×

திருப்போரூர் அருகே சுற்றுலாப் பயணிகளுடன் கிராம மக்கள் பொங்கல் விழா

திருப்போரூர்: ஆண்டு தோறும் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் தினத்தன்று தமிழர்கள் பொங்கல் விழாவை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை விழா நடத்தி நேரில் காட்டுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா திருப்போரூரை அடுத்துள்ள நெல்லிக்குப்பம் கிராமத்தில் நேற்று நடந்தது. வெளிநாட்டு பயணிகள் 40 பேர் விழா நடந்த நெல்லிக்குப்பம் கிராமத்திற்கு பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர். தமிழக கலாச்சாரப்படி கிராம எல்லையில் வெளிநாட்டினருக்கு மலர்மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, மேளதாளம் முழங்க, சுற்றுலாத்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கோயில் வளாகத்தில் பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.

செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் வரவேற்றார். எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், ஒன்றிய ஆணையாளர்கள் அரிபாஸ்கர் ராவ், கலைச்செல்வன் ஆகியோர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுடன் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடினர். கரகம், காவடியாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் வெளிநாட்டு பயணிகள் சிலர் கிராமியக் கலைஞர்களுடன் இணைந்து நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர்.

மேலும் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் வெளிநாட்டு பயணிகள் பயணம் செய்து கிராமத்தின் அழகை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டினருக்கு உறியடி, இசை நாற்காலி, வழுக்கு மரம் ஏறுதல், மண் பானை செய்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு சுற்றுலாத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து வெளிநாட்டு சுற்றுலா பணிகளுக்கு தலை வாழை போட்டு சைவ விருந்து உணவு அளிக்கப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பங்கேற்றனர்.

Tags : Pongal ,Thiruporur ,Mamallapuram Tourism Department ,Pongal day ,Tamils ,Nellikuppam village ,
× RELATED வீட்டின் முன்பு திரண்டிருந்த...