×

ஆளவந்தார் வைணவத்தை ஆளவந்தார்!

ஆளவந்தார் அவதார தினம் 1.8.2023

வைணவ ஆசாரியனாகிய ஆளவந்தார், பிரபந்தத்தை மீட்டெடுத்த நாதமுனிகளின் பேரனாக ஈஸ்வரமுனிக்கு மகனாக, வீரநாராயண புரத்தில் கி.பி.912-ஆம் ஆண்டு ஆடிமாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பிகளால் யமுனைத்துறைவன் என இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது. இவருக்கு பெரிய முதலியார், பரமாச்சாரியர், வாதிமதேப ஸிம்ஹேந்திரர் என்ற திருநாமங்களும் உண்டு. இவர் மஹாபாஷ்யபட்டரிடம் தொடக்க கல்வியைப் பயின்றார்.

அந்த சமயத்தில், ராஜ புரோஹிதரான ஆக்கியாழ்வான், அவனுடைய பிரதிநிதிகளை அனுப்பி வைத்து, அவன் தலைமை புரோஹிதராக இருப்பதால் அனைத்து புரோஹிதர்களும் அவனுக்கு வரி கட்டுமாறு அல்லது வாதத்துக்கு வந்து தன்னை ஜெயிக்குமாறு கூறினான். இதைக் கேட்டவுடன் மஹாபாஷ்யபட்டர் வருத்தப்பட, யமுனைத்துறைவர் இந்த பிரச்னையை தாம் பார்த்துக்கொள்வதாகக் கூறினார். மஹாபாஷ்ய பட்டரோ சிறுவனான உன்னால் பெரும் வித்வானான ஆக்கியாழ்வானை எப்படி வெல்ல முடியும் என்று பரிதவித்தார். பெரிய மரமாக இருந்தாலும் சிறிய வாள் அறுத்துவிடாதா? அடுத்து ஆணவம் கொண்ட ஆக்கியாழ்வானை ஆணவமே அழிக்கும்; அதில் தான் ஒரு கருவி” என்றார்.

அரண்மனையிலிருந்து வந்தவர்களிடம் யமுனைத்துறைவர், “அல்பமான விளம்பரத்தை விரும்பும் கவிஞனை அழித்துவிடுவேன்” என்ற ஒரு ஸ்லோகத்தை அந்த பிரதிநிதிகளிடம் கொடுத்து அனுப்பினார். இதைப் பார்த்த ஆக்கியாழ்வான் மிகவும் கோபமடைந்து, அவனது வீரர்களை அழைத்து, யமுனைத்துறைவரை ராஜாவின் தர்பாருக்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டான். யமுனைத் துறைவர் அந்த வீரர்களிடம், “நானும் வித்வான் தானே… எப்படி நடந்து வருவது.? பல்லக்கு அனுப்பி தக்க மரியாதையுடன் அழைத்தால் தான் வருவேன்” என்று கூறினார். இதைக் கேட்ட ராஜா ஒரு பல்லக்கை அனுப்ப, யமுனைத்துறைவரும் ராஜ தர்பாருக்கு வந்தார். வாதம் தொடங்குவதற்கு முன், யமுனைத்துறைவரின் மலர்ந்த முகம் கண்டு, இந்த சிறுவன்தான் வெற்றிபெறுவார் என்று உறுதியாக ராஜாவிடம் கூறினாள், ராணி.

“இல்லை ராணி, அவன் சிறுவன். பச்சிளம் பாலகன். இப்போதுதான் பாடம் படித்து வருகிறான். எப்படி ஜெயிக்கமுடியும்?” என ராஜா சொல்ல, வாக்குவாதம் வளர்ந்தது. கடைசியில் ராணி, “அப்படி அவர் தோற்றால், நான் ராணியல்ல. ராஜாவின் சேவகியாக இருப்பேன். சரி. ஜெயித்தால் என்ன செய்வீர்கள்?”. என்று பதிலுக்கு கேட்க, ராஜாவும், “பாதி ராஜ்யத்தை யமுனைத்துறைவருக்குத் தருவதாகக் கூறினார்.

ஆக்கியாழ்வான், யமுனைத்துறைவர் சிறுவன்தானே என்று நினைத்து “முதலில் நீ கேள்விகளை கேள்” என்றார். யமுனைத்துறைவர் எதைக் கூறினாலும் அதைத் தன்னால் மறுத்துப்பேச முடியும் என்ற நம்பிக்கையுடன் கூறினான். வாதம் தொடங்கியது. யமுனைத் துறைவர் தர்க்க ரீதியிலான மூன்று கேள்விகளை கேட்டார். அதை மறுத்துப் பேசுமாறு கூறினார். இதைக் கேட்ட ஆக்கியாழ்வான் திகைத்தான்.

“இதெல்லாம் கேள்வியா? பைத்தியக் காரன் போல் கேட்கிறாயே” என்றான்.
யமுனைத்துறைவர், “தெரியவில்லை என்று சொல். வேறு பேச்சு வேண்டாம்.”

“உனக்கு தெரியுமா?”

“தெரிந்ததால்தானே கேட்கிறேன்.”.

“அப்படியானால் நீயே விளக்கம் சொல். விளக்கம் தவறாக இருந்தால், மன்னரால் தண்டிக்கப்படுவாய்.”.

யமுனைத்துறைவரோ நிதானமாக அந்த 3 கேள்விகளுக்கும் தர்க்க ரீதியாக மறுத்துப்பேசி பதில் அளித்தார். இந்த இடத்தில் தர்க்கம், (logic) சமயோசிதம் (presence of mind) என்ற இரண்டு விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, பராசர பட்டர் ஆணவம் கொண்டிருந்த ஒரு வித்வானிடம், தன் கையில் மண் எடுத்து, “இதில் எத்தனை மண்? சொல் பார்க்கலாம்” என்றார். வித்வான் திகைக்க, “என்ன யோசனை, பிடி மண் என்று சொல்ல வேண்டியதுதானே” என்று மடக்கினார்.

இந்த யுக்தி சாஸ்திர அடிப்படையில் எதையும் நிரூபிக்கலாம். நிராகரிக் கலாம். ஆக்கியாழ்வான் நிறைய படித்திருந்தும், யுக்தியும் சமோயோஜிதமும் இல்லாததால் தோல்வியடைந்தார். ஆக்கியாழ்வான் யமுனைத்துறைவருடைய உண்மையான திறமையை உணர்ந்தார். யமுனைத்துறைவர் தர்க்க சாஸ்திரத்திலிருந்து சிறப்பாக விளக்கி ஆக்கியாழ்வானை தோற்கடித்தார்.  ராணி மகிழ்ந்து ‘‘எம்மை ஆளவந்தீரோ!’’ என்று கூறி, யமுனைத்துறைவரை “ஆளவந்தார்” என்று அழைத்தார். ஆளவந்தாருக்கும், பாதி ராஜ்யம் கொடுத்தார் ராஜா.

ராஜாவாகி, பலபடியாக ராஜாங்க நிர்வாகங்களைச் செய்துகொண்டிருந்தவரை, மணக்கால் நம்பி திருத்திப்பணி கொண்டார். தூதுவளை கீரையால் அவரிடம் தன்னை அடையாளம் காட்டி, ‘‘உன் முன்னோர்கள் சொத்து தருகிறேன் என்று சொல்லி, திருவரங்கத்திற்கு அழைத்துவந்து, வைணவ ஸம்பிரதாயத்திற்குத் தலைவராக நியமித்தார். அவர் திருவரங்கத்திற்கு எழுந்தருளியவுடன், சந்யாஸம் ஏற்றுக்கொண்டு வைணவ ஸம்பிரதாயத்தை பரப்பத் தொடங்கினார்.

பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், தெய்வவாரி ஆண்டான், வானமாமலை ஆண்டான், ஈஸ்வ ராண்டான், ஜீயராண்டான் ஆளவந்தாராழ்வான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தேவபெருமாள், மாறனேறி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்க பெருமாள் அரையர் (மணக்கால் நம்பியினுடைய சிஷ்யர் மற்றும் ஆளவந்தாருடைய திருக்குமாரர்), திருக்குருகூர் தாஸர், வகுளாபரண ஸோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, கோவிந்ததாசர் (வடமதுரையில் அவதரித்தவர்), நாதமுனிதாசர் (ராஜ புரோஹிதர்), திருவரங்கத்தம்மான் (ராஜ மஹிஷி) எனப் பலர் இவருக்கு சிஷ்யர்களாக ஆனார்கள். சதுஸ்லோகி, ஸ்தோத்திர ரத்னம், சித்தி த்ரயம், ஆகம பிராமாண்யம், கீதார்த்த சங்கிரகம் எனும் பல நூல்களை ஆளவந்தார் அருளிச்செய்தார்.

நிறைவாக, ஸ்ரீராமாநுஜரிடம் சில பணிகளைக் குறிப்பால் உணர்த்தி, அவர் மூலம் வைணவம் இன்னும் பரவும் என்று சொல்லி ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தார். ஆளவந்தாரின் அவதாரத்தை ஒட்டி, பத்து நாட்கள் வைணவக் கோயில்களிலும், வைணவர்கள் இல்லங்களிலும் ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆழ்வார்களின் 4000 பாசுரங்களும் ஓதப்படும். ஆளவந்தாரின் ஸ்லோகங்களும் சேவிக்கப்படும். குறிப்பாக, அவருடைய ஸ்தோத்ர ரத்தினம் தவறாமல் சேவையாகும்.

தொகுப்பு: பாரதிநாதன்

The post ஆளவந்தார் வைணவத்தை ஆளவந்தார்! appeared first on Dinakaran.

Tags : Alavandara Avatar Day ,Alavandara ,Easvaramuni ,Nathamunis ,Prabandham ,Veeranarayana Puram… ,Vainavam ,
× RELATED திருப்பணிக்குப் பொருள் வேண்டி வேலாயுதத்தில் விளம்பரம் செய்த வேலன்!