×

கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு அனுமதி : அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு!!

அலகாபாத் : ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதி அளித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என தகவல் பரவியது. இதனை தொடர்ந்து மசூதியில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தவும், ஆகஸ்டு 4ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

மேலும், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.அதனால், அந்த பகுதியை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் அகழாய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 24-ந்தேதி தொல்லியல்துறை ஆய்வை தொடங்கியது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அகழாய்வுக்கு தடைவிதித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுக கேட்டுக்கொண்டது.

இதைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அகழாய்வுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் ஆகஸ்ட் 3-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம்,”கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதா என்பதை அறிய ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்குகிறோம். மேலும் மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பு மனுவை தள்ளுபடி செய்கிறோம்,”எனத் தெரிவித்தது.

The post கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு அனுமதி : அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Ghanawabi mosque ,Allahabad court ,Allahabad ,Allahabad High Court ,Uttar Pradesh ,Varanasi ,Archaeology Department ,Dinakaran ,
× RELATED மதம் மாற அனைவருக்கும் சுதந்திரம்...