×

ஆடி அம்மனின் பரவச தரிசனம்!

பகவதி அம்மன் – கன்னியாகுமரி

முக்கடலும் சங்கமிக்கும் புண்ணிய பூமி. சக்தி பீடங்களில் முக்கியத் தலம். குமரியாக கோலம் காட்டும் கொள்ளை அழகை காண மாதவம் செய்திருக்க வேண்டும். இக்கோயிலில் கன்யா பூஜை செய்ய மழலை பாக்கியம் கிட்டுவது உறுதி. குமரி பகவதிக்கு தோழிகள் இருவர். ஒருத்தி கோயிலின் வடக்கில் தியாக சுந்தரியாகவும், மற்றவள் வடமேற்கில் பாலசுந்தரியாகவும் வீற்றிருக்கிறார்கள். பகவதி வலக்கையில் ருத்ராட்ச மாலையுடனும், இடது கையை தொடைமீது வைத்து நின்றவாறு தவக்கோலத்தில் அருள்கிறாள்.

தலை கிரீடத்தில் பிறை சந்திரனும், மூக்கில் வைரமூக்குத்தியும் மின்ன பேரழகோடு பொலிகிறாள். மகிமைமிக்க தீர்த்தக் கட்டம் என்று ராமாயணமும், மகாபாரதமும் கன்னியாகுமரியை வியந்து பேசுகிறது. ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு கன்னியாகுமரியை வணங்கிச் சென்றார். பகன், முகன் எனும் அசுரர்களை அழித்த காளி கொல்கத்தாவிலும், கன்னியாகுமரியிலும் நிலைபெற்று பாரதத்தின் இரு எல்லைகளையும் காப்பதாக ஒரு ஐதீகம் உண்டு.

உளுந்தாண்டார்கோயில் துர்க்கை

இலுப்பை காடான இத்தலத்தில் சேரன் செங்கூட்டுவன் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்கள் இந்த துர்க்கையை பிரதிஷ்டை செய்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கோயிலின் வலப்புறத்தில் யாக மண்டபத்தைக் காணலாம். இங்குதான் சதுரக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அஷ்டதசபுஜ துர்க்கையாக அழகோடும் கம்பீரத்தோடும் காட்சி தருகிறாள்.

அகத்தியர் வணங்கிய அன்னை இவள். ஞாயிற்றுக் கிழமை நாலரை மணிமுதல் ஆறு மணிவரையிலான ராகுகால நேரத்தில் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. தோல்வியில் துவண்டோரை தூக்கி நிறுத்தும் தயாபரி. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

தாயமங்கலம் – முத்துமாரி

முத்துச் செட்டியாருக்கு மழலைச் செல்வம் தவிர மற்ற எல்லா செல்வங்களும் இருந்தன. மதுரை மீனாட்சியிடம் வேண்டிய வண்ணம் இருப்பார். அப்படி மதுரையிலிருந்து வரும்போது சின்னக் கண்ணணூர் காட்டுப் பகுதியை கடக்கும்போது மூன்று வயது சிறுமியின் அழுகுரல் கேட்டது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. குழந்தையை தூக்கிக் கொண்டார். இது மீனாட்சி பிரசாதம் என்று நடக்கத் தொடங்கினார்.

கோடையின் வெம்மை தொண்டையின் தாகத்தை கூட்டியது. ஓரிடத்தில் நின்று ஊருணியில் நீர் அருந்தி விட்டு திரும்பிப் பார்த்தார். குழந்தையை காணவில்லை. அதிர்ந்தார். சோகத்தோடு வீடு வந்து சேர்ந்தார். அன்றிரவு கனவில் குழந்தை தோன்றினாள். தான் கத்தாழை காட்டிற்குள் தங்கியிருப்பதாகவும், தன்னைப்போன்றே உருவம் செய்து வழிபடுமாறு கூறியது. மறுநாள் ஊர்ப் பெரியவர்களோடு சென்றபோது சிறுமியின் காலடித் தடம் தெரிந்தன. தடம் காட்டும் பாதையில் சென்றவர்கள் ஓரிடத்தில் சென்று அமர்ந்தார்கள். அங்கிருந்த மண்ணை குழைத்து மாரியம்மனை வடித்தார்கள்.

முத்துச் செட்டியாரின் கனவில் வந்து கூறியதால் முத்துமாரி என்றழைத்தார்கள். இந்த தாயமங்கலத்து முத்துமாரி ராமநாதபுரத்து மக்களின் கண்கண்ட தெய்வமாக மாறினாள். குழந்தைப் பேறுக்காக இங்கு குவிவது சகஜமானது. மதுரையிலிருந்து மானாமதுரை வழியாகவும், மதுரையிலிருந்து சிவகங்கை சென்றும் தாயன்மங்கலத்தை அடையலாம்.

குன்றத்தூர் கல்யாணதேவி காத்யாயனி

தெய்வத் திருமுறைகள் பாடி சைவத்தை தழைத்தோங்கச் செய்த பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழாரின் இல்லத்திற்கு நேர் எதிரில்தான் இந்த காத்யாயனி தேவியின் ஆலயம் உள்ளது. இதனாலேயே இத்தலத்தை திருமுறைக்காடு என்கிறார்கள். பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் திருமணத்திற்கு முன்பு தடைகள் ஏற்பட்ட போது காத்யாயன மகரிஷியை அணுகி வழிகேட்டார்கள். அப்போதுதான் காத்யாயனி தேவியையும், மந்திரத்தையும் உருவாக்கினார்.

மந்திரத்தை ஜபித்தவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடியது என்கிறது, புராணம். அதனாலேயே இவளை கல்யாணதேவி என்கிறார்கள். இக்கோயிலில் உள்ள மூன்று கிளை வேம்பின் கீழுள்ள நாகராஜரை தரிசித்து கருவறையில் அருளும் அன்னையை தரிசிக்க வேண்டியது நிறைவேறும். கோயிலின் சக்தி தீர்த்தத்தின் புனித நீரை தெளித்துக் கொண்டு கரையேறலாம். குன்றத்தூர் முருகன் மலைக்கோயிலிலிருந்து திருநீர்மலைக்குப் பிரியும் தெருவில் திருமுறைக்காடு தேவி காத்யாயனி தேவியின் கோயில் உள்ளது.

கீவளூர் அஞ்சுவட்டத்தம்மன்

இறைவனே ஆனாலும் சரிதான், வதம் செய்தால் அதுவும் பாவம்தான். அப்படித்தான் சூரபத்மனை அழித்து வேறொரு உருவில் அவனைப் பெற்றாலும், ஏனோ ஒரு தவிப்பும் அமைதியின்மையும் கந்தனுக்குள் கொதித்தபடி இருந்தது. கீவளூர் எனும் இத்தலத்தைச் சுற்றிலுமுள்ள ஐந்து தலங்களிலும் பஞ்சலிங்க மூர்த்திகளை பூஜித்து விட்டு, இறுதியில் இத்தலத்திலுள்ள கேடிலியப்பரை பூஜிக்கத் தொடங்கினார். அப்போதுதான் பார்வதி அன்னை காளியின் அம்சத்தோடு அஞ்சேல் என்று வானம் முழுவதும் அடைத்துக் கொண்டு ஆசிர்வதித்தாள்.

குழம்பிப் போயிருந்த கந்தனின் நெஞ்சம் அன்னையின் தரிசனத்தில் தெளிந்தது. அன்றுமுதல் இந்த அம்மனை அஞ்சுவட்டத்தம்மன் என்றழைத்தனர். கலங்கி நின்றோரை கரையேற்றும் முக்தி தேவி இவள். நிம்மதி வேண்டும் என்பவர்கள் இத்தல நின்று சென்றாலே போதும். திருவாரூர் – நாகப்பட்டினம் வழியில் 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

துர்க்கை – சீவலப்பேரி

விஷ்ணு, சிவன், நீலா தேவியுடன் சனி பகவான் என்று சகல தெய்வங்களும் அருள்பாலிக்க அதன் மத்தியில் திகழ்ச் சக்கரமாக துர்க்கை விளங்குகிறாள். வீரம் தோய்ந்த மண்ணில் மாபெரும் வீராங்கனையாக துர்க்கை வீற்றிருக்கிறாள். குற்றாலத்தில் திருமாலை குறுக்கி சிவமாக்கிய அகத்தியர் திருமாலை தேடினார். ஆச்சரியமாக சீவலப்பேரியில் துர்க்கையோடு அருள்காட்டும் கோலம் கண்டு வியந்தார். தாங்கள் எப்போதும் இங்கமர்ந்து அருளவேண்டும் என வேண்டிக் கொண்டார்.

பெருமாளின் சுதர்சன சக்ரம் இத்தலத்தின்கண் பாயும் தாமிரபரணியில் மூழ்கி பாவம் தொலைத்து, துர்க்கையையும் தரிசித்து பெரும்பேறு பெற்றது. அதோடு நில்லாது அஸ்வமேத யாகத்தையே நடத்தியது. ஈசன் உமையோடும், பெருமாள் லட்சுமியோடும் காட்சியளித்தனர். திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு கட்டி பூஜை செய்து பரிகாரம் மேற்கொள்கிறார்கள். நவராத்திரி எட்டாம் நாளன்று துர்க்காஷ்டமியன்று மகாசண்டியாகம் நடக்கிறது. நெல்லையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

காவிரி அம்மன் – திருச்சி

காவிரி அன்னைக்கு தமிழகத்தில் சில இடங்களில்தான் கோயில்கள் உள்ளன. அம்மனை போற்றும் ஆடி மாதத்தில் காவிரி அன்னையும் வணங்கப்படுகிறாள். திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆழ்குழாய் கிணறோ அல்லது சாதாரண கிணறோ தோண்டும் முன்பு இவளை வணங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது. கங்கைக்கு இணையான நதிகளில் இதுவும் ஒன்று. காவிரியை உபயநாச்சியாராகவும் சொல்வர். இதனால்தான் ஆடிப் பெருக்கு விழாவின்போது ரங்கநாதர், ஸ்ரீரங்கம் காவிரியின் தென்கரைக்கு வந்து அன்று மாலைவரை பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். இந்த காவிரி அம்மனின் ஆலயம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் காளியம்மன் கோயில் வீதியில் தனிக் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

பச்சையம்மன் சென்னை-திருமுல்லைவாயல்

உமை அன்னை ஈசனின் ஒருபாகமாக ஆகிவிடத் துடித்தாள். பூலோகத்தை நோக்கி வந்தாள். பச்சை மயமாக இருந்த பூமியின் நிறத்திலேயே தன்னையும் மாற்றிக் கொண்டாள். சப்தரிஷிகளும் அம்மையுடன் வந்தனர். வீரலட்சுமியும், சுந்தர லட்சுமியும் அம்மனுக்கு உதவியாக வந்தனர். வீரமாபுரி எனும் நகரத்தை அடைந்தார்கள். சூரகோமன் என்பவன் அப்பகுதியை ஆண்டான். முதலில் அவனின் வீரர்கள் இப்பேற்பட்ட அழகியை சூரகோமனுக்கு கொண்டு கொடுத்தால் என்ன என நினைத்தான். அம்பிகையோ நான் காசிக்கும், முல்லைவனத்திலுள்ள மன்னாதீஸ்வரரையும் வணங்கச் செல்கிறேன் வழிவிடு என்றாள். சூரகோமனும் இவளின் உருவத்தை கேள்விப்பட்டு அருகே வந்தான்.

அதற்குள் அன்னை அனலாகிச் சிவந்தாள். அத்துமீறிய அரக்கர்களை காளியாக மாறி வதைத்தாள். பிறகு முல்லைவனத்து ஈசனான மாசிலாமணீஸ்வரரை பூஜித்து அத்தலத்தின் அருகேயே கோயில் கொண்டாள். இன்றும் இந்த அன்னை பச்சை நிற மேனியளாகவே ஜொலிக்கிறாள். பேரழகும், கம்பீரமும் பொங்க அமர்ந்திருக்கிறாள். பச்சையம்மா…. என்று அவளின் திக்கு நோக்கி கூவினால் போதும். ஓடி வந்து துயர் துடைப்பாள். வேலையா… வியாபாரமா…. வெறுத்துப் போன வாழ்க்கையா…. எதுவாக இருந்தாளும் இவள் பாதம் பணிந்தோரை பன்மடங்கு உயர்த்துகிறாள். சென்னை – திருவள்ளூர் பாதையில் அம்பத்தூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தொகுப்பு: கண்ணன்

The post ஆடி அம்மனின் பரவச தரிசனம்! appeared first on Dinakaran.

Tags : Adi Amman ,Amman ,Kanyakumari ,Shakti Peethas ,Golam ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்