரயில் பாதையை கடக்காமல் நடை மேம்பாலத்தை பயன்படுத்தவேண்டும் என்ற அறிவிப்பு மட்டும் பரவலாகி வருகிறது. ரயில் நிலையங்களில் பெரும்பாலான பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் குழந்தைகளை அழைத்து ெகாண்டு ரயில் பாதையை கடப்பது வாடிக்கையாகி விட்டது. கோவை பகுதி ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘ சில இடங்களில் ரயில்வே நடை மேம்பாலம் பயன்படுத்த முடியாத இடங்களில் இருக்கிறது. நடை மேம்பாலத்தின் அருகே புதர் மண்டி கிடப்பதால் ரயில் பாதையில் இறங்கி நடந்து செல்லவேண்டியிருக்கிறது. நடை மேம்பாலத்தில் மின் விளக்கு வசதிகளும் அமைக்கப்படவில்லை. ரயில்வே நிர்வாகத்தினர் நடை மேம்பால வசதிகளை பூர்த்தி செய்து தரவேண்டும் ’’ என்றனர்.
The post ரயில் நிலையங்களில் அடிப்படை வசதி appeared first on Dinakaran.
