சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர், போரூர் ஏரி மற்றும் அசோக் நகர் பகுதிகளில் ரூ.178.91 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு செய்தார். இந்த பணிகள் அனைத்தையும் பருவ மழை தொடங்குவதற்கு முன் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11 மணிக்கு திடீரென, சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சாலையில் ரூ.71.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். இதன் மொத்த நீளம் 2.29 கிலோ மீட்டர். இதில் 1.78 கிலோ மீட்டர் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் முதல்வரிடம் விளக்கி கூறினர்.
பின்னர் போரூர் ஏரியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரி முதல் ராமாபுரம் ஓடை வரை புதிதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போரூர் ஏரியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர் மற்றும் ஐயப்பன்தாங்கல் கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. முதல்வர் கடந்த 4.12.2021 அன்று போரூர் ஏரியின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, வெள்ள பாதிப்புகளை தவிர்க்க பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பருவமழை காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.250 கோடி நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் போரூர் ஏரி பகுதியில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பணிகள் பருவமழை தொடங்குவதற்கு முன் முடிக்க முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோன்று அசோக் நகர் 4வது நிழற்சாலை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இங்கு மழைநீர் வடிகால் அமைப்பதன் மூலம் தேங்கும் மழைநீர் ஜாபர்கான்பேட்டை கால்வாய் மூலம் அடையாறு ஆற்றினை விரைவாக சென்று சேரும். இதன்மூலம், அசோக் நகர் 4வது நிழற்சாலை, 6வது நிழற்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைவெள்ளம் தேங்குவது முற்றிலும் தவிர்க்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
* போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்று கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 12.4.2022 அன்று திறந்து வைக்கப்பட்ட பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அவரை அங்கிருந்த போலீசார் வரவேற்றனர். அப்போது, காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டு, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
The post ஆலந்தூர், போரூர் ஏரி, அசோக் நகர் பகுதிகளில் ரூ.178 கோடி மழைநீர் வடிகால் பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: பருவமழை தொடங்கும் முன்னதாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.
