×

37 பிரிவு பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு தொடங்கும் பணிகள் மும்முரம்: கல்வி, சுகாதாரம் மேம்படும்; தமிழ்நாட்டில் 4,800 பழங்குடியின கிராமங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 37 பிரிவு பழங்குடியின மக்களுக்கான சமூக பொருளாதார கணக்கெடுப்பு தொடங்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

* சிறப்பு செய்தி
2023-24ம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, அரசு நலத்திட்டங்களின் பலன்கள் பழங்குடியினருக்கு சென்றடைவதை உறுதிப்படுத்தவும், புதிய திட்டங்களை உருவாக்குவதற்கும் தரவுகள் இன்றியமையாததாகும். எனவே, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அடிப்படை கணக்காய்வு மேற்கொள்ளப்படும் எனவும், கோவை மாவட்டத்தில் வசிக்கக்கூடிய இரவலன், காடர், முதுவன், மஹாமலசர் மற்றும் மலசர் ஆகிய பழங்குடியினரின் இடம் பெயர்வினை தவிர்க்கவும், பழமை அழியா வண்ணம் காக்கவும், இனவரவியல் மற்றும் ஒலி/ ஒளி ஆவணமாக பதிவு செய்யும் பணி ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், அதற்கான பணிகளை மேற்கொள்ள கடந்த மாதம் 7ம் தேதி தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது அந்த பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக பொருளாதார கணக்கெடுப்பின் நோக்கம்:
* பழங்குடியின மக்கள் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால், மற்ற இனத்தவருக்கு நிகரான வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களின் பலன்கள் உரிய நபரிடம் சென்றடைவதை உறுதிப்படுத்தவும், தேவையின் அடிப்படையில் புதிய திட்டங்களை உருவாக்குவதற்கும் குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.
* பழங்குடியினர் குடியிருப்புகளின் அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களின் வாழ்வாதார தேவைகளை 100 சதவீதம் பூர்த்தி செய்யவும் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் கணக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
* பழங்குடியினரின் நில உரிமைகள், அவற்றை அவர்கள் பயன்படுத்தும் வழிமுறை குடியிருப்புகளுக்கான அடிப்படை தேவைகளான மின்வசதி, குடிநீர் மற்றும் சாலை வசதிகள், பழங்குடியினருக்கான கல்வி தகுதி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் மூலம் பழங்குடியினர் நலத்திட்டங்களை பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தி பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
* இந்த கணக்கெடுப்பின் மூலமாக தகுதி வாய்ந்த மற்றும் விருப்பமுள்ள நபர்களை தெரிவு செய்து பழங்குடியினருக்கான திறன் வளர் பயிற்சி மற்றும் கடனுதவிகள் மூலம் தொழில் முனைவோராக மாற்றி பலருக்கு வேலைவாய்ப்பை அளித்திடும் வகையில் உயர்வடைய செய்ய முடியும்.
* 2011ம் ஆண்டிற்கு பிறகு பல்வேறு நிலைகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தேடி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பழங்குடியினர்கள் குடிபெயர்ந்து வாழ்ந்து வருவதால், தற்போதைய நிலையில் இந்த கணக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
* கணக்கெடுப்பின் மூலம் தேவைகளை துல்லியமாக கணக்கிட முடியும் என்பதால் மாநில மற்றும் ஒன்றிய அரசின் நலத்திட்ட உதவிகளுடன் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை ஈடுபத்தி சுகாதார, கல்வி, வாழ்வாதாரம் அடிப்பையில் வசதிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு பல்வேறு நோக்கத்துடன் பழங்குடியினரின் நலனுக்காக சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, பழங்குடியின நலத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை 4,800 பழங்குடியின கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். அதன்படி, அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் சமூக பொருளாதார கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பு தரவுகள் நவீன தகவல் தொழில்நுட்பம் மூலம் சேகரிக்கப்பட உள்ளன. இதன் மூலமாக பழங்குடியின குடும்பங்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான வீடு, குடிநீர் வசதி, கழிப்பறை போன்ற அடிப்படை தேவைகள், கல்வி நிலை, சுகாதாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு துல்லியமான தரவுகள் உருவாக்கப்பட உள்ளன.
இதனை அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலமாக பணி மேற்கொள்ள உள்ளோம். அதன்படி, அரசு சாரா தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். இவை முடிந்த உடன் விரைவில் கணக்கெடுப்பு பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கணக்கெடுப்புகளின் தலைப்புகள்
1. தற்போதைய நிலையில் பழங்குடியினர் மக்கள் தொகை
2. நிலவகைபாடு, பயன்பாடு மற்றும் நிலக்குத்தகை குறித்த கணக்கெடுப்பு
3. பழங்குடியினர்களின் நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து குறித்து (சுகாதாரம்) வயது மற்றும் பாலின வாரியான கணக்கெடுப்பு
4. பழங்குடியினர் கல்வி மற்றும் முறைசாரா திறன் வளர்த்தல் குறித்த கணக்கெடுப்பு
5. பழங்குடியினரின் நலத்திட்டங்கள் மற்றும் பயன்கள் குறித்த கணக்கெடுப்பு
6. வாழ்வாதாரம் குறித்த வயது மற்றும் பாலின வாரியான கணக்கெடுப்பு
7. பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு வசதி குறித்த கணக்கெடுப்பு

* தொண்டு நிறுவனங்களின் தேர்வு முறைகள்
சமூக சேவைகள், மக்களுக்கான தொண்டு செய்தல், பழங்குடியினர் தொடர்பான வேலைகள் மற்றும் திட்டமிடுதலில் என்ன செய்துள்ளனர் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டு அதற்கேற்ப தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

* 3 மண்டலமாக பிரிக்கப்படுதல்
சமூக பொருளாதார கணக்கெடுக்கும் பணிக்காக தமிழகம் முழுவதும் மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்கள், மலை அடிவாரம் மற்றும் சமவெளி பகுதி மாவட்டங்கள் (அ) கடற்கரையோர மாவட்டங்கள் என கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

* 2011ம் ஆண்டு 8.41 லட்சம் பேர்
தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது, புதிதாக பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் இனத்தவர்களை சேர்த்து மொத்தமாக 37 உட்பிரிவுகளை சார்ந்த பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 8,41,558 பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இது மாநிலத்தை பொறுத்தவரை மக்கள் தொகையில் 1.17 சதவீதமாகும். ஆனால், இந்த கணக்கெடுப்பு சாதி மற்றும் மத வாரியாக எடுக்கப்பட்டதால், இதனை கொண்டு பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள், பொருளாதார சமூக மற்றும் கல்வி நிலைகளை கணக்கிடுதல் இயலாதது குறிப்பிடத்தக்கது.

* கணக்கெடுக்கப்படுவோர் பட்டியல்
அடியேன்
அரனடன்
எரவல்லன்
இருளர்
கதர்
கம்மாரா
கணிகரன்
கணியன்
கட்டு நாய்க்கன்
கொச்சுவேலன்
கொண்டா கபஸ்
கொண்டாரெட்டி
கோரகா
கோட்டா
குடியா
குறிச்சன்
குரும்பா
குருமன்ஸ்
மஹாமலசர்
மலை அரையன்
மலை பண்டாரம்
மலை வேடன்
மலைக்குரவன்
மலாசர்
மலையாளிர்
மலைகண்டி
மன்னன்
முதுகர்
முத்துவன்
பல்லேயன்
பள்ளியன்
பள்ளியார்
பணியன்
சோளகர்
தோடா
உரலி
நரிக்குறவர்

The post 37 பிரிவு பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு தொடங்கும் பணிகள் மும்முரம்: கல்வி, சுகாதாரம் மேம்படும்; தமிழ்நாட்டில் 4,800 பழங்குடியின கிராமங்கள் appeared first on Dinakaran.

Tags : Muammuram ,Tamil Nadu ,Thumumuram ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...